Home புதினங்களின் சங்கமம் கொழும்பில் கைக்குண்டு எறிந்து இரு சிறுவர்களை கொன்றவர்களுன் பரபரப்பு வாக்குமூலம்!

கொழும்பில் கைக்குண்டு எறிந்து இரு சிறுவர்களை கொன்றவர்களுன் பரபரப்பு வாக்குமூலம்!

தெஹிவளையில் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தில், குண்டை வீசியதாகக் கூறப்படும் நபரும், அவர் வந்த முச்சக்கர வண்டியை ஓட்டி வந்த நபரும் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரிடமும் தற்போது தடுப்புக் காவலில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட வீடும், தாம் இலக்கு வைத்த வீடும் ஒரே சுவரினால் பிரிக்கப்பட்டிருந்ததால், இரு வீடுகளையும் தங்களால் சரியாக அடையாளம் காண முடியவில்லை என குண்டு வீசிய சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையிலுள்ள வீடு ஒன்றின் மீது கடந்த 11 ஆம் திகதி அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை பலத்த காயமடைந்தார்.

தந்தையின் கால் ஒன்று துண்டிக்கப்பட்டதுடன், உயிரிழந்த இரு சிறுவர்களின் இறுதிச் சடங்குகள் நேற்றைய தினம் கண்ணீருடன் நடைபெற்றது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்தவின் நேரடி மேற்பார்வையில் ஆரம்பிக்கப்பட்டன.

கைக்குண்டுத் தாக்குதலை நடத்துவதற்காக குற்றவாளிகள் வந்த முச்சக்கர வண்டியின் நிறத்தை மாற்றுவதற்காக கராஜில் ஒப்படைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும், அந்தக் கராஜின் உரிமையாளரும் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 10 ஆம் திகதி இரவு 9 மணியளவில் நபர் ஒருவர் வந்து அந்த முச்சக்கர வண்டியை எடுத்துச் சென்றதாக அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

அவர் களுபோவில, சரணங்கர வீதியைச் சேர்ந்த ‘ஹிருத்ம ஷஷ்மிக’ அல்லது ‘ஹிரு மல்லி’ எனப்படும் நபர் என சந்தேக நபர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஹிரு மல்லி என்பவருடன் சேர்ந்து, குண்டு வீசியதாக சந்தேகிக்கப்படும் ‘மதுஷ்க ரேணுக பெர்னாண்டோ’ அல்லது ‘மது’ என்ற நபர் சென்றிருந்தமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக மேல் மாகாண தெற்குப் பொறுப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகரவின் வழிகாட்டலில் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்ன.

இதனடிப்படையில், இரு சிறுவர்களின் உயிரைப் பறித்த குண்டுத் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும், முச்சக்கர வண்டியின் சாரதியும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாம் தாக்குதல் நடத்த நினைத்த வீடும், தாக்குதல் நடத்திய வீடும் ஒரே சுவரினால் பிரிக்கப்பட்டிருந்ததால், சரியான வீட்டை அடையாளம் காண முடியாமல் போனதாகத் தெரியவந்துள்ளது.

தமது உறவினரின் மகனான ‘கொஸ் மல்லி’ மற்றும் போதியாவத்த அவிஷ்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்தத் தாக்குதலை நடத்தியதாக குண்டு வீசியதாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குண்டு வீசியதாகக் கூறப்படும் ‘மது’ என்ற நபர், கடந்த ஓகஸ்ட் 1 ஆம் திகதி இரத்மலானை கந்தவல வீதியில் இடம்பெற்ற ‘ஜாதுங்க பிரியந்த’ என்பவரின் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவராகச் செயற்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு சந்தேக நபர்களும் அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments