புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவுக்குள் நுழைந்த 1.1 மில்லியன் பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்!

கடந்த ஆறு மாதங்களாக கனடாவுக்குள் உள்நுழைந்த 4.6 மில்லியன் பேரில் 1.1 மில்லியன் மக்களே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கனேடிய சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் எல்லை மூடப்பட்டதிலிருந்து இதுவரை 4.6 மில்லியனுக்கும் அதிகமானவா்கள் கனடாவுக்கு வந்துள்ளனர். எனினும் அவர்களில் கால் பகுதியினருக்கும் குறைவானவர்களே தனிமைப்படுத்தப்பட்டனர். ஏனையோர் அத்தியாவசிய சேவைத் துறையினர் எனக் கருதப்பட்டு தனிமைப்படுத்தல் செயன்முறைக்கு உட்படுத்தப்படவில்லை.

ஒவ்வொரு வாரமும் எல்லைகள் ஊடாக தரை வழியே வருவோர் மற்றும் விமானம் மூலம் கனடாவுக்குள் வருபவர்கள் குறித்த தரவுகளை கனடா எல்லைச் சேவைகள் நிறுவனம் வெளியிடுகிறது.

தற்போது தொற்று நோய் நெருக்கடியை அடுத்து நாட்டிற்குள் நுழையும் பெரும்பாலான மக்கள் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது.

எனினும் லொறி ஓட்டுநர்கள், விமான சேவை நிறுவனங்களைச் சோ்ந்தோர், சுகாதாரப் பணியாளர்கள், பாதுகாப்புத் தரப்பினர், கனடாவில் அன்றாட செயல்பாடுகளைச் செய்ய வேண்டிய எல்லைகளில் வாழும் மக்கள் போன்றோர் அத்தியாவசிய சேவைத் துறையினராகக் கருதப்பட்டு அவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மார்ச் 21 முதல் 4.6 மில்லியன் மக்கள் கனடாவுக்குள் வந்ததாகத் தெரிவித்துள்ள கனடா பொது சுகாதார துறை, இவா்களில் 1.1 மில்லியன் மக்களே தனிமைப்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ளது. 3.5 மில்லியன் பேர் அத்தியாவசிய சேவைத்துறையினராகக் கருதப்பட்டு தனிமைப்படுத்தவுலுக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இதுவரை கனடாவில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோயாளர்களில் 4.4 வீதமானவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.