கொரோனாவுக்கு யாழில் மேலும் ஒரு மூதாட்டி உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக மேலும் ஒருவர் யாழில் உயிரிழந்துள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் ஆர். கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். நகர், செட்டித் தெருவில் வீட்டில் உயிரிழந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வயோதிப பெண் ஒருவருக்கே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். செட்டித் தெருவில் வசித்து வந்த 81 வயது மூதாட்டி சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது சடலத்தில் இருந்து பெறப்பட்ட மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் ஆர். கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ். ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாழ். சுகாதார அதிகாரி பிரிவில் 11 பேர் உள்ளிட்ட 18 பேருக்கு யாழ். மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் ஆர். கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ். போதனா ஆய்வு கூடத்தில், வட மாகாணத்தில் இருந்து பெறப்பட்டிருந்த 429 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
யாழ். சுகாதார அதிகாரி பிரிவில் – 11 பேர் (உயிரிழந்த நிலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த யாழ். செட்டித்தெரு மூதாட்டி உள்ளடங்கலாக)
பருத்தித்துறை சுகாதார அதிகாரி பிரிவில் – ஒருவர்
இவர்கள் அனைவரும் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த அடிப்படையில் அடையாளங்காணப்பட்டு பரிசோதனைக்னு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் – 03 பேர்
யாழ். போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் – ஒருவர் (நோய் அறிகுறியுடன் வந்தவர்)
இவர்கள் தவிர முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் தலா ஒவ்வொருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் ஆர். கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் யாழ். மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

