ஈழத்தமிழர்களைப் பெருமைப்பட வைத்துச் சாதனை படைத்துள்ள கிளிநொச்சி சுபா உமாதேவன்!
யாழ்ப்பாணம் கிளிநொச்சியில் இருந்து தனது இரண்டு வயதில் பெற்றோருடன் குடிபெயர்ந்து சுவிட்சர்லாந்திற்கு வந்த சேர்ந்த சுபா உமாதேவன் (Suba Umadevan) இன்று சுவிட்சர்லாந்தின் பிரபல நிதி நிறுவனமான ஆதா (Aadaa) நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஐந்து மொழிகளில் சரளமாக உரையாற்றுகிறார். பல மில்லியன் பணத்தை நிர்வகிக்கும் ஒரு சர்வதேச நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளராக பணியாற்றுகிறார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் முக்கிய பொறுப்பிலிருந்து சில நாடுகள் மற்றும் போராட்ட இயக்கங்களுடனான பேச்சுவார்த்தையில் இராஜதந்திரியாகக் கலந்து கொள்கிறார்.
இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தது போல் எந்த இனம் பல்கலைக்கழகக் கல்வி மறுக்கப்பட்டு நாடோடியாகப் புறப்பட்டதோ அந்தச் சமூகத்திலிருந்து தோன்றிய சுபா உமாதேவன் தற்போது சுவிட்சர்லாந்தின் புகழ்மிக்க லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
35 வயதான சுபா உமாதேவன், மூன்று ஆண்டுகள் சிறுவர் உரிமைகள் மற்றும் உதவி திட்ட சர்வதேச அமைப்பின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.
ஜெனிவா பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரங்கள் மற்றும் சர்வதேச சட்டம் தொடர்பான சிறப்பு முதுகலை பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.கனடாவின் ஒட்டாவாவில் அமைந்துள்ள சர்வதேச கற்கைகள் மற்றும் நவீன மொழிகள் தொடர்பான பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.
பெண் வர்த்தகர்களுக்கான சர்வதேச அமைப்பின் சட்ட ஆலோசகராக பணியாற்றி வரும் சுபா உமாதேவன், யுனைஸ்கோ அமைப்பு ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் மேற்கொண்டு வரும் சர்வதேச திட்டங்களுக்கு தலைமை தாங்கி வருகிறார்.
தமிழகத்திலிருந்து வெளிவரும் ‘தினத்தந்தி’ பத்திரிகை நேற்று தனது ஞாயிற்றுக்கிழமை இணைப்பிதழான ‘தேவதை’யின் அட்டைப்படக் கட்டுரையுடன் சுபா உமாதேவன் அவர்களின் உயரங்களைப் பேசியதானது, புலம்பெயர் தமிழர்களின் உயர்வுகளுக்கு தமிழகத்திலும் கிடைக்கும் அங்கீகாரமாகும்



