மருத்துவச் செய்திகள்

ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுப்பது எப்படி?

ல எளிதான பயிற்சிகள் உங்களை ஆரோக்கியமான உணவை தேர்வு செய்ய உதவும் . அதிகமான உணவு உட்கொள்ளுதல் உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 1.9 பில்லியன் பேர் அதிக எடையுடன் உள்ளனர். மேலும் 1975ஆம் ஆண்டிலிருந்து உலகளவில், அதிக எடை பிரச்சனை மூன்று மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நாம் உண்ணும் உணவு குறித்தான நமது யோசனை, நமது உணவு தேர்வை சரி செய்யும். அதிக எடை பிரச்சனைக்கு அது தீர்வாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.

நீங்கள் உங்கள் உணவை ஆரோக்கியமானதாக தேர்ந்தெடுக்க இதோ நான்கு எளிய வழிமுறைகள்

1. ஆரோக்கியமில்லாத உணவு குறித்து எதிர்மறையாக சிந்தியுங்கள்

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள், தொடர்ந்து ஆறு நொடிகள் உணவை உற்றுப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர் ஆனால் அந்த சமயத்தில் அந்த உணவில் உள்ள எதிர்மறையான விஷயங்கள் குறித்தும் யோசிக்குமாறு கோரப்பட்டனர்.

இது அந்த உணவு ஆரோக்கியமற்றது என்பது மட்டுமல்ல, சுவை அல்லது அதன் தோற்றம் போன்று, அந்த உணவு குறித்து அவர்கள் வெறுக்கும் விஷயம் குறித்தும் யோசிக்குமாறு கோரப்பட்டனர்.

இந்த ஆய்வுக்கு பிறகு, அந்த குறிப்பிட்ட உணவை உண்பதற்கான தங்கள் ஏக்கம் 20 சதவீதம் அளவு குறைந்திருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.

ஆரோக்கியமற்ற உணவின் மீது நமக்குள்ள விருப்பம் குறைந்தாலே நமது உணவுப் பழக்கம் மேம்படும் அது நம் உடல் எடையை பாதுகாக்க உதவும்.

2. உணவு தேர்வின்போது ஆரோக்கியமான உணவு குறித்த நேர்மறையாக சிந்தியுங்கள்

அடுத்தகட்டமாக, எதிர்மறையான எண்ணங்கள் குறித்து யோசிக்கும் நேரத்தின் அளவுக்கு ஆரோக்கியமான உணவின் நேர்மறையான எண்ணங்கள் குறித்தும் யோசிக்க கோரப்பட்டனர்.

இது ஆரோக்கியமான உணவின் மீது அவர்களுக்கு உள்ள விருப்பம் 14 சதவீத அளவு அதிகரிக்க உதவியது.

எனவே உணவு தேர்வின்போது அது குறித்து சிறிது நேரம் நீங்கள் யோசித்தால் நீங்கள் சிறந்த உணவை தேர்ந்தெடுக்க அது வழிவகை செய்யும்.

3. ஆரோக்கியமற்ற உணவை நிராகரிக்க உங்கள் மூளையை பழக்குங்கள்

யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உங்கள் உணவு தேர்வு குறித்து நீங்கள் முன்னரே உங்களை தயார்படுத்திக் கொள்ள முடியுமா என்பது குறித்தும் ஆராய்ச்சி செய்தனர்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள், ஆரோக்கியமற்ற நொருக்கு தீனிகள் ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகள் குறித்து படிக்குமாறு கோரப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு 15 நிமிடங்கள் பயிற்சி வழங்கப்பட்டது. அதில் ஆரோக்கியமற்ற உணவுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து அவர்கள் யோசித்து பார்க்குமாறு கோரப்பட்டனர்.

அந்த பயிற்சியின் ஒரு பகுதியாக அரோக்கியமான உணவுகளின் படங்கள் காட்டப்பட்டன அப்போது அவர்கள் அதனால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் குறித்து யோசிக்க வேண்டும்.

அதன்பின் அவர்கள் கண் முன்னே, ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் ஆரோக்கியமான உணவுகள் இரண்டும் காண்பிக்கப்பட்டன. அதில் 7.6 சதவீத அளவு ஆரோக்கியமான உணவுகளை அவர்கள் தேர்வு செய்தனர்.

4. ஆரோக்கியமான உணவு தேர்வு செய்ய உங்கள் மூளையை முன்னரே பழக்குங்கள்

இது குறித்த சோதனையில், ஆராய்ச்சியாளர்கள், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் ஆரோக்கியமான உணவுகளின் நன்மைகளை தெரிவித்தனர் பின் அதுகுறித்து அவர்கள் நேர்மறையாக சிந்திக்கும்போது அதன் புகைப்படங்களை அவர்கள் காண்பித்தனர்.

இந்த முயற்சி 5.4 சதவீத அளவு அவர்கள் ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுக்க உதவியது.

இது சிறு சிறு மாற்றங்களாக தோன்றலாம் ஆனால் இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் நாள் ஒன்றைக்கு சராசரியாக 107 கலோரிகள் குறைவாக உட்கொண்டனர்.

ஒரு மனிதர் இத்தனை கலோரிகளை குறைக்க குறைந்தது 10 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும்.

அதிக உடல் எடைக்கான சிகிச்சைக்கு சரிசமமாக இந்த சிறியதொரு பயிற்சி உதவியதாக யேல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹெடி கோபர் தெரிவிக்கிறார்.

நீங்கள், நாள் ஒன்றிற்கு ஒரு ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்தாலும் ஆது காலப்போக்கில் பெரும் பயனை தரும் என்கிறார் கோபர்.

வேறு சில உணவுப் பழக்கங்களில் உடல் எடையை குறைக்க முயற்சித்தாலும், மூன்று அல்லது ஐந்து வருடங்களுக்கு அவர்கள் உடல் எடையை மீண்டும் திரும்ப பெறக்கூடும்.

ஆனால் இந்த புதிய வழிமுறை ஒவ்வொரு நாளும் மிதமாக கலோரிகளை குறைத்தாலும் காலப்போக்கில் அது நல்ல பயனை அளிக்கும்.