எங்களைக் கொடூரமாகக் கொலை செய்வதற்காக வாள்களுடன் சிங்களக் காடையர்கள் துரத்தினார்கள்!!
ன்முறையாளர்கள் வாள்கள், கூரிய கத்திகள், இரும்புக்கம்பிகளுடன் எங்களை துரத்தி துரத்தி தாக்கினர். அந்த வன்முறைக் குழுவினரில் இளைஞர்களும் பெளத்த பிக்குகளும் கூட இருந்தனர். எம்மைக் காப்பாற்றுமாறு பொலிஸாருக்கு நாம் தொலைபேசி அழைப்பெடுத்தபோதும் பல சந்தர்ப்பங்களில் அவர்கள் அழைப்புக்கு பதிலளிக்கவே இல்லை. பொலிசார் வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்துவதை விடுத்து எம்மை வீடுகளுக்குள் முடக்கினர் என வடமேல் மாகாணத்தின் முஸ்லிம் கிராமங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கேசரிக்கு தெரிவித்த பாதிக்கப்பட்ட பலரும் கண்ணீர் மல்கி கூறினர்.
அதன் பின்னரே வன்முறையாளர்கள் எமது சொத்துக்களை சூறையாடி தீ வைத்து கொளுத்தினர். இந்த வன்முறைக் குழுவில் எம்முடன் நெருக்கமாக அன்றாட நடவடிக்கைகளில் பழகிய பலரும் இருந்தமைதான் வேதனையளிக்கிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
வன்முறைகளால் அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளடங்கும் ஹெட்டிபொல நகரை மையப்படுத்திய கொட்டம்பிட்டிய மற்றும் மடிகே அனுக்கன ஆகிய முஸ்லிம் கிராமங்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் நேற்றுநேரடியாக சென்று பார்த்தோம். இதன்போதே அப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கேசரிக்கு இவற்றை தெரிவித்தனர்.
மடிகே அனுக்கன பகுதியில் இரு ஜும் ஆ பள்ளிவாசல்கள் உட்பட 3 பள்ளிவாசல்கள், 90 வீடுகள், 3 ஹோட்டல்கள், ஒரு மொத்த விற்பனை வர்த்தக நிலையம், 6 சிறு வர்த்தக நிலையங்கள் வன்முறையாளர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனைவிட பல வாகனங்கள் தீயிட்டும் தாக்கியும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மஸ்ஜிதுல் அப்ரார் ஜும் ஆ பள்ளிவாசலின் தலைவர் மெளலவி எம்.எச்.எம். றிஸ்வி தெரிவித்தார்.
அத்துடன் கொட்டம்பபிட்டிய பகுதியில் இரு ஜும்மா பள்ளிவாசல்களும் 20 வருடமாக இயங்கிவரும் ஜமாலியா அரபுக் கல்லூரியும் வன்முறையாளர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் அப்பகுதியில் சுமார் 50 இற்கும் அதிகமான வீடுகள், வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இதனால் அப்பகுதிகளில் வாழும் மக்கள் இன்னும் அச்சத்துடனேயே நாட்களை கடத்துவதை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக சிறுவர்கள், பெண்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதுடன் சில இடங்களில் இந்த தாக்குதல்களின் அதிர்ச்சியில் இருந்து மீளாத பலரையும் சந்தித்தோம்.
1000 பேரளவில் வந்தார்கள்
இதன்போது ஹெட்டிபொல, கொட்டம்பபிட்டியவிலுள்ள பண்டுவஸ்நுவர மோட்டர்ஸ் மற்றும் ஒயில் மார்ட் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் எம்.சி.அப்துல் பாரி. வன்முறைகளின் கொடூரத்தையும் தமது சொத்துகளுக்கு இழைக்கப்பட்ட சேதங்கள் பற்றியும் இவ்வாறு கூறினார்.
