புதினங்களின் சங்கமம்

சிறுவனின் ஒருதலைக்காதலே கிளிநொச்சி இளம் குடும்பஸ்தர் கொலையின் பின்னணி!! அதிர்ச்சித் தகவல்கள்!!

கிளிநொச்சியில் கலாபக் காதலனால் இளம் குடும்பஸ்தர் குத்திக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம்
பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட்டக்கச்சி, கட்சன் வீதியில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கத்திக்குத்தில் படுகாயமடைந்த இளம்
குடும்பஸ்தர், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை
பலனின்றி நேற்று (11) உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான அருளம்பலம்
துஷ்யந்தன் (31) என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் அவருடைய பிறந்த தினம்.
அன்றைய நாளிலேயே இந்த கொடூரம் நடந்தது.

அவரை கத்தியால் குத்திய 17 வயதான இளைஞன் நேற்று இரவு இராமநாதபுரம் பொலிஸ்
நிலையத்தில் சரணடைந்துள்ளார். அந்த 17 வயதான இளைஞனின் ஒரு தலை காதலே கொலையையும்
நடத்தி முடித்துள்ளது. வட்டக்கச்சி, இராமநாதபுரம், கல்லாறு பகுதிகளின் சில பகுதிகளில்
சட்டவிரோத கசிப்பு, கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் தலைவிரித்தாடுகிறது. இந்த
இருண்ட உலகத்திற்குள் ஈர்க்கப்படும் இளைஞர்கள் பலர் சமூக விரோதிகளாக உருவெடுத்து வருவதை
பல தரப்பினரும் நீண்டகாலமாக சுட்டிக்காட்டி வருகின்றனர். எனினும், அந்த பகுதியில்
சட்டவிரோத செயல்கள் இதுவரை ஒழிக்கப்படவில்லை.

கட்சன் வீதி பகுதியிலுள்ள மாற்று திறனாளியொருவர் முச்சக்கர வண்டி செலுத்தி வாழ்க்கையை
நடத்தி வருகிறார். அவரது மகளை, அந்த பகுதியிலுள்ள மாணவன் ஒருவன் ஒருதலையாக
காதலித்துள்ளான். அவன் வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் கல்வி
பயின்றான்.மாற்றுத்திறனாளியான அந்த முச்சக்கரவண்டியின் சாரதியின் குடும்பத்தின் நலன்களை
கவனிப்பதில் உயிரிழந்த துஷ்யந்தனும் ஆர்வம் காட்டி வந்தார்.

அந்த மாணவன் தொடர்பில் கிராமத்தில் தற்போது சில முறைப்பாடுகள் செய்யப்படுகின்றன. மாணவி
வீதியில் சென்றால் தொல்லை கொடுத்து வந்துள்ளான். அவனது தொல்லை பொறுக்க முடியாமல்,
மாணவியின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இதையடுத்து,
மாணவிக்கு தொல்லை கொடுத்த மைனர் குஞ்சை பொலிசார் எச்சரித்து விடுவித்தனர்.

நேற்று முன்தினம் அந்த மாணவி பரீட்சைக்கு தோற்றிவிட்டு தனது இளைய சகோதரனுடன் வீடு
திரும்பிக் கொண்டிருந்த போது, அந்த கலாபக் காதலன் தொல்லை கொடுத்துள்ளான். ஏற்கனவே பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்த ஆத்திரமோ என்னவோ, மாணவியின் சகோதரனையும் தாக்கியுள்ளான்.

இந்த தகவலையறிந்ததும், முச்சக்கர வண்டி சங்கத்திலுள்ள சிலர் சென்று, அந்த கலாபக் காதலனை
பிடித்து, “திருந்தவே மாட்டீர்களாடா?“ என்ற பாணியில் பேசி, இரண்டு தட்டுதட்டியுள்ளனர்.
கலாபக் காதலனுடன் வந்த இன்னொருவனும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கலாபக்காதலன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளான். இதற்குள்,
உயிரிழந்த துஷ்யந்தன், கபாலக்காதலனின் வீட்டிற்கு சென்று பேசியதாக கூறப்படுகிறது.
மாற்றுத்திறனாளியான ஒருவரின் குடும்பத்திற்கு உபத்திரவம் கொடுக்கக்கூடாது, அதற்கேற்ப
பிள்ளைகளை ஒழுங்காக வளருங்கள் என பேசிவிட்டு சென்றதாக உயிரிழந்தவர் தரப்பு கூறுகிறது.

