யாழ் போதனா வைத்தியசாலை வரலாறில் விசேட சத்திரசிகிச்சை!! விபத்தில் மூளைச்சாவடைந்தவரின் 2 சிறுநீரகங்கள் வேறு இருவருக்கு பொருத்தப்பட்டது!!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகரித்து வரும் கொரோனாத் தொற்று நோயாளிகளுக்கு மத்தியில் கடந்த-12 ஆம் திகதி ஒரு சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விபத்தொன்றில் மூளை இறந்த நிலையிலிருந்த இளம் நோயாளி ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களும் சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையிலிருந்த இரண்டு இளம் நோயாளிகளுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுப் புத்துயிர் வழங்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சண்முகராஜா ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை(26.08.2021) சற்றுமுன்னர் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மத்தியிலும், மிகவும் வளங்கள் குறைவான நிலையிலும் குறித்த சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், வரலாற்றிலேயே முதற்தடவையாக இவ்வாறானதொரு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, 12 ஆம் திகதி அதிகாலை-02.30 மணி முதல் அன்றைய தினம் பிற்பகல்-04.30 மணி வரை குறித்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்திய நிபுணர்கள் தெரிவித்தனர்.

