யாழில் பொறிவைத்துப் பிடிக்கப்பட்ட வாழைக்குலைத் திருடன்!! வீடியோக் காட்சிகள்!
தோட்ட நிலத்தில் பகலில் வெட்டிய வாழைக்குலைகளை இரவு வேளையில் எடுத்துச் செல்ல வந்த திருடன் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுச் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஐயனார் கோவிலுக்கு அண்மையிலுள்ள கள்ளியடி தோட்டப் பகுதியில் கடந்த சனிக்கிழமை(08) இரவு நடந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த சனிக்கிழமை பிற்பகல்-02 மணியளவில் மேற்படி பகுதியிலுள்ள வாழைத் தோட்டத்திற்குச் சென்ற தோட்ட உரிமையாளர் சென்று பார்த்த போது ஏழு வரையான கதலி மற்றும் இதரை வாழைக்குலைகள் களவு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
எனினும், வாழைக்குலைகள் வெட்டப்பட்டு சில நிமிடங்களே ஆகியிருக்கலாமென்பதை உணர்ந்து கொண்ட அவர் சுற்று முற்றிலும் தேடியுள்ளார். அப்போது தோட்டக்காணிக்கு அண்மையில் பற்றைக்குள் வெட்டப்பட்ட அனைத்து வாழைக்குலைகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. எடுத்துச் செல்வதற்கு வசதியாகவே குறித்த வாழைக் குலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் வெட்டப்பட்ட வாழைக்குலைகளை இரவு எப்படியும் திருடர்கள் எடுக்க வருவார்கள் என ஊகித்துக் கொண்ட தோட்ட உரிமையாளரும், அவரது உறவினரும், அப்பகுதி இளைஞர்களும் தோட்டத்திற்குள்ளும், பற்றைக்குள்ளும் மறைந்திருந்துள்ளனர்.
இந்நிலையில் இரவு இரண்டு தடவை அப்பகுதிக்கு நோட்டம் பார்க்க கொள்ளையர்களில் ஒருவன் வந்துள்ளான்.
இந்நிலையில் இரவு-08.30 மணியளவில் வெட்டிய வாழைக்குலைகளை எடுத்துச் செல்வதற்காக இரு நபர்கள் குறித்த பகுதிக்கு மோட்டார்ச் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்களை மறைந்திருந்தவர்கள் மடக்கிப் பிடிக்க முயற்சித்த நிலையில் மோட்டார்ச் சைக்கிளின் பின்னாலிருந்த திருடர்களில் ஒருவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான். எனினும், மோட்டார்ச் சைக்கிள் ஓடி வந்த திருடன் வசமாக மாட்டினான்.
இந்நிலையில் மடக்கிப் பிடிக்கப்பட்ட வாழைக்குலைத் திருடனை ஊர் மக்கள் சேர்ந்து நையப்புடைத்தனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சுன்னாகம் பொலிஸார் மடக்கிப் பிடிக்கப்பட்ட திருடனைக் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். அத்துடன் வெட்டப்பட்ட வாழைக்குலைகளும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.
மடக்கிப் பிடிக்கப்பட்ட திருடனின் சகோதரனே தப்பிச் சென்ற திருடன் எனவும், குறித்த திருட்டு முயற்சியின் பிரதான சந்தேகநபர் அவனே என்பதும் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே பல்வேறு திருட்டுக்களுடன் தொடர்பிருப்பதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தப்பிச் சென்றவனைப் பொலிஸார் வலைவீசித் தேடி வருகின்றனர். .
இதேவேளை, தற்போது யாழில் வாழைப்பழங்களின் விலைகள் அதிகரித்துக் காணப்படும் நிலையிலேயே குறித்த திருட்டு முயற்சி நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குப்பிழான், புன்னாலைக்கட்டுவன் பகுதிகளில் அடுத்தடுத்து வாழைக் குலைகள் களவு போயிருந்த நிலையிலேயே குறித்த திருட்டுச் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

