புதினங்களின் சங்கமம்

“மாவீரர் நாள் விவகாரம்” – யாழ்.மேல் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியது!

வடக்கில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்கக் கூடாது என்ற மனுக்களை விசாரணை செய்ய மாகாண மேல் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்ற அடிப்படையில் குறித்த மனுக்கள் யாழ். மேல் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது

நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வைத் தடைசெய்யக் கூடாது எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான குறித்த மனுக்களை மாகாண நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்த முடியுமா என எதிர்த்தரப்பு வாதிகள் சார்பில் ஆஜராகிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள், சட்டதரணிகள் மன்றில் எழுப்பிய கேள்வியின் அடிப்படையில் அது தொடர்பான நீண்ட நேர விவாதம் இடம்பெற்றது. இதனை ஆராய்ந்த நீதிபதி மேல் நீதிமன்றத்தில் குறித்த மனுக்கள் மீது விசாரணை நடத்த முடியாது எனத் தெரிவித்து அதனைத் தள்ளுபடி செய்தன.

மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன், விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

குறித்த தீர்ப்புக் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

குறித்த ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டு எழுத்தாணை தொடர்பில் மாகாண நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் இல்லை என்று தீர்ப்பளித்து எழுத்தாணை மனுக்களை நீதிபதி நிராகரித்துள்ளார்.

காரணமாக, இது தேசிய பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட விடயம் என்றும், அது ஒதுக்கிய நிரலிலே உள்ள ஒரு விடயம் என்றும், மாகாணத்துக்குரிய ஒரு விடயமாக அதைக் கருதமுடியாது என்றும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பிலே குறிப்பிட்டிருக்கின்றார்.

மனுதாரர்கள் தனியாக தங்களுடைய உறவினர்களுக்கு நினைவேந்தல் செய்வதை எவரும் தடுக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் கூட்டாகச் சேர்ந்து மாவீரர் நினைவேந்தல் என்ற அடிப்படையிலே அது செய்யப்படுவது தேசியப் பாதுகாப்போடு சம்பந்தப்படுவது என்பதை தான் எற்றுக்கொள்வதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

மனுதாரர்கள் தாங்கள் தங்களுடைய உறவினர்களுக்கான நினைவேந்தலைச் செய்யலாம் ஆனால் கூட்டாக பொது இடத்திலே கூட்டாக சேர்ந்து நின்று அதை முன்னெடுப்பது தேசிய பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட விடயம் என்பதினாலே அதனை விசாரிப்பதற்கு இந்த நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கம் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.