Vampan memesபுதினங்களின் சங்கமம்

வன்னி ரீச்சருடையது ருசி இல்லை!! மீசாலை மாஸ்டரின் அது நல்ல ருசி!!

யாழ்ப்பாணத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தேன்.
மீசாலைப் பலாப்பழம் சொல்லப்பட்ட பலாப்பழமென்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஒரு பலாப்பழத்தை வாங்கிக் கொண்டு போனால் பிள்ளைகள் விரும்பிச் சாப்பிடுங்கள்! என்று எண்ணம் ஓடுகிறது.
பலாச் சுளையை உடைக்க உடைக்க உண்பது ஒரு தனிச் சுவை!
கத்திக்குத் தேங்காயெண்ணெய் பூசி, கையுக்கும் தேங்காயெண்ணெய் பூசி ஒரு சத்திரசிகிச்சை நிபுணர் தயாராவது போல தயாராகிப் பலாப்பழம் வெட்டுவது ஒரு கலை!
‘ஒப்பிரேசனுக்கு’ டேற் குறிப்பது வாசனையை வைத்துத்தான் !
வெட்டிச் சுத்தப்படுத்தும் வரை தான் பலாப்பழம் உருப்படியாக இருக்கும்! சுளையாக்கி விட்டாலோ உடனே கபளீகரம் தான் ஒன்றும் மிஞ்சாது!
சில பலாப்பழத்தைச் சாப்பிட்டால் கை வாசம் போகவே பல மணி நேரமாகும்!
அப்படி ஒரு நல்ல பலாப்பழத்தை வாங்குவோமென்று மீசாலையில் பலாப்பழம் விற்கும் ஒரு வீட்டுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்தினேன்!
பலாப்பழங்கள் பெரியதும் சிறியதுமாய் நிறைய முற்றமெங்கும் கிடக்கின்றன.
“அண்ணே! அண்ணே!”
“ஓம் ,ஓம் வாறன்” என்றபடி நடுத்தர வயதான ஒருவர் வருகிறார்.
“அண்ணே, நான் வவுனியா கொண்டு போகக் கூடிய மாதிரி நல்ல பழமொன்று தாங்கோ!”
என்கிறேன்.
“கொஞ்சம் பொறுங்கோ மரத்தில் இறக்கித்தான் தரவேணும்!”
“ஏனண்ணே முத்தத்தில கிடக்கிற பழங்களில ஒன்றைப் பார்த்துத் தரலாமே!” என்றேன்.
“கொஞ்சம் பொறுங்கோ நீங்கள் தூரத்துக்குப் போறியள் நல்ல மாஸ்டர் ஒன்று தாறன்!” என்கிறார்.
“அப்ப முத்தத்தில கிடக்கிற பலாப்பழங்களில மாஸ்டர் இல்லையோ?” என்றுக் கேட்கின்றேன்.
“ஓமண்ணே எல்லாம் ரீச்சர் பழங்கள் தான் கிடக்கு, கொஞ்சம் பொறுங்க மாஸ்டர் ஒன்று தாறன்.”
எனக்குத் தலை சுற்றியது ! ஒன்றுமே புரியவில்லை!
“அண்ணே! அதென்ன மாஸ்டர், ரீச்சர் ?”
ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டேவிட்டேன்.
“ஓ அதுவா! அ…ண்…ணே! சீசன் தொடங்கீற்றுதென்றால் எல்லாரும் பலாப்பழம் கேட்டு மீசாலைக்கு வந்தா எங்கயண்ணே பலாப்பழங் கிடக்கு?”
“அப்ப?” இது நான்!
“கிளிநொச்சி, வட்டக்கச்சிப் பக்கம் இருந்து பழங்களைத் தொகையா வாங்கி வந்து விற்கிறதண்ணே ! அந்தப் பழங்கள் வெம்பிப் பழுக்கிற பச்சைத் தண்ணிப் பழங்கள் !”
“அப்ப மீசாலைப் பழங்கள் விலை கூடவோ?”
“ஓமண்ணே இது.. எங்கடை பழங்களில்லை ! வேறொரு ஆள் விற்கத் தந்த பழங்களண்ணே விலையுங் குறைவு! “
“வன்னிப் பழங்களை ‘ரீச்சர்’ என்றும், மீசாலைப் பழங்களை ‘மாஸ்டர்’ என்றும் சங்கேதமாக் கதைப்பினம் அண்ணே!”
“உங்களால் புதிய விடயம் ஒன்றை அறிந்து கொண்டன் நன்றி அண்ணே!”
என்றேன்.
தொடர்ந்தும் அவர் “நூறு இருநூறு ரூபாவுக்குப் பழம் கேட்டா ரீச்சர் ; ஐந்நூறு அறுநூறென்று வாங்கிற ஆக்களுக்கு மாஸ்டர் !” என்னவும்!
“ரீச்சர்மாரிட்டை நல்லா வாங்கப் போறியளண்ணே!” என்று சிரித்தவாறு பயணத்தைத் தொடர்கிறேன். மாஸ்டர் ஒன்றுடன!
முற்றும்!
தேடலும், எழுத்துருவும் K.KAJARUBAN