புதினங்களின் சங்கமம்

ஓயாத அலையாக இலங்கையைத் தாக்கும் கொரோனா: மொத்த தொற்று 7000!

மினுவாங்கொட கொத்தணி பல மாவட்டங்களில் மேலும் பல உப கொத்தணிகளை தோற்றவித்து வரும் நிலையில் கொரோனா தொற்று பாதிப்பானது ஓயாத அலையாக இலங்கையை தாக்கிக் கொண்டிருக்கிறது.

இதுவரையான நாடக்ளில் என்றும் இல்லாத வகையில் நேற்றைய (ஒக்-23) நாளில் மட்டும் 866 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளமை நாளாந்த தொற்றில் அதிகூடிய தொற்றாக அமைந்துள்ளது.

இவ்வாறு நேற்றைய தினம் தொற்று உறுதியான 866 பேரில் 817 பேர் பேலியகொட கொத்தணியில் தொற்று உறுதியானவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இவ்வாறு பேலியகொட மீன் சந்தை பகுதியில் 535 பேருக்கும், அவர்களுடன் தொடர்புபட்ட அடிப்படையில் 257 பேருக்கும், பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் 20 பேருக்கும், காலி மீன்பிடித் துறைமுகத்தில் 05 பேருக்குமாக 817 பேருக்கு பேலியகொட கொத்தணியில் தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதவிர, தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களில் மேலும் 48 பேருக்கும் தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் கொரோனா நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்து 7,153 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் நேற்றைய தினம் 83 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர். இதன் மூலம் இதுவரை தொற்றில் இருந்து குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 644 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போதைய நிலையில் இலங்கையில் உள்ள கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை நிலையங்களில் 3 ஆயிரத்து 495 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை சிகிச்சை பலனின்றி 14 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.