இரு குழந்தைகளை விட்டுச் சென்ற பெண் கைது – அச்சுவேலி பொலிஸார் நடவடிக்கை
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவக்கிரி மூலிகைத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது இரு குழந்தைகளையும் தாயாரிடம் விட்டுவிட்டு வேறொரு நபருடன் சென்ற சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் தாயாரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த சில மாதங்களாக குறித்த பெண்ணைக் கைது செய்வதற்கு பொலிஸார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும், அவர் தலைமறைவாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த பெண் நேற்று சாவகச்சேரி பகுதியில் வைத்து அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்ணுக்கு திருமணமாகி ஆறு வயதுடைய பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் உள்ளனர். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், வேறொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டு, இரு குழந்தைகளையும் தனது தாயாரிடம் விட்டுவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அச்சுவேலி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் உத்தியோகத்தர் ரவினி தலைமையிலான அதிகாரிகளின் நடவடிக்கையின் மூலம், ஆறு வயதுடைய பெண் குழந்தை கோப்பாய் பகுதியில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு கல்வி கற்று வருவதாகவும், ஆண் குழந்தை தாயாரின் பராமரிப்பில் வளர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, குறித்த பெண்ணுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், குறித்த பெண்ணை எச்சரித்ததுடன், பிணையில் எடுப்பதற்கு எவரும் முன்வராத நிலையில் அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இரு குழந்தைகளின் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுத்த அச்சுவேலி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.





