புதினங்களின் சங்கமம்

தன்னை உளவு பார்க்கின்றார்கள்? கொழும்பில் உள்ள கனேடிய துாதுவர் சந்தேகப்படுகின்றார்!!

தான் இரகசியமாக கண்காணிக்கப்படுகிறேனா என இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் தனது ட்விட்டர் செய்தியில் வினவியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் ஊடகங்கள் இல்லாதபோது, ​​தனது தனிப்பட்ட கலந்துரையாடல்களை ஊடகங்கள் எவ்வாறு பெறுவது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பங்களாதேஷ் உயர் ஸ்தானிகரை கனடா உயர் ஸ்தானிகர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அண்மையில் சந்தித்தமை தொடர்பில் இரண்டு பிரதான உள்நாட்டு செய்தித்தாள்களால் செய்தி வெளியிட்டிருந்தன.

மேலும், இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹால்டன் மற்றும் தென் கொரிய தூதுவர் இடையேயான சந்திப்பு குறித்தும் உள்ளூர் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டன.

பங்களாதேஷ் மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளாகும்.

எனினும், இராஜதந்திரிகள் எவரும் கண்காணிக்கப்படவில்லை எனவும், கனடா உயர் ஸ்தானிகர் கண்காணிக்கப்படுகிறார் என்ற செய்திகளையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.