புதினங்களின் சங்கமம்

இலங்கையில் கொரோனா மூன்றாவது அலையை விரைவில்!! தயாராகுமாறு எச்சரிக்கை!

தமிழ்-சிங்கள புத்தாண்டு விடுமுறை காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டல்களைப் புறக்கணித்து மக்கள் அதிகளவில் ஒன்றுகூடிவரும் நிலையில் இலங்கை கொரோனா வைரஸ் தொற்று நோயின் மூன்றாம் அலைக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது.

மே மாதம் இலங்கை கொரோனா தொற்று நோயின் மூன்றாவது அலையில் சிக்க நேரிடும் எனவும் பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதும் நாடு முழுவதும் கட்டுப்பாடின்றி பெருமளவு மக்கள் ஒன்றுகூடி வருகின்றனர்.

திருமதி இலங்கை அழகி என்ற நாடகம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் கலப்பட எண்ணெய் விவகாரம் உள்ளிட்டவற்றின் மூலம் அதிகரித்துவரும் கொரோனா அபாயம் குறித்த அச்சம் மறைக்கப்பட்டுள்ளது என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக நாடு இயல்புக்குத் திரும்பிவிட்டதாக மக்கள் கருத ஆரம்பித்துள்ளதாகவும் அவா் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் தொற்று நோய் குறித்த அச்சம் கலந்த எச்சரிக்கையை மீண்டும் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது கடினம் எனவும் அவா் குறிப்பிட்டார்.

கோவிட்19 அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களைக் கூட பின்பற்றாமல் மக்கள் புத்தாண்டு கால பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர். பொதுப் போக்குவரத்துக்கள், பொது நிகழ்வுகள் சீராக இடம்பெறுவதால் நாடு இயல்புக்குத் திரும்பிவிட்டதாக மக்கள் கருதுகின்றனர்.

இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மூன்றாவது அலை நம்மைத் தாக்கும் போது மட்டுமே அதன் தீவிரத்தை அவர்கள் புரிந்துகொள்வார்கள். இது குறித்து நாங்கள் எச்சரிக்கை செய்து வருகிறோம். எனினும் நிலைமை இப்போது கைமீறிவிட்டது. ஆகவே விளைவுகளை நாங்கள் எதிர்கொண்டே ஆக வேண்டும்.

மீண்டும் விரைவில் கொரோனா தொற்று நோயாளர் தொகை அதிகரிக்கலாம். புதிய கொாத்தணிகள் உருவாகலாம். இதனைச் சமாளிக்க அதிகாரிகள் இப்போதே தயாராக வேண்டும். சிகிச்சை மையங்கள், தனிமைப்படுத்தல் மையங்கள் உள்ளிட்டவற்றை இப்போதே தயார் செய்ய வேண்டும் எனவும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய எச்சரித்துள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனைகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டால் மே மாதத்திலிருந்து தொற்றுநோயாளர் தொகை சடுதியாக அதிகரிப்பதை நாங்கள் காண முடியும்.

தமிழ்-சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் ஏற்படப்போகும் விளைவுகளுக்கான பொறுப்பை சுகாதார வழிகாட்டல்களை மீறிய பொதுமக்களும் மக்களைக் கட்டுப்படுத்தத் தவறிய அதிகாரிகளுமே ஏற்க வேண்டும் எனவும் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.

தடுப்பூசி போட்டுக்கொண்டால் 100 வீதம் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என மக்கள் கருதுகிறார்கள். அது தவறானது.

அதிகளவானோருக்கு தடுப்பூசி போட்ட பல நாடுகள் தொற்று நோயின் மூன்றாவது மற்றும் நான்காவது அலையில் தற்போது சிக்கித் திண்டாடி வருகின்றன. அத்துடன், சமூக முடக்கல்களை அறிவித்துள்ளன எனவும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார்.