யாழில் பறிபோன நாடாளுமன்ற ஆசனம்!!
புதிய வாக்காளர் பதிவின் அடிப்படையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இருந்து பறிபோன நாடாளுமன்ற ஆசனம் கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
திருத்தியமைக்கப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுக்கமைய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இருந்து தெரிவாகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதன்படி, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7இல் இருந்து 6ஆக குறைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இருந்து குறைப்பு செய்யப்பட்ட உறுப்புரிமை கம்பஹா தேர்தல் மாவட்டத்திற்கு வழங்கப்படுவதாக தெரித்தார்.
இதையடுத்து கம்பஹா தேர்தல் மாவட்டத்தில் இருந்து தெரிவாகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 18இல் இருந்து 19ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கியதாக நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக இடம்பெயர்ந்த பெருந்தொகையான மக்கள் இன்னும் முழுமையாக மீள்குடியேறாத நிலையில் அப்பிரதேசத்திற்கான வாக்காளர் இடாப்பு புதிப்பிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவில் உள்வாங்கப்பட்டவர்களது விபரங்களின் அடிப்படையில் திருத்தப்பட்ட வாக்காளர் பதிவு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வலிகாமம் வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட சுமார் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையிலேயே யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்கு ஒரு நாடாளுமன்ற ஆசனம் பறிபோயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
