புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்து கலியாண வீடும் பலகாரத் தட்டும்!!

அயலுக்க ஒரு கலியாணத்துக்கு போக முடியாம போனா, அண்டைக்கு பின்னேரக் கைக்கு மாப்பிளை-பொம்பிளையை ஒரு எட்டு எட்டிப் பாத்திட்டு வர பிளான் பண்ணுறது வழக்கம். அப்பிடிப் பின்னேரம் போறதெண்டா பொம்பிளை வீட்டைதான் போறதும் முறை. ஏனெண்டா, அங்கதான் மாப்பிளை-பொம்பிளை ‘கால் மாறு’க்கு வந்து நிப்பினை. எங்களுக்கும் கண்டிட்டு வர வசதியா இருக்கும்.

அப்பிடிப் போனா, வாசலுக்க நிறைகுட மேசையும், கருகின திரியோட எடுத்துமுடிச்ச ஆலாத்தி ட்ரே யும் மங்களகரமா இருக்கும்.

வாசல் கதவோட முதல் நாள் ராத்திரி முழிச்சிருந்து அட்டம்அயல் பெட்டையள் போட்ட தேங்காய்ப் பூ கோலம் சைட்டால அழிஞ்சு போய் இலையான் மொய்ச்சுக்கொண்டு இருக்கும்.

வீடெல்லாம் வடிவா பெயின்ட் அடிச்சிருந்தாலும் நிலத்துக்கு அடிச்சிருக்கிற அந்த சிவப்பு நிற பெயின்ட் எடுப்பா முழிப்பா இருக்கும்.

அங்க இரும்பில செய்த வாடகை கதிரைகள் நிறைச்சு அடுக்கி வெச்சிருப்பினை. அதில கீறாத குத்தாத கதிரையா ஒண்டை பாத்து இழுத்துக்கொண்டு போய் இருக்கிறது.

சிவரில டிஷூ பேப்பரால பெயர் எழுதி ஒட்டியிருக்கும் “Wedding இன்னார் & இன்னார்” எண்டு.

வீட்டு ஹோலில ஒரு அகலமான டபிள் பின்னல் கதிரை போட்டிருக்கும். அந்தக் கதிரையை ஒரு கம்பளித் துண்டால மூடினா, கிட்டத்தட்ட அந்தப் பின்னல் கதிரை ஒரு “சோபா” லுக் அடிக்கிற மாதிரி மாறிரும். அந்தக் கதிரையில ஒராள் இருந்தா கொஞ்சம் பெருசு தானேயொழிய ரெண்டு பேர் சௌகரியமா இருக்கேலாது. அந்தக் கதிரைக்க புது மாப்பிளையும் பொம்பிளையும் வடிவா இருக்கேலாம இறுகிப்போய் இருப்பினை. அப்பிடி இருந்தபடி தான் அவையை பாக்க போற visitors எல்லாரோடையும் பொம்பிளை-மாப்பிளை கதைப்பினை.

வீடியோக்காரன் பிடிச்ச மேக்கூறி லைட் வெக்கைக்கு, மாப்பிள்ளையின்ர ஷேர்ட்டும், பொம்பிளையின்ர ப்ளவுஸும் வேர்த்துப் போய் ஈரத்தில ஊறி, கொஞ்சம் உள் உடுப்புகள் வெளில தெரியத்தான் இருப்பினை எண்டதை பற்றி கனக்க அலட்ட விரும்பேல்லை.

அது பொம்பிளை வீடா இருக்கிறதால, அந்தப் பொம்பிளை உஷாரா வாய் ஓயாம நொய் நொய்யெண்டு கதைச்சபடியே இருப்பா. அமைதியா பம்மிக்கொண்டு இருக்கிற தன்ர புதுப் புருஷனுக்கு அடிக்கடி திரும்பி Introவும் குடுப்பா…
“இது என்ர பெரியம்மாட மகளின்ர ஹஸ்பன்ட் ட தங்கச்சி”.

“இது எங்கட பின் வீட்டில முந்தி வாடைக்கு இருந்த அன்ரி.”

“இது நாங்கள் இடம்பெயர்ந்து இருக்கேக்க முன் காணீக்க கடை வெச்சிருந்த அங்கிள்.”

“இது நான் முந்தி செம்பாட்டு ஒழுங்கைக்க டியூசன் போகேக்க வழியில என்னைக் கலைச்ச நாயை அடிச்சு திரத்தின அண்ணை…..”

இப்பிடி ஒவ்வொருத்தரா அவ இன்ட்ரடியூஸ் பண்ண, அவ சொல்லுற கதையை ஏதோ “பிள்ளையார் கதை” கேட்ட கணக்கா புலனை எங்கையோ விட்டபடி புன்னகையோட கேட்டபடி இருப்பார் அந்தப் புதுமாப்பிள்ளை.

