புதினங்களின் சங்கமம்

புதிய திரிபு கொவிட் வைரஸ் குறித்து விசேட வைத்தியர் வௌிப்படுத்திய அதிர்ச்சி தகவல்!

கொவிட் புதிய திரிபுவை எதிர்க்கொள்வதற்கு முகக்கவசம் முறையாக அணிய வேண்டும் என்று ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட வைத்தியர் நிலீகா மலவிகே தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (23) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

தற்போது உலகில் பரவ ஆரம்பித்துள்ள புதிய திரிபு வைரஸ் காற்றுடன் சுற்றாடலில் நீண்ட நேரம் நீடித்திருக்கும் தன்மையை கொண்டுள்ளது.

இதன் காரணமாக முகக்கவசத்தை பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் அணிந்திருப்பது முக்கியமாகும். முகக்கவசத்தை அலுவலகத்திலோ, பொது இடங்களிலோ அணியாதிருந்தால் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாது.

விசேடமாக அலுவலகத்தில் முகக்கவசத்தை அகற்றியிருக்கும் சந்தர்ப்பத்தில் அந்த இடத்திற்கு வரும் ஒருவர் முகக்கவசம் இல்லாதிருந்தால் காற்றில் உள்ள இந்த வைரஸ் அவரை தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.

இளம் சமூகத்தினரை பாதிக்கக்கூடிய நிலை இருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்பொழுது இலங்கையில் புத்தாண்டுக்கு பின்னர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று சுட்டிக்காட்டிய அவர் புதிய திரிபு வைரஸ் நாட்டிற்குள் வந்திருப்பதாகவும் கூறினார்.

இது இதற்கு முன்னர் முதலாவது மற்றும் 2 ஆவது அலை வைரஸ் தொற்றிலும் பார்க்க பரவும் தன்மை அதிகம். முன்னைய வைரஸ் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றுமொருவருக்கு பரவிய போதிலும் தற்போது இந்த வைரஸ் ஒருவர் மூலம் 5 அல்லது 6 பேருக்கு வேகமாக பரவக்கூடிய தன்மை இருப்பதாகவும் கூறினார்.

இந்த வைரஸின் மூலம் பாதிக்கப்படும் இளம் சமூகத்தினருக்கு கடுமையான நோய் இலட்சணங்கள் வெளிப்படுத்துவதாகவும், முன்னைய வைரஸ் தொற்றுக்குள்ளான பெரும்பாலானவருக்கு நோய் அறிகுறிகள் அதிகம் காணப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமூக இடைவெளியை முன்னெடுப்பது மிகவும் முக்கியமானதாகும். முகக்கவசத்தை முறையாக அணிய வேண்டும். அதாவது வீதியில் செல்லும் போது மாத்திரமின்றி அலுவலக உள்ளக பகுதியிலும் இன்னொருவருடன் உரையாடும் போதும் முகக்கவசத்தை முறையாக அணிந்திருப்பது முறையானதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.