புதினங்களின் சங்கமம்

யாழ் சரசாலைக் குருவிக்காடு (சாவகச்சேரியில் இயற்கையின் அழகியல் )!! புகைப்படங்கள்

தென்மராட்சி சாவகச்சேரி பருத்தித்துறை வீதி (B.75) யில் கனகன்புளியடிச் சந்தியில் இருந்து சரசாலையூடாக பயணிக்கையில் சுமார் 4 KM தூரத்தில் வீதியின் இரு மருங்கும் இயற்கையின் எழில் நிறைந்த
சதுப்பு நிலக் காடுகளைக் கண்டு இரசிக்கலாம்.
அண்மைக்காலத்தில் இந்த குருவிக் காட்டுப் பகுதியைத்தரிசிக்க பலர் வந்து செல்கின்றனர். தற்போது ஏற்பட்ட பெருமழை காரணமாக வீதியும் காடுகளும் நீரால் சூழப்பட்டு அழகிய காட்சியாகக் காணப்படுகிறது .அங்கு காணப்படும் முதலைகளைக் காண பலர் இப்பகுதிக்கு செல்வதை அவதானிக்க முடிகிறது.

Image may contain: one or more people, people standing, people walking and outdoor, text that says "Field Visit to Degraded Sarasalai Mangrove Ecosystem on 12 Jan 2019"
மட்டுவில் , சரசாலை , கல்வயல் , மீசாலை , வேம்பிராய் போன்ற அயற் கிராமமங்களில் இருந்து வழிந்தோடி வரும் மழை நீரானது இறுதியில் சரசாலையின் தாழ்வான பகுதியான குருவிக் காட்டுப் பகுதியில் சங்கமிக்கின்றன. எப்போதும் ஈரலிப்பான நன்னீர்ச்சதுப்பு நிலமாகக் காணப்படும் இப்பிரதேசம் (fresh water march) அழகான சதுப்பு நில கண்டற் தாவரங்களை அதிகளவில் கொண்டுள்ளன. குறிப்பாக வெள்ளக்காடாகக் காணப்படும் இப்பகுதியில் அலையாத்தித்தாவரங்கள் (Mangrove,)அதிகளவில் காணப்படுகின்றன. இத்தாவரங்கள் நீருக்கு மேலாகவும் வேர்களைக் கொண்டிருப்பது பார்வைக்கு அழகான காட்சியாகும்.

Image may contain: tree, sky, plant, outdoor and nature
சுமார் 500 கெக்டேயர் பரப்பளவில் காணப்படும் இக்காடுகள் பல்லின உயிரியல் வாழ்வுக்கு அவசியமானதாகும். வருடா வருடம் சுமார் 7000 KM தூரத்தில் இருந்தும் வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருகின்றன. இப்பறவைகள் வரும் காலம் மிகவும் அழகு நிறைந்த இயற்கை சூழலை தரிசிக்க வைக்கின்றன. மேலும் இக் காட்டுப்பகுதியில் மரநாய், நரி, காட்டுப் பூனை , அணில் , போன்ற பிராணிகள் மற்றும் முதலை , நீர்ப்பாம்பு , மீன்கள் .நண்டுகள் என்பனவும் அதிகளவில் காணப்படுகின்றன.

Image may contain: outdoor and nature, text that says "Aerial Drone Images (By Group 1)"
இவ்வாறன பல்லுயிர்த் தொகுதியின் இருப்பிடமாகக் காணப்படும் இக்குருவிக் காட்டுப் பகுதி பாதுகாக்கப்பட வேண்டும். நிலத்தடி நீரைப் பேணுவதிலும் சூழற் சமநிலையை ஏற்படுத்துவதிலும் இக்காடுகள் முக்கிய பங்காற்றுகின்றன .
பறவைகள் சரணாலயமாக விளங்கும் இக்காடுகள் முதலைகளின் பண்ணையாகவும் தற்போது விருத்தி பெற்று வருகின்றது .உயிரிகளின் காப்பிடமாக பாதுகாப்பதோடு அவற்றை அழகியல் நிறைந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இப்பகுதிகளில் கழிவுகள் கொட்டப் படுவது தடை செய்யப்படுவதோடு மேலும் கண்டற் தாவரங்கள் மீள்வனமாக்கப்படுவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
மாணவர்களை இப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்று களக் கற்கைகளில் அதிகம் ஈடுபடுத்துவது சுற்றாடல் , பாதுகாப்பு விழிப்புணர்வை தூண்டுவதோடு புவியியல் , விஞ்ஞான ரீதியான அறிவியல் விருத்திக்கும் அடித்தளமாக அமையும்.
(நிழற்படங்கள் இணையத்தில் பெறப்பட்டன. நன்றிகள்.)
அன்புடன்
அருந்தவராஜா.க
30.12.2020