புதினங்களின் சங்கமம்

யாழ் இந்துக்கல்லுாரிக்கு அருகில் நின்றவன் யார்? தற்போது விளக்கமறியலில்!!

கொழும்பு வெள்ளவத்தை முகவரியில் தேசிய அடையாள அட்டையை வைத்திருந்த்துடன் பொலிஸாரின்
விசாரணையில் மாறுபட்ட தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை
வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு முன்பாக சந்தேகத்துக்கு இடமான மோட்டார் சைக்கிள் ஒன்று
பொலிஸாரால் மீட்கப்பட்டது. அதன் உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்துக்கு வந்து தனது
மோட்டார் சைக்கிள் என உரிமை கோரியுள்ளார்.

அதன்போது இளைஞனின் தேசிய அடையாள அட்டையைப் பார்வையிட்ட பொலிஸார், அதில் வெள்ளவத்தை என
முகவரியிடப்பட்டுள்ளதாக விசாரணை செய்தனர். அதன்போது இளைஞன் மாறுபட்ட தகவல்களை
வழங்கியதால் அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் நேற்று
முற்படுத்தப்பட்டார்.

சந்தேகநபரை பிணையில் விடுவிக்க பொலிஸார் ஆட்சேபனை தெரிவித்தனர். அதனால் சந்தேகநபரை
வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.

“சந்தேகநபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அவர் உயர் கல்வியை கொழும்பில் தொடர்ந்துவிட்டு
தற்போது நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். அவரது மோட்டார் சைக்கிளை நண்பர் ஒருவர்
எடுத்துச் சென்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அண்மையாக விட்டு வடமராட்சிக்கு
பேருந்தில் சென்றுவிட்டார்.

அதன்பின்னரே பொலிஸார் அந்த மோட்டார் சைக்கிளை மீட்டனர். அதனை உரிமை கோரி பெற்றுக்கொள்ள
வந்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்” என்று அவரது சட்டத்தரணி தெரிவித்தார்.

இதே வேளை யாழ் இந்துக்கல்லுாரி உட்பட்ட பிரபல பாடசாலைகள் பொலிஸ் விசேட புலனாய்வுக்குழுவின் கண்காணிப்புக்குக் கீழ் வந்துள்ளதாகவும் அப்பகுதியில் நடமாடும் சந்தேகநபர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பாடசாலைகளின் சுற்றுவட்டாரங்களிலேயே போதைப் பொருள் வியாபாரிகளின் போர்வையில் முஸ்லீம் தீவிரவாதிகள் செயற்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.