புதினங்களின் சங்கமம்

உயிரிழப்புத் தொடர்பிலான சர்ச்சை; பருத்தித்துறை வைத்தியசாலைத் தரப்பு விளக்கம்!

யாழ்ப்பாணம் வடமராட்ச்சி நெல்லியடியில் மூடை தூக்கும் போது தவறிவீழ்ந்து படுகாயம் அடைந்து பின்னர் உயிரிழந்த தமது உறவினரின் மரணம் தொடர்பில் தமக்கு உறுதிப்படுத்துமாறு குடும்ப உறுப்பினர்கள் சடலத்தை தூக்கிவந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இன்று மாலை பதற்றம் நிலவியிருக்கின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஆதார வைத்தியசாலையில் பிரதி அத்தியட்சகர் வி.கமலதாஸன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

இன்று மாலை படுகாயம் அடைந்த குறித்த நபர் நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டிருந்தார். அவர் அழைத்துவரப்பட்ட பின்னர் வெளிநோயாளர் பிரிவில் இருந்த மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் அவர் நோயாளர் காவு வண்டியில் வரும்போதே உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டது.

அதன் பின்னரே சடலம் பிண அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் அங்கு வந்த அவருடைய உறவினர்கள், சடலத்தை பிரேத அறையில் இருந்து கட்டிலுடன் தூக்கி வைத்தியசாலைக்குள் கொண்டுவந்தனர்.

அவர் உயிரிழந்தை உறுதிப்படுத்துமாறு எங்களிடம் கோரினர். அதன் பின்னர் இதயத் துடிப்பினை அவதானிக்கும் கருவியை மீண்டும் பொருத்தி அவர் உயிரிழந்தை உறுதிப்படுத்தினோம். உயிர்காக்கும் உன்னத பணியினை மேற்கொண்டுவருகின்ற நாங்கள் ஒரு உயிரை இழக்கவிடுவோமா? என்று வைத்தியர் கேள்வி எழுப்பினார்.

இன்று மாலை வைத்தியசாலை வளாகத்தில் திரண்ட மக்கள் வைத்தியசாலைக்கு எதிராக எதிர்ப்பினை வெளியிட்டிருந்த நிலையில் பொலிஸார் நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.