எமது குடும்பத்துக்குள் குழப்பத்தை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர்! – கோட்டாபய கவலை!
பல்வேறு தரப்பினர்கள் தமது குடும்பத்தில் குழப்பங்களை உருவாக்க முயற்சிக்கின்றனர் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவ்வாறு இந்தக் குடும்பத்துக்குள் யாராலும் குழப்பங்களை ஏற்படுத்திவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களைக் கொண்ட மாகாண சபை மன்றத்துடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மஹிந்த ராஜபக்ச நமக்கு மட்டுமல்ல, முழு ஆசியாவிலும் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவர் என்பதனை அனைவரும் அறிவர். அவருடைய அரசியல் அறிவை யாரும் நெருங்க முடியாது. அத்தகைய தலைவர் ஒருவர் நாட்டை வழிநடத்துவது ஒரு பெரிய பாக்கியம் என்று நான் கருதுகிறேன்.
அதேபோன்று, பஸில் ராஜபக்ச இந்த நாட்டில் ஓர் அரசை உருவாக்கிக் கொடுப்பத்தில் முன்நின்று செயற்பட்டார் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். அத்தகைய இரண்டு தலைவர்களுடன் அரசை முன்னெடுத்துச் செல்வது மிகவும் எளிதானது.
இதேவேளை, நான் வழங்கும் நியமனங்களில் மஹிந்த ராஜபக்ச ஒருபோதும் அழுத்தங்களைக் கொடுத்ததில்லை. அதேபோன்று பஸில் ராஜபக்சவும் அந்த விடயங்களில் தலையிட்டதில்லை.
இவர்களின் ஒத்துழைப்புடன் நாட்டை எந்தவாரு நெருக்கடியும் இல்லாமல் முன்நோக்கிக் கொண்டு செல்வோம் என்று தைரியமாகக் கூறுகின்றேன்” – என்றார்.

