அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவினால் சபாநாயகர் கருஜயசூரியவிடம் சற்று முன்னர் கையளிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களும், அதனைத் தொடர்ந்து நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையும் இந்த அரசாங்கத்தின் தோல்வியைத் தெளிவாக உணர்த்துகின்றன. தாக்குதல்களால் உயிரிழப்புக்கள், சொத்துக்களுக்குச் சேதம் என்பன ஏற்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. சிறுவணிக முயற்சியாளர்கள் தமது வருமானத்தை இழந்தனர். மக்கள் மனங்களில் அச்சம் குடிகொண்டது.
இவற்றுக்கு மேலாக உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் நடைபெற்று 21 நாட்களின் பின்னர் முஸ்லிம் மக்களையும், அவர்களது சொத்துக்களையும் இலக்குவைத்துத் திட்டமிடப்பட்ட முறையில் வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குண்டுத் தாக்குதல்களை அடுத்து உடனடியாக இத்தகைய வன்முறைகள் வெடித்திருப்பின், அத்தருணத்தின் கோபம் உள்ளிட்ட உணர்ச்சிகளின் வெளிப்பாடு என்று அதனை கூறமுடியும். எனினும் சுமார் 20 நாட்களின் பின்னர் தாக்குதல் இடம்பெறுவதென்பது நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதையே வெளிக்காட்டுகின்றது.
பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்கள் திடீரென்று திட்டமிடப்பட்ட தாக்குதலொன்றல்ல. இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்கள் இலங்கைக்கு திரும்பியிருப்பது தொடர்பில் தான் அறிந்திருந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதேபோன்று கடந்த 2014 ஆம் ஆண்டில் சஹ்ரானின் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் இடம்பெற்ற தகராறையடுத்து அப்பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவனல்லை புத்தர்சிலை உடைப்பு விவகாரத்தில் குற்றவாளிகளைக் கைது செய்வதில் அரசியல்வாதிகளால் இடையூறு ஏற்படுத்தப்படுவதாக அமைச்சர் கபீர் காசிம் குறிப்பிட்டிருந்தார். அந்த விவகாரத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு குண்டுத் தாக்குதல்களுடன் நெருங்கிய தொடர்பிருப்பது தற்போது விசாரணைகளில் தெரிய வந்திருக்கிறது. வனாத்தவில்லு பிரதேசத்தில் பெருமளவு ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அங்கு பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றிருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இவையனைத்திற்கும் மேலாக தாக்குதல் குறித்த எச்சரிக்கை அறிவுறுத்தல் வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்களால் பாதுகாப்புப் பிரிவிற்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.
எனவே குண்டுத்தாக்குதல்களைத் முன்கூட்டியே தடுப்பதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் அரசாங்கத்திடம் இருந்தும்கூட, அரசாங்கத்தின் கவனயீனம், அசமந்தப்போக்கு என்பவற்றினால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. ஆகவே தாக்குதலைத் திட்டமிட்ட பயங்கரவாதிகள் குற்றவாளிகள் என்று கருதப்படும் அதேவேளை, தாக்குதல் குறித்து அறிந்திருந்தும் அதனைத் தடுக்காத அரசாங்கமும் குற்றவாளியாகவே கருதப்பட வேண்டும்.
தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டன. சில ஊடகங்களும் இன வன்முறையைத் தூண்டும் வகையிலேயே செயற்பட்டு வந்தன. அரசாங்கம் இவற்றை முறையாகக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் அண்மையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களைத் தடுத்திருக்க முடியும்.
இந்த அரசாங்கம் முழுமையாகத் தோல்வியடைந்திருக்கிறது என்றே கூறவேண்டியிருக்கின்றது. மக்களின் பாதுகாப்புத் தொடர்பில் எவ்வித அக்கறையுமில்லாத இந்த அரசாங்கம் தொடர்ந்தும் பதவியிலிருக்க வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதற்கு மக்கள் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்தைத் பதவியிறக்குதவற்கு பாராளுமன்றத்திற்கு வாய்ப்புள்ளது. அந்தவகையில் இந்த ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்றைய தினம் சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.