மிகச்சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் துணைவேந்தர் தெரிவுக்கான புதிய பொறிமுறை!!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கணிதம் மற்றும் புள்ளிவிபரவியல்துறைப் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதன்படி இன்று ஓகஸ்ட் மாதம் 28ம் திகதி வெள்ளிக்கிழமை தமது பதவியை பொறுப்பேற்றிருக்கும் புதிய துணைவேந்தருக்கு வாழ்த்துக்கள்.
கல்வியில் வடக்கு மாகாணம் மிகவும் பின்தங்கி, பல்கலைக்கழக தரவரிசையில் யாழ் பல்கலைக்கழகம் கீழ்நிலையில் இருக்கும் ஒரு சவால் மிகுந்த காலகட்டத்தில் முக்கிய பொறுப்பை ஏற்றிருக்கும் இவர், தன்னுடைய பதவிக்காலத்தில் இந்த நிலைமைகளில் குறிப்பிடத்தக்களவு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவாறாகச் செயலாற்றவேண்டும் – செயலாற்றுவார் என்ற பெருத்த எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த வடமாகாண தமிழ் சமூகத்திடமும் காணப்படுகிறது.
புதிய பொறிமுறையின் வெற்றி!
பேராசிரியர் சிறிசற்குணராஜாவின் இந்த நியமனம், பல்கலைக்கழகங்களுக்கு சரியான தகுதி அடிப்படையில் துணைவேந்தர்களை நியமிக்கவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய பொறிமுறை மிகச்சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதை தெளிவாகக் காட்டியிருக்கிறது.
பேரவை உறுப்பினர்களின் வாக்கு அடிப்படையில் தெரிவுசெய்யப்படும் விண்ணப்பதாரிகளில் முதலிடம் பிடிக்கும் மூவரின் பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு அவர்களில் ஒருவர் துணைவேந்தராகத் தெரிவுசெய்யப்படும் பழைய முறைமைக்குப் பதிலாக, தகுதி-திறமை அடிப்படையில் துணைவேந்தரைத் தெரிவுசெய்யும் வகையில் இந்தப் புதிய பொறிமுறையை ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைய பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியிருந்தது.
இந்தப் பொறிமுறை பற்றி மக்களுக்கு விளக்கும் வகையில் டான் தொலைக்காட்சி நடாத்திய விசேட நிகழ்ச்சி ஒன்றில், யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், தற்போதைய பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் யாழ் பல்கலைக்கழக பிரதிநிதியுமான பேராசிரியை வசந்தி அரசரட்ணம் தெளிவான விளக்கமொன்றை வழங்கியிருந்தார்.
துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி-திறமையை மதிப்பிடுவதற்கு 7 முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கும் முறையில் இந்தத் தெரிவு மேற்கொள்ளப்பட்டது.
1. பல்கலைக்கழகத்தின் இலக்கு மற்றும் தேசிய அளவிலான தேவைகளை நிறைவேற்றும் வகையிலான தந்திரோபாய சிந்தனைத் திறன்,
2. நிறுவனத்தை வழிநடத்திச்செல்வதற்கு அவசியமான காத்திரமான தலைமைத்துவப் பண்பு.
3. பூகோள மற்றும் தேசிய அடிப்படையிலான பார்வைப்புலத்துடன்கூடிய அனைத்தையும் உள்ளடக்கி அகன்று சிந்திக்கும் திறன்..
4. நிரூபிக்கப்பட்ட புலமைத்துவ மற்றும் ஆராய்ச்சிச் செயற்பாடுகள்.
5. பங்கமில்லாத தனிப்பட்ட குணாதிசயங்கள்.
6. தெளிவு மற்றும் துணிவுடன்கூடிய தொழில்சார் தொடர்பாடல்திறன்.
7. நிர்வாக மற்றும் முகாமைத்துவத் திறன்கள்.
ஆகிய ஏழு பிரதான அளவுகோல்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டன.
முதலில், இளைப்பாறிய முன்னாள் துணைவேந்தர், பொதுத்துறை நிர்வாக சேவை மூத்த உறுப்பினர், தனியார்துறையின் உயர் உத்தியோகத்தர் ஆகியோருடன், பல்கலைக்கழக மூதவையினால் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு சிரேஷ்ட பேராசிரியர்களை உள்ளடக்கிய 5 பேர் கொண்ட மதிப்பீட்டுக்குழு, விண்ணப்பதாரிகளின் விரிவான விண்ணப்ப ஆவணங்களை மதிப்பீடு செய்து, ஒவ்வொருவரையும் தனித்தியே நேர்காணல் செய்து புள்ளிகளை வழங்கியது.
பின்னர், இவர்கள் வழங்கிய புள்ளிகளின் சராசரி கணிக்கப்பட்டு, முதல் 5 நிலைகளில் உள்ள விண்ணப்பதாரிகளின் புள்ளிகள் தொடர்பான விபரங்கள் பேரவைக்கு வழங்கப்பட்டு, மேலதிகமாக விண்ணப்பதாரிகளின் நேரடி அளிக்கைகளின்(Presentation) அடிப்படையிலும் பேரவை உறுப்பினர்கள் மேற்சொன்ன 7 அளவுகோல்களுக்கும் தனியாகப் புள்ளிகளை வழங்கினர்.
