பரிசுகள், வேலைவாய்ப்புக்கள் என கூறி பேஸ்புக்கில் பெரும் மோசடி!! அவதானம் மக்களே!!
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களினூடாக, மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபடும் கும்பல் தொடர்பாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தாய்லாந்து போன்ற நாடுகளில் அதிக சம்பளத்துக்கு வேலைவாய்ப்புகள் இருக்கின்றன என்று விளம்பரங்களை வெளியிட்டும், பரிசுகள் கிடைத்துள்ளன எனத் தெரிவித்தும் சமூக வலைத்தள பாவனையாளர்களை ஏமாற்றி இந்தக் கும்பல் மோசடியில் ஈடுபடுகின்றது எனத் தெரியவந்துள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது தங்களிடம் ஏமாறும் நபர்களின் தனிப்பட்ட தகவல்களையும் வங்கிக் கணக்கு விபரங்களையும் பெற்றுக்கொண்டு, அந்தக் கும்பல் பண மோசடியில் ஈடுபடுகின்றது எனவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறாக மோசடிக்காரர்களிடம் சிக்கிய பலர் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த முறைப்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு, சி.ஐ.டியினரும் கணனி குற்றவியல் பிரிவினரும் மோசடிக்காரர்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

