நுாற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களை இலங்கைக்கு நாடுகடத்துகின்றது ஜேர்மன்!! புலம்பெயர் தமிழர்கள் அதிர்ச்சி!!

நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களை கைது செய்து நாடுகடத்த ஜேர்மனிய அதிகாரிகள் எடுத்துவரும் முயற்சி தமிழ் புலம்பெயர்ந்தோர் மத்தியில் கவலையைத் தூண்டியுள்ளது..

ஜேர்மனியில் தஞ்சம் கோரிய 100-க்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகள் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவா்களை எதிர்வரும் 30-ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு ஜேர்மனிய தமிழ் அமைப்புகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் நாளை திங்கட்கிழமையும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

நோர்த்ரெய்ன்-வெஸ்ட்பாலன் (Nordrhein-Westfalen) மற்றும் பேடன்-வூர்ட்டம்பேர்க் (Baden-Württemberg) ஆகிய இடங்களில் அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீடுகளைச் சோதனையிட்ட ஜேர்மனிய அதிகாரிகள், அங்கு விசா இன்றித் தஞ்சம் கோரியிருந்தவர்களை உரிய அனுமதியைப் பெற வருமாறு அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதனை நம்பி பொலிஸார் அழைத்த இடங்களுக்குச் சென்றவர்கள் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த கைத்தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் அவர்கள் உறவினர்கள், நண்பர்களுடன் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏறக்குறைய 31 தமிழர்கள் டஸ்ஸெல்டார்பிலும், 50 பேர் பிராங்பேர்ட்டிலும், 11 பேர் ஸ்டட்கார்ட்டிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

ஜேர்மனிய அதிகாரிகளின் இந்த தீடீர் தேடுதல் மைற்றும் கைது நடவடிக்கைகள் ஜேர்மன் தமிழ் சமூகம் மற்றும் சாவதேச தமிழ் புலம்பெயர்ந்தோர் சமூகத்தினரிடையே அதிர்ச்சியையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

வதிவிட அனுமதியைப் பெறவென அழைக்கப்பட்டவர்கள் கைவிலங்கிடப்பட்டு, பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளைப் போன்று நடத்தப்படுகின்றனர். இலங்கை இராணுவத்தை விட அவர்கள் மோசமாக நடந்து கொள்கிறார்கள் என கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .

இந்நிலையில் புலம்பெயர் ஜேர்மனிய தமிழ் அமைப்புக்களால் இந்த விவகாரம் ஜேர்மன் எம்.பிக்கள் உள்ளிட்ட தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீா்மானத்தை முன்வைத்த முதன்மை நாடுகளில் ஒன்றாக ஜோ்மனி உள்ளது. இவ்வாறான நிலையில் தஞ்சம் கோரியுள்ள தமிழ் அகதிகளை நாடு கடத்த ஜேர்மனிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதை மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.

இது ஜோ்மனிய அரசாங்கத்தின் இரண்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, தமிழர்களை நாடு கடத்தும் ஜோ்மனிய அரசின் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரென் (Büren) மற்றும் போர்ப்ஷைம் (Pforzheim) தடுப்புக்காவல் முகாம்களுக்கு முன்பாக இன்று ஞாயிறு மற்றும் நாளை திங்கட்கிழமை ஆா்ப்பாட்டங்களை நடத்த ஜோ்மன் புலம்பெயர் தமிழர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

error

Enjoy this blog? Please spread the word :)