புதினங்களின் சங்கமம்

யாழ்.பல்கலை. கலைப்பீட மோதல்; 7 மாணவர்களுக்கான தண்டனைகள் இதோ!!

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 8 ஆம் திகதி மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தின் சிபார்சுக்கமைய, சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரை செய்துள்ளது.

இதனடிப்படையில், நேரடியாகக் குற்றங்களில் ஈடுபட்ட, பல்கலைக்கழகத்தின் பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட மூன்றாம் வருட மாணவர்களுக்கு அவர்கள் செய்த குற்றங்களின் தன்மைக்கேற்ப பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 946 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் அடிப்படையில் விசாரணை அதிகாரியினால் வகைப்படுத்தப்பட்ட தண்டனைகள் சிபார்சு செய்யப்பட்டிருந்தன.

அவரது முன்மொழிவுகளைப் பேரவைக்குச் சிபார்சு செய்வதென ,d;W புதன்கிழமை இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்றாம் வருட மாணவர்கள் 3 பேருக்கு ஒரு வருட காலத்துக்குப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கான தடையும், 4 பேருக்கு ஆறு மாத காலத்துக்குப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கான தடையும் விதிக்கப்படுவதோடு, தண்டனைக்குரிய 7 பேருக்கும் வழங்கப்படும் அத்தனை நிதியுதவிகளும் நிறுத்தப்படல் வேண்டும். கல்வி கற்கும் காலத்தினுள் விடுதிகளில் தங்குவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும். மாணவர் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் பதவிகள் எவையும் வழங்கப்படகூடாது போன்ற தண்டனைகள் விசாரணை அதிகாரியினால் சிபார்சு செய்யப்பட்டிருந்ததன.

எனினும் இவற்றில் மாணவர்களுக்கான நிதியுதவிகளை நிறுத்துவதை தவிர ஏனைய சிபார்சுகளைப் பேரவைக்குப் பரிந்துரைப்பதற்கு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை முடிவு செய்துள்ளது.

இந்த 7 பேர் தவிர, கடந்த மாதம் 10 ஆம் திகதி முதல் உள்நுழைவதற்குத் தடைவிதிக்கப்பட்ட ஏனைய 14 பேருக்கும் அவர்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் உள் நுழைவுத் தடை விலக்கப்படவேண்டும் என்பதுடன், துணைவேந்தரினால் சம்பவம் தொடர்பில் எச்சரிக்கை வழங்கப்பட வேண்டும் என்றும், கல்வி கற்கும் காலத்தினுள் விடுதிகளில் தங்குவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும், மாணவர் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் பதவிகள் எவையும் வழங்கப்படகூடாது போன்ற தண்டனைகளும் சிபார்சு செய்யப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ள பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதன. பேரவையின் இறுதித் தீர்மபனத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கான தண்டனைகள் துணைவேந்தரினால் அறிவிக்கப்படும்.

கடந்த மாதம் 8 ஆம் திகதி இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணtர்களுக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் மோதலாக உருவெடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கலைப்பீடச் சபையினால் அடையாளப்படுத்தப்பட்ட 21 மூன்றாம் வருட மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பேராசிரியர் எம். நடராஜசுந்தரத்தை விசாரணை அதிகாரியாகக் கொண்ட தனிநபர் ஆயம் ஒன்று பேரவையினால் நியமிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. சம்பவத்துடன் தொடர்புபட்ட இரண்டாம் வருட, மூன்றாம் வருட மாணவர்கள் மற்றும் சம்பவத்தை நேரில் கண்ட அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் விசாரணை செய்யப்பட்டு கடந்த 11 ஆம் திகதி 130 பக்கங்களைக் கொண்ட முழுமையான அறிக்கை துணைவேந்தரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.