முள்ளிவாய்க்கால் தினம்வரை யாழ் பல்கலை மாணவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் தொடர்பான முடிவை சட்ட மா அதிபர் திணைக்களம் இந்த வாரத்தில் எடுக்கும் என அரச சட்டவாதி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு அறிவித்தார்.
அதனால் மாணவர்கள் இருவர் சார்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய கட்டளை மீதான சீராய்வு மனு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யும் விண்ணப்பத்தை நிராகரித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய கட்டளை மீது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
சீராய்வு மனுவின் இடைக்கால நிவாரணமாக மாணவர்கள் இருவருக்கும் பிணை வழங்குமாறு கோரப்பட்டது.
இந்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன், சட்டத்தரணிகள் கலாநிதி கு.குருபரன், கே.சுகாஷ், வி.ரிஷிகேசன் உள்ளிட்டோர் முன்னிலையானார்கள்.
சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையானார்.
சீராய்வு மனு இப்போது அவசியமானதா, அதற்கான காரணம் என்ன? என்று மனுதாரர்களின் சட்டத்தரணிகளிடம் மன்று கேள்வி எழுப்பியது.
“மாணவர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்கும் கோரிக்கை அரசியல் ரீதியாக சட்ட மா அதிபரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த விடயம் அரசியல் ரீதியாகவே பார்க்கப்படுகிறது.
அதனால் நீதிமன்றம் ஊடாக மாணவர்கள் இருவரின் விடுதலை தொடர்பில் நாங்கள் அணுகுகின்றோம்” என்று மனுதாரர்களின் சட்டத்தரணிகள் மன்றுரைத்தனர்.
“மாணவர்கள் இருவர் சார்பிலான சட்டத்தரணி என்ற வகையிலேயே சட்ட மா அதிபருக்கு கடிதம் மூலம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக எந்த விண்ணப்பமும் செய்யப்படவில்லை.
சட்ட மா அதிபர் திணைக்களம் நடுநிலையாக நின்று இந்த விடயத்தைக் கையாளும். பெரும்பாலும் இந்த வாரம் இந்த வழக்குத் தொடர்பான முடிவை சட்ட மா திணைக்களம் எடுக்கும்” என்று அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றுரைத்தார்.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மன்று நீதிவான் நீதிமன்றில் மாணவர்கள் இருவருக்கும் எதிரான வழக்கு நாளை மறுதினம் வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
ஆகவே அன்றைய தினம் நீதிவான் நீதிமன்றில் எத்தகைய தீர்மானம் எடுக்கப்படுகிறது என்பதைப் பார்த்து மேல் நீதிமன்றம் இந்தச் சீராய்வு மனுவைத் தொடர்வதா? என்ற முடிவுக்கு வரால். அதனால் வரும் வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும்” என்று சுட்டிக்காட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், அன்றைய தினம் வரை சீராய்வு மனுவை ஒத்திவைத்தார்.