புதினங்களின் சங்கமம்

கிழக்கு தொல்லியல் செயலணிக்குப் பொருத்தமான தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் கிடைக்கவில்லையாம்! – அமைச்சர் டக்ளஸ்!

கிழக்கு தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணிக்கு பொருத்தமான தமிழ், முஸ்லிம் பிரதிநிதிளை தெரிவு செய்வது சவாலாக இருக்கின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ், முஸ்லிம் மக்களின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், குறித்த செயலணிக்கு பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், இன்னும் அதற்கான சிறுபான்மை இன பிரதிநிதிகள் உள்வாங்கப்படவில்லை.

அது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர்,

“ஒரு காலத்தில் புத்திஜீவிகளினால் நிரம்பியவர்களாக நம்மவர்கள் இருந்தனர். ஆனால், கடந்த காலத்தில் தமிழர்களின் தலைமைகள் என்று கூறிக்கொண்டவர்களின் விவேகமற்ற வீரத்தின் வெளிப்பாடுகள் ஏற்படுத்திய விளைவுகளில் ஒன்றாக புத்திஜீவிகளுக்கும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த கால ஆயுதச் செயற்பாடுகளினால் பல புத்திஜீவிகள் விவேகமற்ற முறையில் கொல்லப்பட்டுள்ளனர். அதன் காரணமாக பெருமளவானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

தற்போது நாட்டில் இருக்கின்றவர்களும் பெரும்பாலும் சமூகம் சார் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.

இவ்வாறான காரணங்களினால் குறித்த செயலணிக்கு பொருத்தமான தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதநிதிகளை நியமிக்க முடியாமல் இருக்கின்றது.

எனினும், தொடர்ந்தும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினால் விரைவில் இருவர் நியமிக்கப்படுவார்கள்” – என்றார்.