பேரவை உறுப்பினர்கள் வழங்கிய இந்தப் புள்ளிகளின் சராசரியும் கணிக்கப்பட்டு, மதிப்பீட்டுக்குழு மற்றும் பேரவை வழங்கிய புள்ளிகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 3 பேரின் பெயர்கள் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு மூலமாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவில் மதிப்பீட்டுக்குழு வழங்கிய புள்ளிகளின் அடிப்படையிலும், பேரவை வழங்கிய புள்ளிகளின் அடிப்படையிலும் முதல் 3 நிலைகளிலும் ஒரே விண்ணப்பதாரிகளே தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்த மூவரில் எவரொருவரையும் ஜனாதிபதி துணைவேந்தராகத் தெரிவுசெய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பே பொதுவாக எல்லோரிடமும் இருந்தபோதும், துறைசார் புலமைத்துவ, நிர்வாக, தனியார்துறை வல்லுநர்களினால் வழங்கப்பட்ட புள்ளி அடிப்படையிலான தெரிவின்படி முதல் நிலையில் இருந்தவரையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துணைவேந்தராகத் தெரிவுசெய்து தமது துறைசார் நேர்மையையும், கண்டிப்பான ஒழுக்கத்தையும் நிரூபித்துள்ளார்.
இதேபோன்றதொரு அணுகுமுறையையே .கிட்டத்தட்ட ஏக காலத்தில் நடைபெற்ற களனி பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவிலும் அவர் பின்பற்றி புதிய துணைவேந்தரைத் தெரிவுசெய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தப் புதிய துணைவேந்தர் தெரிவு பொறிமுறையிலும் குறைபாடுகள் உண்டு, அதையும் மீறி தெரிவுசெய்யப்படும் மூவரில் தனக்குப் பிடித்த ஒருவரைத் தெரிவுசெய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதால் ,தகுதியற்ற ஒருவர் தெரிவுசெய்யப்படவும் முடியும் என்றும், இந்தப் புதிய துணைவேந்தர் தெரிவுமுறை தொடர்பாக டான் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதுபற்றி விளக்கிய முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரும், பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் யாழ் பல்கலைக்கழக பிரதிநிதியுமான பேராசிரியை வசந்தி அரசரட்ணம் அவர்களிடம் எழுப்பப்பட்ட அனைத்துக் கேள்விகளையும் ஜனாதிபதி கோட்டாபயவின் நேர்மையான தெரிவு பொய்ப்பித்துவிட்டது.
கடந்தமுறை நடைபெற்ற பழைய முறையிலான யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவிலும் பேராசிரியர் சிறிசற்குணராஜா அவர்களே அதிக வாக்கு வித்தியாசத்தில் துணைவேந்தராகத் தெரிவுசெய்யப்பட்டபோதும், அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் தமக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அதிக வாக்குகள் பெற்ற பேராசிரியர் சிறிசற்குணராஜாவைத் தவிர்த்து குறைந்தளவு வாக்குப்பெற்ற ஒருவரை துணைவேந்தர் ஆக்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இம்முறையும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவில் முதலிடம் பெற்றிருந்தவர் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு பெயரிடப்படாத கடிதங்கள் மற்றும் ஏனைய வழிமுறைகள் மூலமாக தவறான முறைப்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அறியக்கிடைக்கிறது.
எனினும், இதையெல்லாம் புறந்தள்ளி, இம்முறை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கமைய பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிமுகப்படுத்திய புதிய திறமை அடிப்படையிலான தெரிவு முறையின்படி, புள்ளி அடிப்படையில் முதல் நிலையில் இருந்தவரையே துணைவேந்தராகத் தெரிவுசெய்த ஜனாதிபதியின் தொழில்முறை நேர்மையும், கண்டிப்பான பணி ஒழுக்கமும், யாழ் பல்கலைக்கழகத்துக்கு திறமை மற்றும் தகுதியான ஒருவரை துணைவேந்தராகப் பெற்றுத்தந்திருக்கிறது.
இதேபோன்றதொரு பொறிமுறையை, யாழ் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள் மற்றும் இதர அனைத்துப் பதவிகளுக்கும் பொருத்தமானவர்களைத் தெரிவுசெய்வதற்கு கணிதப் பேராசிரியரான புதிய துணைவேந்தர் சிறிசற்குணராஜா அறிமுகப்படுத்துவாராயின், முழு யாழ் பல்கலைக்கழகத்தின் அத்தனை பதவிகளிலும் தகுதி மற்றும் திறமையானவர்கள் நியமிக்கப்பட்டு, யாழ் பல்கலைக்கழகத்தின் தரவரிசை மிக விரைவில் மேல்நோக்கிப் பயணிக்க வழிபிறக்கும்.
நன்றி
Rushangan Kodeeswaran


