கொரோனாவுக்கு கண்டபடி பயப்படலாமா?? யாழ் வைத்தியநிபுணர் சிவன் சுதன் சொல்வது என்ன?
முதலில்
நாம் என்பது யார் யாரைக் குறிக்கும் என்று பார்க்க வேண்டும். என்னுடைய அவதானிப்பின்படி மிகப் பெரும்பான்மையினர் பீதி ஏதுமின்றி சாதாரணமான ஒரு வாழ்க்கையையே தற்பொழுது வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆயினும், சுகாதாரத் துறைசார்ந்தவர்களும், இயல்பாகவே தமது சுகாதார நிலை, மற்றும் நோய்கள் தொடர்பாக அதிக கரிசனையோடு இருப்பவர்களுமே இந்தத் தொற்றுப் பற்றிப் பீதியோடிருப்பதாகத் தெரிகிறது.
இந்தப்
பீதி ஏன் ஏற்படுகின்றது என்பதனைக் கவனித்துப் பார்க்க வேண்டும். அது அடிப்படையில் இந்தக் கொவிட் 19 தொற்று ஏற்படுத்தும் மரணங்களின் எண்ணிக்கை சார்ந்து இருக்கின்றது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்தியாலமும் நாம் எதிர்கொள்ளும் செய்திகள் அனைத்தும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையையும், மற்றும் இத்தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையையும் வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தொற்றுக்கு என விசேடமான மருத்துவ
சிகிச்சைகள் இன்னமும் உருவாகவில்லை என்ற நினைப்பும், பல மரணங்கள் ஒரு
கையாலாகாத நிலையில் நடைபெறுகின்றன என்ற ஓர் உணர்ச்சிமயப்பட்ட விவரிப்பும் இந்த நோய் ஏற்பட்டால் அதிலிருந்து மீள்வது அரிது எனும் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றது. இயல்பாக பீதி எம்மைத் தொற்றிக் கொள்கிறது.
பீதி
ஏற்படுவதற்குரிய இன்னுமொரு காரணமாக இந்த நோய்த்தொற்றுத் தொடர்பாக இடம்பெறும் நடைமுறைகள் இருக்கின்றன. அவை எமது இவ்வளவு கால வாழ்க்கை அனுபவங்களிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கின்றன. உதாரணமாக ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதெனச் சந்தேகம் எழுந்தால், அந்த ஒருவர் மற்றையவர்களிடமிருந்து தனிப்படுத்தப்படுவர். அவருக்குப் பரிசோதனைகள் நடைபெறும். அவருக்குத் தொற்று இருப்பது உறுதியானால் அவர் இலங்கைச் சுகதாதார அமைச்சின் விதிமுறைகளின்படி கொவிட்-19 தொற்றுக்குச் சிகிச்சையளிக்கும் ஒரு வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார். அதே சமயம், தொற்றுக்கு உள்ளானவரின் குடும்பமும், தொற்றுக்குள்ளானவர் நெருங்கிப் பழகிய ஏனைய நபர்களும் அவர்களது குடும்பத்தவரும், அவர் வேலை செய்த பணியிடத்தில் உள்ளவர்களும் அவர்களது குடும்பத்தவரும், சில சமயங்களில் அவரது கிராமமும் குறிப்பிட்ட காலத்திற்குச் சமூகத்தில் தொடர்ந்து ஊடாடதபடி தனிப்படுத்தப்பட்டு இருக்க வேண்டி ஏற்படும். தொற்று ஏற்பட்டவர் சிகிச்சை பெறுகின்றபோது, எமது வழமைப்படி நாம் அவரை அடிக்கடி சென்றுபார்த்து சுகம் விசாரித்துவிட்டு வர முடியாது. துரதிஷ்டவசமாக
அவருக்கு உயிராபத்து ஏற்பட்டால் பின்பு கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் மிகவும் மனக்கஷ்டங்களை ஏறபடுத்தக் கூடியன. இந்த நடைமுறைகள் யாவும் எம்மிடையே ஒரு பதகளிப்பையும், மனக்கிலேசத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்குகினறது. இயல்பாக பீதி எம்மைத் தொற்றிக் கொள்கிறது.
அத்தியாவசிய
சேவைகளில் இருப்போர் தமது பணியின் நிமித்தம் அடிக்கடி வெளியே சென்று வரவேண்டியிருக்கின்றது. அவர்களது குடுமபத்தவர்கள் யாவரும் வீட்டிலிருக்கும்போது அவர்கள் மாத்திரம் வெளியே சென்று வருவதனால் அந்தப் பணியாளர்களுக்கோ, அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கோ இந்தத் தொற்று ஏற்பட்டால் அது அவர்களாலேயே ஏற்படப்போகின்றது எனும் ஒரு பதற்றம் அவர்களிடத்தே காணப்படுகின்றது. ஒவ்வொரு நாளையும் அவர்கள் எதிர்காலத்தில் தமக்கு ஏற்படக் கூடிய பழி தொடர்பான குற்றவுணர்வோடும், பீதியோடும் கழிக்க வேண்டியிருக்கின்றது.
