யாழ்.வர்த்தக நிலையங்களை மீளத் திறக்க இராணுவத்தளபதி விதித்த நிபந்தனை!
“யாழ்ப்பாணத்தில் முடக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களை மீளத் திறப்பதற்கு முன்னர், வர்த்தக நிலையப் பணியாளர்கள் தங்கள் பி.சி.ஆர். அறிக்கையை சுகாதாரத் தரப்பினரிடம் கையளிக்கவேண்டும்.” – இவ்வாறு இராணுவத் தளபதியும் கொரோனா கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் நகர மையப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் 10 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஒவ்வொரு மாவட்டங்களிலும் கொரோனாத் தடுப்புக்காக அந்தந்த மாவட்டச் செயலர்கள் தலைமையில் மாவட்ட கொரோனாத் தடுப்புச் செயலணிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கு அமைவாக கொரோனாத் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்ததையடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தின் நகரத்தில் சில பகுதிகள் 10 நாள்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்தக் கொரோனாத் தாக்கத்தால் வர்த்தகர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, முடக்கப்பட்ட நாட்களுக்குள் வர்த்தகர்கள் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொண்டு அதன் அறிக்கைகளை சுகாதாரப் பிரிவினரிடம் கையளிக்கவேண்டும். அதன் பின்னர் வர்த்தக நிலையங்களை திறக்க முடியும்.
பொதுமக்களும் முடக்கப்பட்ட பகுதிகளுக்குள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். சுகாதார வழிகாட்டல்களை ஒழுங்கான முறையில் அனைத்துத் தரப்பினரும் பின்பற்ற வேண்டும். சுகாதாரப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் படைகளின் சேவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
ஒரு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்தால் அந்த மாவட்டத்தை முடக்குவதா? இல்லையா? என்பது மக்களின் நடத்தைகளில்தான் தங்கியுள்ளது. எனவே, யாழ்ப்பாணம் மக்கள் சுகாதார ஒழுங்கு விதிகளை உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும்” – என்றார்.