” எமது கடைகளும் வீடும் தாக்கி எரிக்கப்பட்டன. பொலிசார் எம்மை விரட்டிவிட்டு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்த வழியேற்படுத்திக் கொடுத்தார்கள். ஊரடங்குச் சட்டம் எங்களுக்குத்தான் போடப்பட்டது. அவர்களுக்கல்ல. சுமார் 1000 பேரளவில் வந்து தாக்கினார்கள். எமது சொத்துக்கள் தீப்பற்றி எரிந்த போது அதனை பொலிசார் அணைக்கவுமில்லை. எம்மை அணைக்க விடவுமில்லை. இன்று நாம் நடுத் தெருவில் நிற்கிறோம். எனது வர்த்தக நிலையத்தில் இருந்த 50 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் முற்றாக எரிந்துவிட்டன. வீடும் சேதமடைந்துள்ளது” என்றார்.
ஹெட்டிபொலவில் உள்ள மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலும் இதே கும்பலால் திங்கட்கிழமை மாலை தாக்கப்பட்டுள்ளது. ” சிலாபத்தில் பேஸ்புக் பதிவொன்றினால் தொடங்கிய பிரச்சினை இன்று எமது பகுதிக்கு வந்திருக்கிறது. கடந்த 12 மணித்தியாலங்களில் இந்தப் பகுதியில் பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என பள்ளிவாசலின் நிர்வாகிகளில் ஒருவான மொஹமட் சலீம் தெரிவித்தார்.
பெயர் சொல்லி அழைத்தார்கள்
இதேவேளை கொட்டம்பிட்டியவில் வசிக்கும் முஹமட் ஜெளபர் எனும் இரு கண்களினதும் பார்வையை இழந்த கோழிகளை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்கின்ற வியாபாரி இந்த வன்முறைகள் குறித்து பின்வருமாரு விளக்கினார். .
” நாம் இப்படி ஒரு தாக்குதலை கனவிலும் நினைக்கவில்லை. வன்முறையாளர்கள் வீட்டின் உள்ளே வரவில்லை. என்னை வெளியில் வருமாறு அழைத்தார்கள். நான் போகவில்லை. வந்திருந்தால் என்னையும் தாக்கியிருப்பார்கள். கடந்த 20 வருடங்களாக நான் இந்தத் தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறேன். எனக்கு 5 பிள்ளைகள். பார்வை இல்லை என்பதற்காக யாரிடமும் எதிர்பார்க்காது சுயமாக உழைத்து வருகிறேன். எல்லாம் அல்லாஹ்வின் ஏற்பாடு. மீண்டும் அல்லாஹ் எனக்கு பொருளாதார வளத்தை இதை விட இரட்டிப்பாக தருவான் என்ற நம்பிக்கை உண்டு. எனது வேன் மற்றும் லொறி என்பன எரிக்கப்பட்டுள்ளன. வீடும் சேதமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் எனக்கு அறிமுகமானவர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் ”ஜெளபர் வெளியே வா…” என்று பெயர் சொல்லித்தான் அழைத்தார்கள் ” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
ஒரு மணித்தியாலமாக தாக்கினர்
இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் நளீம் என்பவர் தனக்கு நடந்தவற்றை விபரித்ததுடன் அவரது மனைவியும் அது தொடர்பில் கேசரியிடம் விளக்கமளித்தார். பல நூறு சிங்கள இளைஞர்களுக்கு தனது நிறுவனம் ஊடாக தொழில் வாய்ப்பு வழங்கியுள்ள நளீம் குறிப்பிடுகையில்,
” திங்கள் பிற்பகல் 2.30 மணியிருக்கும். நூற்றுக் கணக்கான குண்டர்கள் பஸ்களில் வந்திறங்கினார்கள். நான் வீட்டிலிருந்து காரை வெளியில் கொண்டு போக முயன்றேன். காரைக் கொண்டு செல்ல வேண்டாம் என்றார்கள். நான் காரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டேன். பின்னர் வீட்டின் முன்புறம் வந்து வாகனத்தை உடைத்தார்கள். எமது வீட்டில் 6 முதல் 7 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றில் 3 வாகனங்களுக்கு தீ வைத்தார்கள். மகனின் மோட்டார் சைக்கிளும் தீக்கிரையாகிவிட்டது. இதனால் ஒன்றரைக் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 1 மணித்தியாலம் இப் பகுதியில் நின்று தாக்கினார்கள். அவர்கள் சென்றவுடன் வெளியே வந்து நீரைப் பாய்ச்சி தீயை அணைத்தோம். இல்லாவிட்டால் எல்லா வாகனங்களும் எரிந்து நாசமாகியிருக்கும்.
