கொழும்பில் பயங்கரம்!! சூக்கேசில் 26 வயது யுவதியின் முண்டம்!!(Video, Photos)
கொழும்பு, டாம் வீதியில் சூட்கேஸிற்குள் வைக்கப்பட்டிருந்த சடலத்திற்குரியவர், 26 வயதான யுவதியென பொலிசார் சந்தேகிக்கின்றனர். ஹன்வெல்ல பகுதியில் அவர் கொல்லப்பட்டு, சடலம் சூட்கேஸிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
டாம் வீதியில் கருப்பு நிற சூட்கேஸ் ஒன்று நீண்டநேரமாக காணப்பட்டதையடுத்து, நேற்று (1) பிற்பகல் 2.30 மணியளவில் டாம் வீதி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்று பரிசோதித்த பொலிசார், சூட்கேஸிற்குள், கருப்பு நிற பொலித்தீனில் சுற்றப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் இருப்பதை அவதானித்தனர்.

சூட்கேஸிற்குள் சடலத்தின் தலை துண்டிக்கப்பட்டிருந்தது.
அந்த பகுதியிலுள்ள சிசிரிவி கமரா காட்சிகளின் அடிப்படையில் பொலிசார் நடத்திய விசாரணையில், சடலத்தை கொண்டு வந்து வைத்தவர்களையும், சூட்கேஸ் கொண்டுவரப்பட்ட பயணிகள் பேருந்தையும் அடையாளம் கண்டனர்.

இதன்படி, பேருந்து சாரதி, நடத்துனர் அடையாளம் காணப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யுவதியை ஹன்வெல்ல பகுதியில் கொலை செய்து, சூட்கேஸிற்குள் அடைத்து, பேருந்திற்குள் கொண்டு வந்து, வீதியோரம் இறக்கி வைத்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த 3 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந் நிலையிலேயே விடயம் தொடர்பில் டாம் வீதி பொலிஸார் கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரியவுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதனையடுத்து ஸ்தலத்துக்கு சென்ற நீதிவான், சடலத்தை மேற்பார்வை செய்த நிலையில், சடலமாக இருந்த யுவதியின் ஆள் அடையாளத்தை உறுதிப் படுத்த விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிட்டார்.

அத்துடன் அவரது மரணத்துக்கான காரணம், குற்றம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அது தொடர்பிலான முழுமையான விடயங்களை வெளிப்படுத்த பிரேத பரிசோதனை மற்றும் குற்றவியல் விசாரணைக்கும் நீதிவான் உத்தரவிட்டார். இதனையடுத்தே சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.
குறித்த பயணப் பொதியை குறித்த இடத்துக்கு இழுத்து வந்து, அனைவரது கவனமும் வேறு திசைகளில் இருந்த வேளை அதனை கைவிட்டு செல்லும் காட்சி அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியுள்ளது.

இந் நிலையில், அந்த சி.சி.ரி.வி. காட்சிகளை மையப்படுத்தி, குறித்த பையை அங்கு கொண்டு வந்தவர் தொடர்பில் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக டாம் வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக எங்கிருந்து குறித்த சடலம் எடுத்து வரப்பட்டது, குறித்த யுவதி கொலை செய்யப்பட்டாரா, அப்படியானால் எங்கு எப்படி அது நடந்தது, குறித்த பயணப் பையை இழுத்து வந்த நபர் யார், அவருக்கும் சடலமாக மீட்கப்பட்ட யுவதிக்கும் இடையிலான உறவு என்ன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடைகாண இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

இந் நிலையில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்புக்கு பொறுப்பான பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் விஜயஸ்ரீ ஆகியோரின் மேற்பார்வையில், கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சந்ரசேகரவின் ஆலோசனைக்கு அமைய, டாம் வீதி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழி நடத்தலில் குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அசேல உள்ளிட்ட குழுவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சன நடமாட்டம் மிக்க டாம் வீதியில், இவ்வாறு பயணப் பையில் இருந்து சடலம் மீட்கப்பட்டமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

