புதினங்களின் சங்கமம்

யாழில் கடவுள்களுக்கு அதிகாலையிலேயே மின்னல் வேகத் திருவிழா!! கோயில் நிர்வாகங்களின் திருவிளையாடல்கள்!!

யாழ் மாவட்டத்தில் சைவ ஆலயங்களுடன் தொடர்புடைய கொரோனா கட்டுப்பாட்டு விதிமீறல்கள் தொடர்ந்து பதிவாகி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எவ்வளவுதான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், அதையும் மீறி இரகசியமாக பல ஆலயங்களில், சமய நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறது.

அண்மை நாட்களில் சைவ குருமார் சிலர் கொரொனா தொற்றிற்குள்ளாகியமையையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆலயங்களில் பக்தர்கள் கூடி வழிபாடுகளில் ஈடுபடுவது, திருவிழா நடத்துவது, அன்னதானம் வழங்குவது தடைசெய்யப்பட்டிருந்தாலும், அவற்றை கைவிட ஆலயங்களும், ஆலய நிர்வாகங்களும் தயாராக இல்லை.

அன்னதான நிகழ்வுகளற்கு ஆலயங்கள் சில அனுமதி கோரி வருவதாகவும், அனுமதி வழங்கப்படாத பட்சத்தில், அனுமதியில்லாமல் பிறிதொரு இடத்தில் அன்னதானம் வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரியொருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

தொடர்ந்தும் விதி மீறும் ஆலயங்கள் மீதே நடவடிக்கையெடுக்கப்பட்டு, அவை செய்திகளாக வருகின்றன. ஆனால் தினமும் பல ஆலயங்களில் விதி மீறல்களை கண்டறிந்து எச்சரித்து வருகிறோம் என தெரிவித்தார்.

தேர் திருவிழாவை நடத்தவும் அனுமதி கோரப்படுவதாக பிறிதொரு சுகாதாரத்துறை அதிகாரி சுட்டிக்காட்டினார்.

அனுமதி வழங்கப்படாத பட்சத்தில் இரகசியமாக யாழ்ப்பாணத்தில் பல ஆலயங்களில் தேர்த்திருவிழா நடந்ததை சுட்டிக்காட்டினார். சில ஆலயங்களில் தேர்த்திருவ்ழா நடந்த தகவல் எமக்கு கிடைத்தாலும், அதற்கான சாட்சியங்களை இல்லாமல் செய்து விடுவதால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமலுள்ளதாக தெரிவித்தார்.

அண்மையில் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகாலையில் இரகசியமாக தேர்த்திருவிழா நடந்தது. அது பற்றிய தகவறிந்து சுகாதாரத்துறையினர் அங்கு சென்ற போதும், தேர்த்திருவிழா நடந்தமைக்கான எந்த தடயத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தேர்த்திருவிழா நடந்தது பற்றி பிரதேச மக்களும் சாட்சியமளிக்க விரும்பவில்லை.

என்ன செய்வதென தெரியாமல் சுகாதாரத்துறையினர் திண்டாடிய போது, ஆலய திருவிழா படங்கள் இணையத்தளமொன்றில் பிரசுரமாகியிருந்தது. இதனடிப்படையில் ஆலய நிர்வாகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதேபோல, கடந்த வாரம், 400 இற்கும் அதிகமானவர்களின் பங்கேற்புடன் யாழில் ஆலயமொன்றின் தேர்த்திருவிழா நடந்தமை பற்றி சுகாதாரத்துறையினர் துருவிதுருவி விசாரித்து வருகிறார்கள்.

அதிகாலை 4 மணிக்கே ஒன்றுகூடிய கிராம மக்கள் 4.30 மணிக்கு தேர் இழுக்க ஆரம்பித்து, 4.45 மணிக்கு இருப்பிடத்திற்கு கொண்டு சென்று விட்டுள்ளனர். அத்துடன், தேர் இழுத்தமைக்கான அனைத்து தடங்களையும் மறைத்துள்ளனர். தேர் இழுத்த தடத்தையும் மண்ணில் அழித்து விட்டு, கலைந்து சென்று விட்டனர்.

தெல்லிப்பழை ஆலயத்தினர் செய்த தவறையும் இவர்கள் செய்யவில்லை. அதாவது, புகைப்படம் எடுத்து தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை.

ஆனால் எப்படியோ தகவறிந்த சுகாதாரத்துறையினர், அது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆலயத்தில் அன்னதானம் வழங்க அனுமதி கோரி, அது நிராகரிக்கப்பட்ட நிலையில், பிறிதொரு பொது இடத்தில் அன்னதானம் இரகசியமாக வழங்கப்படும் நிகழ்வுகள் யாழின் பல பகுதிகளில் நடக்கிறது.

இந்த விதமான சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கைகள் ஒரு சமூகத்தையே அபாயத்தில் தள்ளிவிடுபவை. கிராமங்களை வழிப்படத்த வேண்டிய ஆலய நிர்வாகங்கள், எந்த பொறுப்புணர்வுமின்றி செயற்பட்டு, கிராமங்களை ஆபத்தில் தள்ளிவிடுவது- ஆயிரமாயிரம் வருடங்களாக தமிழ் சமூகம் பேணும் இந்த சமூக நிறுவன கட்டமைப்புக்களின் நோக்கங்களையும் சிதைப்பவை என சுகாதாரத்துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.