புதினங்களின் சங்கமம்

இலங்கையில் அடுத்த சில நாட்களில் தொடர் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது!!

இலங்கைக்கான மின்சார நுகர்வில் கணிசமான பங்கை ஈடு செய்யும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயலிழந்துள்ள நிலையில் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கோரியுள்ளது.

கரவலபிட்டி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலங்கை முழுவதும் நேற்று பல மணி நேரம் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. கடும் போராட்டத்தின் பின்னர் நேற்றிரவு மின் விநியோகம் சீரடைந்தது.

இந்நிலையில் அதிக அழுத்தம் காரணமாக 900 மெகாவாட் மின் தேவையை நிவர்த்தி செய்ய நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துள்ளது.இதனால் பகுதிநேர மின்வெட்டு அமுலாகும் நிலை ஏற்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான நிலையிலேயே நெருக்கடிகளைத் தவிர்க்கும்பொருட்டு மின்சாரத்தைச் சிக்கனமாகப் பய்படுத்துமாறு பொதுமக்களை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கோரியுள்ளது.

இன்று தொடக்கம் நான்கு நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நான்கு வலையங்களாக பிரிக்கப்பட்டு நான்கு கட்டங்களில் குறித்த மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ள இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அதன்படி, ஒரு வலையத்தில் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும், மற்றைய வலையத்தில் இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரையும், மற்றுமொரு வலையில் இரவு 8 மணிமுதல் இரவு 9 மணி வரையும் நான்காவது வலையத்தில் இரவு 9 மணி முதல் இரவு 10 மணி வரையும் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நுரைச்சோலை மின் ஆலையில் மின்பிறப்பாக்கி கட்டமைப்பில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும் வரையில் மின் துண்டிப்பை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.