எனது சமையல் நிலையத்தில் நூற்றுக் கணக்கான சிங்களவர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் சிலரும் சேர்ந்து வந்துதான் எமது இடத்தை தாக்கியுள்ளார்கள். என்னை வெளியில் வருமாறு அழைத்தார்கள். நான் வந்திருந்தால் கொன்றிருப்பார்கள் என்றார்.
உம்மா இது மையத்து வீடா என்று எனது மகள் கேட்கிறாள்
சம்பவத்தின்போது வீட்டினுள் பிள்ளைகளுடன் ஒளிந்திருந்த நளீமின் மனைவியான ஆசிரியை பாத்திமா பர்வீன் தனது அனுபவத்தை கேசரிக்கு விபரித்தார்.
“எமது வீட்டின் முன்பாக ஒரு மீன் தொட்டி உள்ளது. அதனை ஒருவர் உடைக்க முயன்றபோது இன்னொருவர் ” மீன் தொட்டியை உடைக்க வேண்டாம்… மீன்கள் பாவம்” என்று சொன்னார். அதனால் மீன் தொட்டி தப்பிவிட்டது. எமது வீட்டைத் தாக்கும் சத்தம் கேட்டதும் நாம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு மூலையில் இருந்து எல்லோரும் அழுதோம். பிள்ளைகள் மிகவும் பயந்து போயுள்ளார்கள். இச் சம்பவத்தின் பிறகு சாப்பிடுகிறார்கள் இல்லை. எமது தூக்கம் தொலைந்துவிட்டது. பிள்ளைகள் தூக்கத்தில் வீறிட்டு அழுகிறார்கள். உம்மா இது மையத்து வீடா என்று எனது மகள் கேட்கிறாள். ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலை அறிந்து நாங்களும் கவலைப்பட்டோம். கண்ணீர் வடித்தோம். நாமும் அந்த தீவிரவாத கூட்டத்திற்கு எதிரானவர்கள்தான். அப்பாவி மக்களான எங்களை இவர்கள் ஏன் தாக்குகிறார்கள்? எனக் கேட்கிறார்.
இதேவேளை வன்முறைக் கும்பலின் தாக்குதல்களில் தீயிட்டு கொழுத்தப்பட்ட ஒரே ஒரு அரபுக் கல்லூரியான ஜமாலியா அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் நி ஃமதுல்லாஹ் (நூரி) இவ்வாறு கூறினார்.
ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பிறகு 23 ஆம் திகதி நாம் மத்ரஸாவுக்கு விடுமுறை கொடுத்து மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பிவிட்டோம். இதன் பின்னர் எமது கல்லூரியை 4 தடவைகள் பொலிசாரும் இராணுவத்தினரும் வந்து சோதனையிட்டார்கள். இறுதியாக 5ஆவது தடவை நூற்றுக் கணக்கானோர் வந்து எமது கல்லூரியை சோதனையிட்டார்கள். இதன் பின்னர்தான் வந்து எமது கல்லூரியைத் தாக்கினார்கள். எமது கட்டிடம் உடைந்தமை பற்றிக் கவலையில்லை. ஆனால் குர்ஆன்களையும் புத்தகங்களையும் எரித்துவிட்டார்கள். இந்த மத்ரஸா கடந்த 20 வருடங்களாக இப் பகுதியில் இயங்கி வருகிறது. இதற்கு உதவி செய்துவரும் இக்கிராம மக்கள் கூட இன்று இத்தாக்குதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டார்கள் என்றார்.
