பருத்தித்துறை MOH பிரிவில் இரு சாராயக்கடைகளுக்கு சீல்!
ஊழியர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட இரு மதுபான சாலைகள் சுகாதாரத்தரப்பினரால் மூடப்பட்டுள்ளன.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பருத்தித்துறை கிராமக் கோட்டு சந்தியிலுள்ள மதுபான விற்பனை நிலையம் மற்றும் ஆனைவிழுந்தான் மதுபான விற்பனை நிலையம் என்பனவே இன்று பொதுச் சுகாதார பரிசோதகரினால் பதின் நான்கு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஆனைவிழுந்தான் மதுபான விற்பனை நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து அங்கு பணியாற்றியோருக்கு பீசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மதுபான விற்பனை நிலையத்தின் மேலுமொரு பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கிராமக்கோட்டுப் பகுதி மதுபான விற்பனை நிலையத்தில் பணிபுரியும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதுடன் அங்கு பணியாற்றியவர்களது உறவினர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து குறித்த மதுபான விற்பனை நிலையமும் 14 நாட்கள் மூடப்பட்டது.
குறித்த இரு மதுபான சாலைகளிலும் அடையாளம் காணப்பட்டிருந்த தொற்றாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
