புதினங்களின் சங்கமம்

இலங்கையில் பயணத்தடை தொடரும்!! ஐந்து பேருக்கு ஒரு தொற்றாளர்! நிலைமை மோசம்!

“இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் 5 தொடக்கம் 10 பேருக்கு ஒரு தொற்றாளர் அடையாளம் காணப்படும் நிலைமை காணப்படுகின்றது. அத்துடன் குணமடைந்து வீடு செல்பவர்களின் வீதமும் சரிவடையத் தொடங்கியுள்ளது. இது ஆபத்தானபோக்கு என்பதை மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்.”

– இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் மருத்துவர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் புத்தாண்டு கொத்தணிக்கு முன்னர், அடையாளம் காணப்படும் தொற்றாளர்களில் உயிரிழப்போரின் சதவீதம் 0.4 ஆக இருந்தது. புத்தாண்டுக் கொத்தணி ஆரம்பித்த காலத்தில் இது 0.6 சதவீதமாக இருந்தது. தற்போது நேற்றுமுன்தினம் இது ஒரு சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும், புத்தாண்டுக் கொத்தணிக்கு முன்னர் வரையில் தொற்றுக் குணமடைந்து வீடு செல்வோரின் சதவீதம் 88 ஆகக் காணப்பட்டது. தற்போது 84 சதவீதமாக அது குறைவடைந்துள்ளது. இவை எல்லாம் ஆபத்தான போக்கையே காண்பிக்கின்றன” – என்றார்.

இதே வேளை

“பயணக் கட்டுப்பாடுகளை மக்கள் மீறும் நிலை நீடித்தால் பயணத் தடையையும் நீடிக்க வேண்டிய நிலை ஏற்படும்.”

– இவ்வாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தனிமைப்படுத்தல் சட்டத்தையும், பயணக் கட்டுப்பாட்டு நடைமுறைகளையும் உரிய வகையில் பின்பற்றுமாறு நாட்டு மக்களிடம் மீண்டும் கேட்டுக்கொள்கின்றோம். எனினும், சட்ட திட்டங்களை மீறிச் செயற்படும் சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன.

எனவே, பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் மக்கள் உரிய வகையில் செயற்படுவார்களா என்ற அச்சநிலை உருவாகியுள்ளது. நடைமுறைகளை மக்கள் தொடர்ச்சியாக மீறினால் பயணக் கட்டுப்பாட்டை மேலும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு நீடிக்கவேண்டும் என்ற பரிந்துரை முன்வைக்கப்படும். இதைவிட வேறு வழியில்லை” – என்றார்.