மூன்றாவது தடவையாக இலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழம் சைபர் போர்ஸ்!
ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால்-3 எனும் பெயரில் மூன்றாவது தடவையாக 300 இற்கும் மேற்பட்ட இலங்கை இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் (Tamileelam Cyber Force) சைபர் தாக்குதல் தொடுத்துள்ளனர்.
மே-18 தமிழின அழிப்பு பத்தாவது நினைவேந்தல் தினமான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால்-3 எனும் பெயரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கங்கவின் இணையத்தளம், தூதுவராலயங்களின் இணையத்தளங்கள், அரசநிர்வாக இணையங்கள் மற்றும் அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 இற்கும் மேற்பட்ட இணையத்தளங்களை ஊடுருவி அந்தத் தளங்களில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைப் படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையைத் தாம் மறக்க மாட்டோமெனவும் “விழ விழ எழுவோம்… விழ விழ எழுவோம்… ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!” எனும் பாடலும் குறித்த இணையங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, 2018 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இணையத்தளங்களினூடாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களிலிருந்து இலங்கையைப் பாதுகாப்பதற்காக புதிய படையணியொன்றை உருவாக்கியுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ள நிலையிலேயே மேற்படி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.