புதினங்களின் சங்கமம்

அங்கஜன், சுமந்திரன் போன்றவர்களின் விளம்பரச் செலவு விபங்கள் இதோ!!Facebookகின்Ad Library Report லிருந்து அறியக்கூடிய விடயங்கள் யாவை?

சமூக வலைத்தளங்களில் 260 கோடிப்பாவனையாளர்களுடன் முதலிடத்தில் இருப்பது ஃபேஸ்புக்.இலங்கையில் மாத்திரம் 60 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் ஃபேஸ்புக் கணக்கை வைத்துள்ளனர்.

ஃபேஸ்புக் நிறுவனம் ,போலிச் செய்திகள் மற்றும் வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக போதிய நடவடிக்கை எடுக்கத்தவறிவிட்டதாக கொகாகோலா,  அடிடாஸ் ,யுனிலிபர் உட்பட 200க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பேஸ்புக்கில் விளம்பரங்களைக்  கொடுப்பதில் இருந்து கடந்த சில வாரகாலப்பகுதிக்குள் விலகிக் கொண்ட போதும் அரசியல் விளம்பரங்களால் பேஸ்புக் பணத்தை அள்ளிக் குவித்துவருகின்றது என புதிதாக வெளியாகியிருக்கும் தகவல் புலப்படுத்துகின்றது.

#லாபத்திற்காக வெறுப்பை நிறுத்து  #StopHateForProfit என்ற பிரசாரத் தொனிப்பொருளில் இந்நிறுவனங்கள் பேஸ்புக்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போதிலும்  இம்முறை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக  களமிறங்கியுள்ள முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடன் தரப்பினர் கடந்த மாதத்தில் மாத்திரம் பேஸ்புக்கில் 9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான விளம்பரங்களைக் கொடுத்துள்ளன. மீண்டும் ஜனாதிபதியாகும் பிரசாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ள தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தரப்பு 5மில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்த மாதத்தில்  பேஸ்புக் விளம்பரங்களுக்காக செலவழித்துள்ளது. அமெரிக்கா அளவிற்கு இல்லாவிடினும் தற்போது இலங்கையின் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கணிசமான பணத்தை பேஸ்புக் விளம்பரங்களுக்காக செலவழித்துவருகின்றனர்.

பேஸ்புக் விளம்பரங்களுக்கும் பேஸ்புக் பதிவுகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசம்


ஒரு அரசியல் வாதி உதாரணமாக  நாமல் ராஜபக்ஸ பேஸ்புக் பதிவொன்றை இடும் போது அது பெரும்பாலும் அவரது நட்பு பட்டியலில் உள்ளவர்களுக்கும் அவரைப் பின்தொடர்பவர்களுக்குமே தெரியும். ஆனால் பேஸ்புக் அட்ஸ் விளம்பரங்களோ அவரது நட்புப்பட்டியலில் இல்லாத போதும் பின்தொடருனராக இல்லாத போதும் அவரது கட்சியைப் பற்றிய செய்திகளைப் பார்த்திருந்தவர்கள், கருத்துக்யபதிவிட்டிருந்தவர்கள் ராஜபக்ஸ பெயரிலுள்ள விடயங்களை லைக் பண்ணியிருப்பவர்கள் அந்தச் செய்திகளை shareபண்ணியவர்கள் என என பல்வேறு தரப்பினரையும் ஃபேஸ்புக்கின் algorithmவழிமுறை ஊடாக ஊடாக இலக்கு வைத்து அவர்கள் பேஸ்புக்கை பார்க்கும் போது தெரியத்தக்கதாக வடிவமைக்கமுடியும்.

ஃ பேஸ்புக்கில் பல்வேறு நிறுவனங்கள் தனிமனிதர்கள் விளம்பரங்களைச் செய்வதனைப் பார்த்திருக்கின்றோம். தேர்தல் காலமாக இருப்பதால் வேட்பாளர்களதும் அவர்களது ஆதரவாளர்களதும் விளம்பரங்கள் அதிகமாக எமது பேஸ்புக் டைம்லைனை ஆக்கிரமிப்பதனைக் காணமுடிகின்றது.

Facebook Ad Library க்கும் Facebook Ad Library Report  க்கும்   உள்ள வித்தியாயம் என்ன?

ஃ பேஸ்புக் அட் லைபிரரி Facebook Ad Library என்பது பேஸ்புக்கில் போடப்படும் அனைத்து விளம்பரங்களையும் காண்பிக்கின்ற தகவல் பெட்டகம் அல்ல. மாறாக தேர்தல்களின் போது வேட்பாளர்கள் பிரசுரிக்கின்ற விளம்பரங்களை அட்டவணைப்படுத்த்தி காண்பிக்கின்ற தளமாகும்.

கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம்  ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களுக்கு நடுவிலேயே இலங்கையர்கள் முதலில் பார்க்கமுடிந்தது.

ஒரு வேட்பாளர் எவ்வளவு பணத்தை ஃபேஸ்புக் விளம்பரங்களுக்காக பயன்படுத்துகின்றார். அவர் எந்தெந்த பிரதேசங்களிலுள்ளவர்களுக்கு விளம்பரங்கள் தெரியவேண்டும் என தெரிவுசெய்துள்ளார் என்பதை அறிந்துகொள்ளமுடியும். குறிப்பாக மலையகத்தை சேர்ந்த ஒரு வேட்பாளர் தேசியப்பத்திரிகையொன்றில் விளம்பரத்தை பிரசுரிப்பதால் அவர் போட்டியிடும் பிரதேசத்தை தவிர ஏனைய இடங்களில் உள்ளவர்கள் தகவலாக அவர் போட்டியிடுவது பற்றி தெரிந்துகொள்ளமுடியுமே தவிர அவர்களால் அவருக்கு வாக்களிக்க முடியாது .

மறுமுனையில் பேஸ்புக் மூலமாக தனது தேர்தல்  தொகுதியை தான் போட்டியிடும் மாவட்டத்தை மாகாணத்தை இலக்கு வைத்து விளம்பரங்களைப் போட முடியும். இதனைத் தவிர எந்த வயதெல்லைக்குட்பட்டவர்களை விளம்பரம் சென்றடைய வேண்டும், ஆண்களையா பெண்களையா விளம்பரம் சென்றடைய வேண்டும் என்பதை இலக்குவைத்து மேற்கொள்ளமுடியும்.

உதாரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் போட்டியிடும் அங்கஜன் ராமநாதன் ஃபேஸ்புக் மூலமாக தன்னுடைய விளம்பரங்கள் எந்தப்பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு காண்பிக்கப்படவேண்டும் என்பதை மட்டுமல்ல எந்த வயதெல்லைக்குட்பட்டவர்களை எந்தப் பாலினத்தவர்களை எந்த நேரகாலப்பகுதியில் சென்றடையவேண்டும் அன்றேல் காண்பிக்கப்படவேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியும்.

இந்த விபரங்களை நாம் ஃபேஸ்புக் அட் லைபிரரியை பார்வையிடுவதன் மூலம் அறிந்துகொள்ளமுடியும். உதாரணமாக நீங்கள் செந்தில் தொண்டமான் யாரை இலக்குவைத்து ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்துள்ளார் என்பதை அறிந்துகொள்ளவேண்டுமானால் முதலில் அவரது ஃபேஸ்புக் உத்தியோக பூர்வ பக்கத்திற்கு சென்று அதிலே Page Transparency என்ற பகுதியை Click செய்ய வேண்டும் . பின்னர் அதில் என்பதை பண்ணினால் நீங்கள் அவரது ஃபேஸ்புக் விளம்பரங்கள் ஒவ்வொன்றையும் பார்வையிடமுடியும். அதில் எந்தப்பகுதியை அவரது விளம்பரங்கள் இலக்குவைத்துள்ளன. எந்த வயதெல்லையுடையவர்களை இலக்குவைத்துள்ளன எந்தப்பாலினத்தவர்களை இலக்குவைத்துள்ளன போன்ற விடயங்களை அறிந்துகொள்ளமுடியும்.யார் இந்த விளம்பரங்களுக்காக செலவுசெய்துள்ளனர் என்ற விடயத்தையும் இதன் மூலம் அறிந்துகொள்ளமுடியும்.

கடந்த ஜுன் மாதம் ஃபேஸ்புக் மற்றுமொரு விடயத்தை இலங்கையர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தது. அதுதான் Facebook Ad Library Report என்பதாகும்.

.இந்த facebook ad library report பயன்படுத்தி எவ்வாறான தகவல்களைப் பெறமுடியும் என்பதற்கு இங்கே ஒரு உதாரணத்தை தருகின்றேன். கடந்த மே மாதம் முதல் ஜுலை இதுவரையான காலப்பகுதியில் பேஸ்புக்கில் இலங்கை தேர்தல் 18,675தொடர்பான விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றிற்காக $282,100 அமெரிக்க டொலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளன.

