யாழில் டிப்பர் சாரதியின் கொடூரம்!! தெருவில் சென்றவரின் கை சிதைந்தது!! நேரில் கண்டவரின் வாக்குமூலம்!! (Photos)
இன்று வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் கடமை நிறைவுற்றதும் , மல்லாகத்திலிருந்து யாழ்நகர் நோக்கிப் பயணிக்கின்றேன்.
கே. கே. எஸ். வீதியில் வாகனங்கள் பரபரக்கும் மாலைவேளையது! சுன்னாகம் சந்தியில் சமிக்ஞை விளக்கு, பச்சை நிறங்காட்டியதும் விரைகின்றேன்.
சந்தியைத் தாண்டியதும். வீதியோரமாக ஒருவர் கை ஒன்று சிதைவடைந்த நிலையில் நிலத்தில் அமர்ந்தபடி இருக்கிறார். குருதி பெருகுகின்றது. அவரைச் சூழவும் இளையோரும் முதியவர்களுமாய்ச் சனக்கூட்டம்.
அடிபட்டவர் குழறவில்லை! “அடிபட்டவுடன் நோகாது நேரமாகத்தான் நோகும்” என்று கூறுவார்கள் அதுதான் காரணமோ?
அங்கு காற்சட்டைக்குமேல் சாரமணிந் ஒருவர் “ஐயோ” என்று குழறி தன் சாரத்தைக் கழற்றி அந்தக் குருதி பெருகும் கையைச் சுற்றுகிறார்.
அதற்குள் நானுட்படப் பலரும் “அம்புலன்ஸ்” அவசர இலக்கமான 1990ஐ அழைக்கின்றோம். இரண்டு தடவையும் வருவதாகத்தான் சொன்னார்கள் ஆனால் வருவதாகத் தெரியவில்லை! அம்புலன்ஸ் வண்டிகள் முன்னதாகவே வேறு அழைப்பொன்றுக்காக வெளியேறியிருக்க வேண்டும்.
அங்கு நின்ற ஒருவரிடம் சம்பவம் குறித்து விசாரிக்கின்றேன். டிப்பர் ஒன்றினால் மோதப்பட்டதாகவும் அவர் கிழே விழுந்த வேளை கை பின் சில்லினுள் சிக்கிச் சிதைந்ததாகவும் விபத்தை நேரில் பார்த்தவரான அவர் கூறுகிறார்.
சில விநாடிகள் கடந்திருக்கும் 1990க்கு மீண்டும் அழைத்து குருதி விரயமாகிறது விரைவாக அனுப்புங்கள் என்கிறேன். சுன்னாகம் , தெல்லிப்பழை இரண்டிடங்களிலும் அம்புலன்ஸ் வாகனம் தற்பொழுது சேவையிலிருப்பதால் மானிப்பாயிலிருந்து வருவதாகச் சொன்னார்கள்.
அதற்குள் போக்குவரத்துப் பொலிசார் இருவர் அங்கு வந்து வீதி நெருக்கடியைக் குறைக்க எத்தனிக்கிறார்கள்.
அவ்வேளை பரபரப்பாகச் சில இளைஞர்கள் அங்கு மோட்டார்சைக்கிள்களில் வருகின்றார்கள். “மாத்தையா மேயா தமாய் அற டிப்பர்கே டைவர்” என்று கூறி ஒருவரை மோட்டார் சைக்கிளிலிருந்து இறக்குகிறார்கள்.
தனது அலட்சியமான ஓட்டத்தால் மோட்டார் சைக்கிளொன்றை விபத்துக்குள்ளாக்கிய டிப்பர் சாரதி ! மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் கீழே விழுந்தபொழுது டிப்பரின் பின்சில்லில் அகப்பட்டுக் கை சிதைவடைந்ததைக் கூடப் பொருட்படுத்தாமல் நிறுத்தாமல் தப்பியோடிய வேளை துரத்திச் சென்று , மருதனார்மடத்திற்குச் சமீபமாக இடைமறித்துப் பிடித்து வந்து பொலிசாரிடம் ஒப்படைக்கின்றனர் அந்த இளைஞர்கள்!
1990க்கு பலரும் பல தடவை அழைப்பை ஏற்படுத்தியும் வேறு சேவையொன்றில் இருந்தமையால் உரிய நேரத்தில் “அம்புலன்ஸ்” வருகை தராது போக , ஒரு முச்சக்கரவண்டியில் அக்காயமடைந்தவரைத் தெல்லிப்பழை வைத்தியசாலையிலும் அவர்களே சேர்த்தார்கள்!
அநீதி கண்முன் நிகழ்ந்தால் அது கண்டு பொங்கும் “சாணக்கியமான” இவ்விளைஞர்கள் சிலர் போதும் இவ்வுலகைக் காக்க…!
படங்கள்:
1-இளைஞர்கள் சாரதியைக் கொண்டு வந்தவேளை ….
2-காயமடைந்தவர் நிலை….
3-அநாதரவாக நிற்கும் டிப்பரைப் பொலிசார் கைப்பற்றல்…!
——
N.K. Kajarooban