இந் நிலையில் அதிக சேதங்களை சந்தித்த மடிக்கே அனுக்கன பகுதி சார்பில் அந்த ஊரின் ஜும் ஆ பள்ளிவாசலான மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசலின் இமாமாக கடமையாற்றும் மெளலவி மொஹம்மட் சப்வான் கேசரிக்கு விளக்கமளித்தார்.
வாள்களுடன் துரத்தினார்கள்
’13 ஆம் திகதி பகல் ஹெட்டிபொலவில் தாக்குதல் நடப்பதாக எமக்கு தகவல் கிடைத்தது. எனினும் நகரிலிருந்து 4 கிலோ மீற்றர் உட்புறமாகவுள்ள எமது கிராமத்துக்கு தாக்க வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் எமது எதிர்பார்ப்புகள் தவிடுபொடியாகின. 3.45 மணியளவில் அதிக சத்தத்துடன் 300 பேர் கொண்ட பெருங் கூட்டத்தினர் லொறிகள் வேன்கள் மோட்டார் சைக்கிள்களில் எமது பள்ளியை நோக்கி வந்தார்கள். பள்ளியைத் தாக்க வந்தவர்கள் எம்மையும் வாளால் வெட்டத் துரத்தினார்கள். நாங்கள் பின்வழியால் ஓடி உயிர் தப்பினோம். காட்டுக்குள் அரை மணி நேரம் ஒளிந்திருந்தோம். பெண்களுடனும் குழந்தைகளுடனும் காடுகளுக்குள் ஒளிந்திருந்தோம். அங்கிருந்து எம்மைக் காப்பாற்றுமாறு பொலிசாருக்கும் சி.ஐ.டி.யினருக்கும் தொலைபேசியில் அழைப்பெடுத்தும் அவர்கள் பதிலளிக்கவில்லை.
பின்னர் தாக்குதல்தாரிகள் அங்கிருந்து விலகிச் செல்கின்ற அதே நேரத்தில்தான் பொலிசாரும் வந்து சேர்ந்தார்கள். பொலிஸ் பாதுகாப்புடனும் துணையுடனும்தான் இவர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்றே நாம் சந்தேகிக்கிறோம்.
தீயில் எரிந்து கொண்டிருந்த பள்ளிவாசலை அணைக்க முற்பட்டபோது அதற்கு பொலிசார் எச்சரிக்கை விடுத்தார்கள். எம்முடன் கடுமையாக நடந்து கொண்டார்கள்.
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் எமது பள்ளிவாசலில் கூட அதனைக் கண்டிக்கும் நிகழ்வையும் இரங்கல் கூட்டத்தையும் நடத்தினோம். நாம் அந்த தீவிரவாத செயலை என்றும் கண்டிக்கிறோம். அதனுடன் எந்தவகையிலும் சம்பந்தப்படாத எம்மை இப்படித் தாக்கிவிட்டார்கள் என்பதை நினைக்கையில் வேதனையாகவுள்ளது என்றார்.
பெளத்த குருமார் இருந்தனர்
இதன்போது கேசரியுடன் கருத்து பரிமாறிய அப்பள்ளிவாசலின் தலைவர் மெளலவி எம்.எச்.எம். றிஸ்வி,
‘ வன்முறையாளர்களின் கூட்டத்தில் பெண்கள், பெளத்த குருமார் இருந்தனர். அவர்களின் கைகளில் கூரிய வாள்கள் , கத்திகள் , இரும்புக் கம்பிகள் இருந்தன. நாம் நல்லிணக்கம் தொடர்பில் மிகத் தாராளமாக செயற்பட்டவர்கள். அது இப்பகுதியில் உள்ள பொலிசார் உட்பட அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கையில் எம்மை இலக்குவைத்ததை எம்மால் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது. ‘ என்றார்.