கடந்த மேமாதம் வரை இதுவரையான காலப்பகுதியில் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்தவர்களின் முதல் 10  இடங்களில் உள்ள அரசியல் வாதிகளின்  விபரங்கள் பின்வருமாறு:-

 வேட்பாளர் பெயர் விளம்பரத்திற்காக செலவழித்தவர் பெயர் செலவழித்துள்ள தொகை Facebook Ad Libraryயுள்ள மொத்த விளம்பரங்களின் எண்ணிக்கை 
சஜித் பிரேமதாஸ

 

சஜித் பிரேமதாஸ  12,978 அமெரிக்க டொலர்கள் 77
அங்கஜன் ராமநாதன் அங்கஜன் ராமநாதன்  10 ,986 அமெரிக்க டொலர்கள் 218
வேர்னன் குணரட்ண களுபத்திரணலாக லக்மலி சஞ்ஜீவனி குணரட்ண 7,818 அமெரிக்க டொலர்கள் 332
கனிஷ்க சேனாநாயக்க கனிஷ்க சேனாநாயக்க 7,009 அமெரிக்க டொலர்கள் 733
 ஹர்ஷ டி சில்வா  ஹர்ஷ டி சில்வா  6,838 அமெரிக்க டொலர்கள்  153
 சுனேத்திரா சமரகோன்  சுனேத்திரா சமரகோன்  6,355அமெரிக்க டொலர்கள்  225
 விஜயதாஸ ராஜபக் ஷ விஜயதாஸராஜபக்ஷ  5,372அமெரிக்க டொலர்கள்  219
நிபுண ரணவக்க  நிபுண ரணவக்க  4,424 அமெரிக்க டொலர்கள்  62
 ராஜபுத்திர வீரசிங்க  ஹசந்த ஹேமசந்திர  4,381அமெரிக்க டொலர்கள்  84
 அநுர பெர்ணான்டோ  இந்திக ஜயலத்  4,347மெரிக்க டொலர்கள்  98

ஜுன் மாதம் 19ம் திகதி முதல் ஜுலை 18ம்திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில் தேர்தல் அரசியல் பிரசாரங்களை முன்னெடுத்துள்ள முதல் 20 தரப்பினரும் தாம் பேஸ்புக்கில் பிரசுரித்துள்ள 2,072 விளம்பரங்களுக்காக 56,317  அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ள விடயம் இந்த facebook ad library report ஊடாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது

வடமாகாணத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் மே மாதம் முதல் இதுவரை செலவிட்டுள்ள தொகை என facebook ad library ல் பார்க்க முடிவது

மேல் மாகாணத்தைச்  சேர்ந்த வேட்பாளர்கள் மே மாதம் முதல் இதுவரை செலவிட்டுள்ள தொகை என facebook ad library ல் பார்க்க முடிவது

பேஸ்புக்கில் அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் விளம்பரங்கள் அனைத்தையும் இவ்வாறாக தகவல்களாக Facebook Ad Library Report ஐப் பயன்படுத்தி கண்டறியமுடியுமா என்றால் அதற்குப்பதில் இல்லை என்பதாகவே அமைகின்றது. அரசியல் வாதிகளின் ஆதரவாளார்கள் தமது பக்கங்களில் விளம்பரங்களைக் கொடுக்கும் போது அவற்றை ஒருமுகப்படுத்தி அறிக்கையில் காணமுடியாது. அதேபோன்று பேஸ்புக்கில் செய்திப்பக்கங்களை வைத்திருக்கும் தரப்பினர் பிரசுரிக்கும் விளம்பரங்களையும் இதில் கணக்கெடுக்கமுடியாது. அத்தகைய பக்கங்களை வைத்திருப்போர் பணத்தைப் பெற்றுக்கொண்டு தமது பக்கங்களில் விருப்பமான அரசியல்வாதிகளின் செய்திகளை Boost பண்ணினால் அவை அந்த அரசியல்வாதி செலவழித்ததாக பேஸ்புக் ல் காண்பிக்கமாட்டாது. இதில் இன்னமொரு விடயம் கவனத்தில் கொள்ளத்தக்கது. இலங்கையில் கிசுகிசு Gossip பேஸ்புக் பக்கங்கள் மிகவும் பிரபலமானவையாகும்.

சில பேஸ்புக் பக்கங்களுக்கு 2 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்கள் உள்ளனர். அதிலே ஒரு அரசியல் வாதிக்கு சார்பான அன்றேல் எதிரான செய்தியைப் பிரசுரித்தால் பேஸ்புக்கில் விளம்பரம் செய்யாமலே அதிகளவானவர்களைச் சென்றடைவதற்கான வாய்ப்புள்ளது. அந்தப்பக்கத்தில் ஒரு செய்தியை செய்தால் அது எவ்வளவு பேரைச் சென்றயும் என்று எண்ணிப்பார்க்க முடிகின்றதா?இவற்றை எல்லாம் இந்த தேர்தல் காலத்தில் உரிய தரப்பினர் அவதானத்தில் எடுப்பதற்கான வளங்கள் ஆளணி உள்ளதா என்பது கேள்விக்குரியதாகும்.