பொம்பிளைட அப்பா எண்டு ஒருத்தர் மடிச்சுக்கட்டின பட்டு வேட்டியும் பெனியனுமா வலு உஷாரா அங்கையும் இங்கையும் ஓடுப்பட்டு திரிவார். மகளின்ர கலியாணத்தை சும்மா ஓஹோ எண்டு நடத்திப்போட்டார் எண்ட பெருமை அவரின்ர அந்த சிரிச்ச மூஞ்சையில அப்பிடிக் கொப்புளிக்கும்.

வந்திருக்கிறவைக்கு மகளின்ர அம்மா இன்னொரு லெவல் கதை சொல்லிக்கொண்டு இருப்பா….

“என்ர மகள் அது பிடிக்கேல்லை இது பிடிக்கேல்லை எண்டு எத்தினை சம்பந்தங்களை வேண்டாம் வேண்டாம் எண்டிட்டு, இந்த மாப்பிள்ளையைதான் ஆசைப்பட்டு ஓம் எண்டவள்”
எண்டு அந்த மாப்பிள்ளையின்ர காதில விழுற மாதிரியே சத்தமா சொல்லுவா. அப்பிடி அவ சொல்லேக்க கொஞ்சம் கூனிக்கொண்டு அலுப்பில சரிஞ்சு இருந்த மாப்பிள்ளை கொஞ்சம் நிமிந்து எல்லாரையும் ஒரு லெவல் பார்வை பாப்பார்.

அது பொம்பிளை வீடு. வந்திருக்கிற எல்லாருமே பொம்பிளை வீட்டுக்கு சொந்தக்காரர் எண்டதால, மாப்பிள்ளை கொஞ்சம் பொழுது போகாம அவதிப்படுவார். என்ன செய்யுறதெண்டு அவர் யோசிக்கேக்க, அங்க கண்டிப்பா ரெண்டு பெண்குழந்தையள் பட்டுப்பாவாடை சட்டையில ஓடித் திரியுங்கள். அதில கையுக்க அம்பிட்ட ஒண்டை தூக்கி மடியில வெச்சுக்கொள்ளுவார். அந்தக் குழந்தை அனேகமா கலியாணப் பொம்பிளையின் அக்காவின்ர குழந்தையா இருக்கும். அக்காக்காரி உடன வந்து “சித்தப்பாக்கு ருவிங்கிள் ருவிங்கிள் பாடிக்காட்டுங்கோ” எண்டு குழந்தையை நச்சரிப்பா. அந்தக் குழந்தையோ அறிமுகமில்லாத மாப்பிள்ளை மடியில இருந்து பேந்த பேந்த முழிக்கும். அக்காக்காரி “ருவிங்கிள் ருவிங்கிள்” எண்டு ஆரம்பிச்சு குழந்தையை பாட வைக்கவே ஏலாம, கடைசில முழுப் பாட்டையும் தானே பாடி “லைக் ஏ டயமண்ட் இன் த …..” எண்டு அவ சொல்ல, குழந்தை “ஸ்கை” மட்டும் மெல்லமா சொல்லும். மாப்பிளையோ அந்தக் குழந்தையை “குட் கேர்ள்” எண்டு சொல்லி கை தட்டியும் விட்டுட்டு, மடியில இருந்து மெதுவா இறக்கி விட்டுடுவார்.

பொம்பிளையின்ர “கியூட்” தங்கச்சிமார் ரெண்டுபேர் half Saree யோட அந்தப் புது அத்தானுக்கு கொஞ்சம் நெளிஞ்சு குழைஞ்சுகொண்டு அதுவழிய திரிவினம்.

பொம்பிளையின்ர தம்பிக்காரன் டெக் செட்ல “சின்னத்தம்பி”, “வருஷம் 16” பட பாட்டுகள் சத்தமா போடுவான். Car batteryல இருந்து கனெக்‌ஷன். ஸ்பீக்கர் பொக்ஸ்சை அந்த வாடகை கதிரையில வெச்சிருப்பான். அவனின்ர friendsஸும் பாவங்கள்… ஓடியோடி சாப்பாட்டுப் பந்தி வெச்சு அலுத்துக் களைச்சுப்போய் மூலைக்கு மூலை அதுவழிய நாய் படுத்துக் கிடக்கிற மாதிரி கிடப்பாங்கள்.

கலியாணப் பொம்பிளை பண்ணுற கூத்தைப் பாக்கோணும் அங்க. அப்பப்பப்பா…. ?‍♂️?‍♂️?‍♂️
மாப்பிளையின்ர தலைப்பாகைல ஆறு மணித்தியாலமா சிக்கிக் கிடந்த அரிசி ரெண்டொண்டை தேடிப்பிடிச்சு தட்டி விடுவா.

அவரின்ர தோளில் இருக்கிற சால்வையை இழுத்து செட் பண்ணி விடுவா.

மடிஞ்சிருக்கிற அவரின்ர கொலரை செட் பண்ணி விடுவா.

பக்கத்தில கிடக்கிற உதயன் பேப்பரை நாலா மடிச்சு, அவருக்கு விசுக்கி விடுவா.