ஆனால்,
கொவிட்-19 தொடர்பான சில அடிப்படையான உண்மைகளை நாம் இவ்விடத்தில் உற்றுநோக்க வேண்டியிருக்கின்றது. இந்த வைரஸ் ஆனது மிக இலகுவில் தொற்றக் கூடியதும், கடுமையான பாதிப்புகள் மற்றும் உயிராபத்தை விளைவிக்கக் கூடியதுமாகும் என்பது உண்மையே. ஆனால், மறுதலையாக, மிகப் பெரும்பான்மையினருக்கு இந்த வைரஸ் தொற்றானது மிகவும் கடுமை குறைந்த அளவுகளிலேயே வந்து போகின்றது. சிலர் தமக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது தெரியாமலே தமது வாழ்க்கையைத் தொடர்ந்து செல்கிறார்கள். பொதுவாக நோய்கள் என்பவை அப்படிப்பட்டவையே. பல நோய்கள் பெரும்பான்மையானவர்களுக்கு
சிறிய மற்றும் நடுத்தரமான தாக்;கங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும், சிலருக்கு அவை கடுமையான விளைவுகளையும் உயிராபத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன. இந்த இயல்பான. இயற்கை விதியோடிணைந்த உண்மையை நாம் உணர்ந்து கொள்வோமாயிருந்தால் கொவிட்-19 தொற்று தொடர்பாக நாம் அதீத பீதியடைவதிலிருந்து எம்மை விடுவித்துக் கொள்ளலாம்.
அத்தோடு,
இப்போதிருக்கும் விஞ்ஞானம்சார் தகவல்கள் இந்தத் தொற்று இலகுவில் உலகைவிட்டுப் போய்விடும் என்று நம்புவதற்குப் போதுமானவையாக இல்லை. ஒருமுறை தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வரும்போது இந்த வைரசிற்கு எதிரான எதிர்ப்புச் சக்தி உருவாகி, அது ஓரளவுக்குத்தானும் எதிர்காலத்தில் தொற்று ஏற்படுவதனைத் தடுக்கும் ஆற்றலைத் தந்துதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, நீண்டகாலம் எமது சூழலில் இருக்கப் போகும் இந்தத் தொற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான சில திட்டங்கள் எம்மிடையே இருப்பதுவும் எமது பய உணர்வுகளைக் குறைப்பதற்கு
உதவி செய்யும்.
அடுத்ததாக,
இந்தத் தொற்று நோய் ஏற்படுவதிலிருந்து எம்மைத் தற்காத்துக் கொள்வதற்கும், எம்மையறியாமல் மற்றவர்களுக்கு அதனைக் கடத்திவிடாமல் இருப்பதற்கும் என சில எளிமையான
அடிப்படை விதிகள் உள்ளன. வெளியே நடமாடும் தேவைகளைக் குறைத்துக் கொள்ளுதல், ஒருவரிடமிருந்து ஒருவர் முடியுமானளவு தூரத்தில் விலகியிருந்தபடி காரியங்களை மேற்கொள்ளுதல், கைகளை அடிக்கடி சவர்க்காரம் போட்டு முறையாகக் கழுவுதல் போனற நடைமுறைகள் மிகவும் அடிப்படையானவை. இவற்றிற்கு மேலாக, தொண்டை நோ, தும்மல், இருமல் போன்ற அறிகுறிகளை உடையவர்கள் முகக்கவசம் அணிந்து கொள்வதும், நோயாளர்களுடன் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி தற்பாதுகாப்பு உபகரணங்களை உபயோகிப்பதுவும் தேவையானது. இந்த நடைமுறைகளை நாம் ஒழுங்காகக, எமது மனச்சாட்சி திருப்தியுறும்படி கடைப்பிடிப்போமானால், இந்த வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான எமது முழுமையான பங்களிப்பை நாம் வழங்கியவர்கள் ஆவோம். இவற்றிற்கு மேலாகவும் நமக்கோ அல்லது எமது குடும்ப உறுப்பினர்களுக்கோ தொற்று ஏற்பட்டால், அது எமது கைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று என்பதனைப் புரிந்து ஏற்றுக் கொண்டு, அதுபற்றிய குற்றவுணர்வு ஏற்படாமல் தப்பித்துக் கொள்ளலாம்.
சுருக்கமாக,
இந்த வைரஸ் தொற்றுத் தொடர்பாகப் பீதியடைதல் எந்தவிதமான நன்;மைகளையும் தரப்போவதில்லை. அது எமது உடலையும் உள்ளத்தையும் வருத்துவதோடு, எமது நோயெதிர்ப்புத் திறனையும் குறைத்துவிடும். ஆனால், இந்தத் தொற்று நோய் தொடர்பான மிகவும் விழிப்போடிருப்பது நன்மை பயக்கும். உலகளாவிய இந்தத் தொற்று நோய் தொடர்பான சரியான தகவல்களைப் புரிந்து கொள்வதும், நாம் செய்கின்ற ஒவ்வொரு செயற்பாடுகளிலும் மனம்நிறை கவனத்தோடு இருப்பதுவும்
மிகவும் முக்கியமானது.
நன்றி
thamilhealth.com