புதினங்களின் சங்கமம்

வடக்கில் கொரோனா விசுவரூபம்: ஒரே நாளில் 42 பேருக்கு தொற்றுறுதி!

வடக்கை அச்சுறுத்தி வரும் கொரோனாத் தொற்று பரம்பலின் நீட்சியாக தற்போது பருத்தித்துறை கொத்தணி தோற்றம் பெற்றுள்ள நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நடன ஆசிரியையின் மகன் உள்ளிட்ட மூன்று மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் நடன ஆசிரியையாக கடமையாற்றி வரும் ஆசிரியை ஒருவருக்கு கடந்த தினத்தில் திருகோணமலை தொற்றாளர்களுடன் தொடர்புபட்டு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவருடன் தொடர்புடைய அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் அடையாளம் காணப்பட்டு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த நடன ஆசிரியையின் குடும்பத்தினர் மற்றும் அயலில் உள்ள இந்நொரு குடும்பத்தினர் என 12 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் ஆர்.கேதீஸ்வரன் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இதேவேளை இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நடன ஆசிரியையின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் என மூன்று மாணவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடன ஆசிரியையின் மகன் பருத்தித்துறை தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்ற நிலையில் ஆசிரியைக்கு தொற்று உறுதி செய்யப்படும் வரை பாடசாலைக்கு சென்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நடன ஆசிரியை பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயத்திலும் பகுதிநேரமாக நடன வகுப்புகளை நடத்தி வந்திருந்தார். இதையடுத்து குறித்த பாடசாலையில் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தும் செயற்பாடுகளை பருத்தித்துறை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்திருந்தனர்.

தற்போது மூன்று மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் பருத்தித்துறை கொத்தணி விரிவடையும் ஆபத்து காணப்படுவதாக சுகாதாரத் தரப்பினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

ஆகவே, பருத்த்திதுறை வாழ் மக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடித்து நடமாடுவதுடன், அத்தியாவசியமான நடமாட்டங்களை மேற்கொள்வதன் மூலம் தொற்றுப் பரம்பல் மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும் எனவும் சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.