இதை பாத்திட்டு சுத்தி இருக்கிற 60 வயசுக்கார பொம்பிளையள் தங்களுக்கை கதைபடுவினை “நல்ல சோடி இவை ரெண்டுபேரும்” எண்டு.
அதை கேக்கேக்க தாய்க்காரிக்கு வலு புழுகமா இருக்கும்.

வந்து இருக்கிறவைக்கு குட்டிக் குட்டி சில்வர் தட்டுகளில பலகாரங்கள் குடுபடும். அந்த தட்டை பாத்தா அதில, ஒரு சிறங்கையளவு மிக்ஸர், ஒரு லட்டு, ஒரு சீனி அரியாரம், சிப்பி-சோகி முறுக்கு நாலு, ஒரு நைஸ் பிஸ்கட் வெச்சிருப்பினம். பலகாரத் தட்டை குடுத்திட்டு, திண்டதோ தின்னேல்லையோ எண்டும் பாராம அடுத்த நிமிசமே தேத்தண்ணியை நீட்டுவினை. எவர்சில்வர் டம்ளர் ல ரின்பாலில போட்ட தேத்தண்ணி அந்தமாதிரி வாசமா இருக்கும். தேத்தண்ணியை வாங்கி கதிரை காலுக்க வெச்சிட்டு பலகாரத்தை ஒரு வெட்டு வெட்டுறது. தட்டு முழுக்க வழிச்சு துடைச்சு தின்னுறது மரியாதையில்லை எண்டிட்டு, மிக்ஸருக்க இருக்கிற கச்சான் பருக்கை ஒண்டு ரெண்டை மட்டும் தட்டில மிச்சம் விடுறது வழக்கம். தேத்தண்ணி டம்ளரை பெருவிரல்-நடுவிரலால (மிச்ச விரலுகளை விரிச்சபடி) விளிம்பில பிடிச்சுத் தூக்கி “சர்ர்ர்ர்ர்ர்ர்ர்” எண்டு சத்தமா உறிஞ்சுற உறிஞ்சலுக்கு பக்கத்தில இருக்கிறவையின்ர தட்டில இருக்கிற பலகாரங்கள்கூட சாடையா இழுபடுற மாதிரி ஒரு பீலிங். அப்பிடி தேத்தண்ணியை குடிக்கேக்கதான் சாடையா தலையை நிமித்தி பொம்பிளை-மாப்பிளை என்ன செய்யினம் எண்டு தேடுறது.

எழும்பிப் போய் மணமக்களுக்கு வாழ்த்தை சொல்லுவம் எண்டிட்டு கிட்ட போய் ஏதோ கஞ்சா பக்கெட்டை கைமாத்துற மாதிரி பொம்பிளையின்ர கையுக்க என்வலப் ஒண்டை செருகுறதும் ஒரு fashion தான். அவவும், “ஏனிப்ப இதெல்லாம் கொண்டு வந்தனீங்கள்?“ எண்டு சிணுங்கிக்கொண்டு என்வலப்பை வாங்குவா. காசா குடுத்தா விரும்பினதை வாங்குங்கள் எண்டு இப்பிடி ஒரு சிலர்தான் நினைப்பினம். மற்றவை எல்லாம் வழக்கமான cup and saucer செட் தான் அன்பளிப்பா குடுப்பினம். புதுசா கலியாணம் முடிச்சு குடும்பம் தொடங்குறதுகளுக்கு 400 கப் பும் 450 சோஸரும் என்ன விதத்தில உதவப்போதோ தெரியேல்லை. ஆனா அன்பளிப்பா எதைக்கொடுத்தாலும் கமெரா லென்ஸ் எங்களைப் பாக்கேக்க டப்பெண்டு குடுக்கிறது சத்தியமா தற்செயல் சம்பவமே தான்.

இனியென்ன வெளிக்கிடுவம் எண்டிட்டு, “போட்டு வாறன்” சொல்லி வெளிக்கிடேக்கை ஒராள் அங்க ஓடிவரும்….
“இஞ்ச… பலகார Bag ஒண்டு வீட்ட கொண்டு போங்கோ” எண்டு ஒரு பிரவுண் பையை நீட்டுவினை. கண்ணை அகலமா விரிச்சு சிரிச்சுக்கொண்டு அதை வாங்கேக்க, பொம்பிளைட அம்மா அங்கால சொல்லிக் கேக்கும்….
“தம்பிக்கு இன்னொரு Bagம் குடுத்து விடுங்கோ”

ம்ம்ம்ம். இரட்டிப்பு சந்தோசம் ?

இனி பொம்பிளை-மாப்பிளையும் வெளிக்கிட போகினமாம். பொம்பிளையின்ர உடுப்புகள் அடுக்கின சூட்கேஸ் ரெடி. கடுதாசி பூவால சோடிச்ச மொறிஸ் ஒக்ஸ்போர்ட் கார் ரோட்டில ரெடி. All done.

“வாழ்க மணமக்கள்”

(‘90களில் கண்ட காட்சிகளின் தொகுக்கப்பட்ட புனைகதை)