முதலிரவு கன்னித் தன்மையைப் பரிசோதித்த கணவனை விவாகரத்து செய்த பெண்
கர்நாடக மாநிலத்தில் திருமணமான சில மணி நேரத்துக்குள் புதுமணப் பெண்ணின் கன்னித் தன்மையை சோதித்த கணவனிடம் இருந்து அந்தப் பெண் விவாகரத்து கோரியுள்ளார்.
வட கர்நாடகத்தைச் சேர்ந்தவர் சரத். எம்.பி.ஏ பட்டதாரியான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு எம்.பி.ஏ பட்டதாரியான ரக்ஸா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேட்ரிமோனி இணையதளம் மூலம் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணமான மூன்றே மாதங்களில் இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்துக்கு வந்துள்ளது.
விசாரணையில் வெளியான தகவல் இதுதான். திருமணத்துக்கு 15 நாட்களுக்கு முன், மணப்பெண் ரக்ஸாவின் தாயார் கேன்சர் நோயால் உயிரிழந்த நிலையில் திருமணத்தின்போது ரக்சா மிகுந்த சோகத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ரக்சாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என சரத் தவறாகக் கருதியது தெரியவந்துள்ளது.
மேலும் திருமணத்தன்று ரக்ஸா வாந்தி எடுத்ததையடுத்து அவரை சரத் மருத்துவமனையில் அனுமதித்தார். அதன்பிறகு நடந்தவை ரக்சாவை அதிர்ச்சிக்குள்ளாக்கின. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கன்னித்தன்மை சோதனையும், கருத்தரிப்பு பரிசோதனைகளுமம் செய்ததாகக் கூறப்படுகிறது.
தனது கணவர் சரத் தான் தன்னை ஏமாற்றி இந்த சோதனைகளுக்கு ஆளாக்கியது ரக்சாவுக்கு தெரியவந்தது. உடனடியாக மருத்துவமனையில் இருந்து வெளியேறிய ரக்சா, தனது சகோதரி வீட்டுக்குச் சென்றார். அங்கேயே தங்கியுள்ள ரக்சா தற்போது விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.