தாக்கப்பட்டதாக கூறி கலாபக்காதலன் செய்த முறைப்பாட்டையடுத்து, இரண்டு தரப்பையும் அழைத்த
பொலிசார் விசாரணை செய்தனர். அங்கு சுமுகமாக பிரச்சனையை முடிக்க இரு தரப்பும் இணக்கம்
தெரிவித்தது. இதையடுத்து மாணவர்களிற்கு அறிவுரை கூறி பொலிசார் அனுப்பி வைத்தனர்.
தாக்கப்பட்டதாக கூறப்பட்டதால், மாணவர்களை வைத்தியசாலைக்கு செல்லுமாறு பொலிசார்
அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும், மாணவர்கள் வைத்தியசாலை செல்லவில்லை. இரண்டு மாணவர்கள், ஒரு மாணவனின் தாயார்
என மூவர், துஷ்யந்தன் வீட்டுக்கு சென்றனர். அவருடன் பேசப்போவதாக வீட்டுக்குள் நுழைந்து
சச்சரவில் ஈடுபட்டனர். இந்த சச்சரவு நடந்த கொண்டிருந்த போது, கலாபக்காதலன் மறைத்து
வைத்திருந்த கத்தியை உருவி துஷ்யந்தனை குத்தினான். அந்த இடத்திலேயே இவர் இரத்த
வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று
உயிரிழந்தார். இன்று (12) காலை மரணவிசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம்
கையளிக்கப்படுகிறது. கொலையாளியான ஒரு தலை காதலன் நேற்று இரவு இராமநாதபுரம் பொலிஸ்
நிலையத்தில் சரணடைந்தான். போதை, தென்னிந்திய திரை கலாச்சாரம், பெற்றோரின் பொறுப்பற்ற
தனங்களினால் மாணவிகள் நிம்மதியாக உலாவ முடியாமல் இருப்பதும், அதை தட்டிக் கேட்பவர்கள்
கொல்லப்படுவதும் நமது சமூகத்தின் பெரும் சீரழிவை எடுத்துக் காட்டுகிறது.

May be an image of 1 person, child and outdoors

இந்த பிஞ்சு முகங்களை ஒருமுறை உற்றுப்பாருங்கள். தமது தந்தைக்கு என்ன நடந்தது என்றுகூட புரிந்துகொள்ளமுடியாத வயது இது.
தம்பி துசியின் கொலைக்கு அந்த இரண்டு சிறுவர்கள்தான் காரணமா? இல்லை. ஒரு சமூதாயமாக எங்களை சுற்றி நடைபெறுகின்ற அநீதிகளை தட்டிக்கேட்க வக்கற்று சுயநலத்தோடு வாழுகின்ற நாங்கள் அனைவரும்தான் காரணமாகும்…
ஓருகாலத்தில் எப்படி இருந்தது எங்கள் ஊர்? மிகச்சிறந்த கல்வியாளர்களையும் விளையாட்டு வீரர்களையும் உருவாக்கி சமூகத்துக்கு சிறந்த பிரஜைகளை உருவாக்கி கொடுத்த மண்ணல்லவா வட்டக்கச்சி. எமது கிராமத்துக்கு ஏனிந்த அவலம்? கஞ்சா ஊர் என்றும் கசிப்பு கிராமம் எற்றும் கண்டவனும் சொல்ல மறுக்க முடியாமல் கூனி குறுகி நிற்கின்றோமே இதற்கு என்ன காரணம்.?
நேற்றோ மூன்று பிள்ளைகள் கோவில் கிணற்றில் மூழ்கிப்போக இன்று இரண்டு பிள்ளைகள் தம் இளம் தந்தையை இழந்து எதிர்காலம் அறியாது தவித்து நிற்கின்றது.. இது நாங்கள் விழித்துக் கொள்ளவேண்டிய தருணம். தம்பி துசியின் மரணம் எமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை மணியாக அமையவேண்டும். இதை இப்படியே விட்டுவிட்டால் இனி எப்பொழுது வேண்டுமானாலும் யார்வீட்டிலும் அடுத்த கொலை நிகழலாம்.
சட்டவிரோத செயற்பாடுகளையும் பொதுவெளி பிரச்சனைகளையும் தட்டிக்கேட்கும் சுபாவம் கொண்டவன் தம்பி துசி. அவனுக்கு நிகழ்ந்த இந்த கொடூர மரணம் என்பது எனைய சமூக செயற்பாட்டாளர்களையும் மெளனிக்க வைக்கும் முயற்சியாகவே பார்க்கவேண்டும்.
ஆபத்தான கட்டத்தில் வந்துநிற்கின்றது எமது அழகிய ஊர். இப்பொழுதுகூட நாம் விழித்துக்கொள்ளவில்லை என்றால் யாரும் கேட்க நாதியற்ற நரக பூமியாக மாறிப்போகும். சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்த இளைஞன் தான் ஒற்றை மனிதனாக தன் தாய் தங்கைகளோடு தன் குடும்பத்தையும் தாங்கி நின்றவன். இன்று அந்த குடும்பத்தின் நிர்க்கதிக்கு ஒரு சமூகமாக நாம் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டியவர்களே. அதை விடுத்து வெறும் இரங்கல் தெரிவிப்பதோடும் துயர்வு பகிர்வதோடும் கடந்து சென்றுவிட போகின்றோமா??? குறிப்பாக வட்டக்கச்சியை சேர்ந்த புலம்பெயர் உறவுகளாவது முன்வந்து அந்த பச்சிளம் பிள்ளைகளிள் எதிர்கால வாழ்வுக்காக உங்களால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும். ஒரு பொறுப்புள்ள சமூகமாக அதனை செய்வீர்களா???
இந்த பிஞ்சுகளின் முகங்களை மறுபடியும் ஒருமுறை உற்று பாருங்கள். கண்மூடி உங்கள் பிள்ளைகளை அந்த பிள்ளைகளின் இடத்தில் வைத்து உருவகித்து பாருங்கள். கல்லான மனமும் கரைந்து கண்ணீர் ஊற்றெடுக்கும்.

May be an image of 1 person and text that says "கண்ணீர் அஞ்சலி... ® அமரர் அருளம்பலம் துஸ்யந்தன் 11.03.2021 இன்று காலமாணர்"