இதேபோன்று  தமது அரசியல் நலன்களுக்காக போலிச் செய்திகளையும் வெறுப்புப்பேச்சுக்களையும் பரப்புகின்றவர்கள் விடயத்தில் பேஸ்புக் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக என்பதும் கேள்விக்குரியதாக இருக்கின்றது

. விளம்பரங்களை பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தும் அளவிற்கு பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தில் பரப்பப்படும் போலிச் செய்திகள் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகள் விடயத்தில் நடவடிக்கை எடுப்பதில்லை என பரந்துபட்ட ரீதியில் குற்றச்சாட்டுக்கள் உள்ளதன் ஒரு பிரதிபலிப்பே முன்னணி நிறுவனங்கள் அதிலிருந்து விலகிக்கொண்டதற்கு காரணமாகும் என்பதை இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சுட்டிக்காட்டியிருந்தோம். ஆனால் இலங்கை ஏற்கனவே இதனால் பாதிக்கப்பட்ட நாடு என்பதற்கு பேஸ்புக்கிடமே சிறந்த உதாரணம் உள்ளது.

கடந்த மே மாதத்தில்  இலங்கையில் கடந்த 2018ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேறிய இனக் கலவரம் தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் மன்னிப்புக்கோரியிருந்தமையை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமானது

இலங்கையில் சமூக வலைத் தளங்களின் செயல்பாடுகள் பற்றிய விசாரணைகளின் அடிப்படையில் இலங்கையில் பாரிய வன்முறையைத் தூண்டுவதற்கு,தமது செயலியை (APP) முறையற்ற வகையில் பயன்படுத்தியமையும் ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் என்ற காரணத்திற்காகவே இவ்வாறு மன்னிப்புக்கோரியிருந்தது பேஸ்புக் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான ஒரு உள்ளக விசாரணையின் அடிப்படையிலேயே இந்த விடயம் வெளியாகியிருந்தது.

உள்ளூர் மொழித் திறன்களைக் கொண்ட மதிப்பீட்டாளர்களை பணியமர்த்தல், வெறுக்கத்தக்க பேச்சுகளை தானாகவே கண்டறிந்து, தவறான உள்ளடக்கத்தை பரப்புவதைத் தடுக்கும் தொழில்நுட்பத்தை செயல்படுத்துதல் மற்றும் உள்ளூர் சிவில் சமூகக் குழுக்களுடனான உறவை மேம்படுத்த முயற்சிப்பது  உட்பட எதிர்காலத்தில் தாம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண எடுத்துள்ள நடவடிக்கைகளையும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருந்திருந்தது.

இலங்கையில் உள்ள ஒரு சில குழுக்கள் பேஸ்புக் தளத்தை தவறாகப் பயன்படுத்துவது குறித்து கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளுக்கு பதிலளிக்கத் தவறியதை பேஸ்புக்கின் இலங்கை பற்றிய அறிக்கை விபரிப்பதாக ப்ளூம்பேர்க் இணையத்தளம் சுட்டிக்காட்டியிருந்தது.

இலங்கையில் பேஸ்புக்கிற்கு இந்த தேர்தல் காலத்தில் பெருமளவிற்கு விளம்பரங்கள் குவிகின்றபோதும் போலிச் செய்திகள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான அதன் நடவடிக்கை தொடர்பாக இன்னமும் திருப்தி கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது.  இலங்கை விடயத்தில் தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தாலும் உள்ளுர் மொழிகளில் வெளிவரும் பதிவுகளைக் கண்காணிக்க எத்தனை பேரை நியமித்துள்ளனர்? இதுவரை எத்தனை பதிவுகள் அகற்றப்பட்டுள்ளன?எத்தனை கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன?போன்ற விடயங்களை வெளிப்படையாக பேஸ்புக் வெளிப்படுத்தவில்லை என்பது சமூக ஊடக அவதானிகளின்  கவலையாக உள்ளது.

மேற்குலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பேஸ்புக் சம்பாதிக்கும் தொகை மிகவும் குறைவானது. இந்த நிலையில் முன்னணி சர்வதேச நிறுவனங்கள் தமது விளம்பரங்களை இடைநிறுத்தியதை அடுத்து பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க தூண்டப்படும் .அப்படி எடுக்கும் போது அதிகளவு சம்பாதிக்கும்  நாடுகளிலேயே அதன் அவதானமும் ஆளனி வளங்களும் அதிகமாக குவிக்கப்படவாய்ப்பு அதிகம் என சமூக ஊடக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையில் சமூக அக்கறையுள்ள ஊடகவியலாளர்களும்  பிரஜைகளும் பேஸ்புக் விடயத்தில் அவதானமாக இருப்போம்

அருண் ஆரோக்கியநாதர்