பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர் ராவய இதழுக்கு வழங்கிய நேர்காணல் – தமிழில் பிரியதர்ஷினி சிவராஜா!
இலங்கையில் பௌத்த பேரினவாதம் என்றுமில்லாத அளவுக்கு மேலோங்கியுள்ள இன்றைய நிலையில் நாட்டில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு படையினரைப் பயன்படுத்த வேண்டும் என்றவாறான கருத்துக்களை ஒரு சில பௌத்த பிக்குகளும் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் நாட்டில் ஜனநாயகத்தினையும், இனங்களுக்கிடையிலான நல்லுறவையும் பேண வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தும் பிக்குகளும் எம்மத்தியில் இல்லாமல் இல்லை. அவ்வாறானதொரு நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கும் பேராசிரியர் அகலகட சிறிசுமன தேரர் இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கிப் பயணிப்பது குறித்தும் சமகால அரசியல் குறித்தும் ராவய சிங்களப் பத்திரிகைக்கு அண்மையில் நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார். அந்த நேர்காணலின் தமிழாக்கம் இங்கு தரப்படுகின்றது. இவர் புத்தசாசன செயலணி குழுவின் இணை செயலாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.
கேள்வி:
அரசியல் செய்யவோ, அரசியல்வாதிகளுக்கு ஆதரவு தரவோ மதத் தலைமைப் பீடங்கள் மதகுருமார்களுக்கு அனுமதி அளிக்கவில்லை அல்லவா? அவ்வாறான ஓர் நிலையில் மதத் தலைவர்களும் அரசியல் செய்வதும் தவறு தானே?
பதில்:
நான்காவது மிகிந்து மன்னன் தனது அரசுப் பதவியை பிக்குகளின் கரங்களினால்; ஏற்றுக் கொண்டமை தொடர்பில் அவரது கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டுக்கு தேவையான நேரத்தில் அரசர்களை உருவாக்குவதற்கான அதிகாரம் பிக்குகளுக்கு அன்று இருந்தது. குறிப்பாக நாட்டில் வீழ்ச்சி நிலை ஏற்படும் போதும், பிற்போக்கான சூழல் ஏற்படும் போதும், ஆட்சியாளர்கள் இல்லாமல்போகும் போதும் பிக்குகள் உடனடியாக தலையிட்டு நாட்டில் சுமுக நிலையை ஏற்படுத்துவதற்காகவும், நாட்டைப் பாதுகாப்பதற்காகவும் நாட்டை ஆள்வதற்கு பொருத்தமான நபர்களை உருவாக்கிக் கொடுத்தனரே ஒழிய, இன்றைய நவீன காலத்தில் நாம் காண்பது போன்று அரசியல்வாதிகளை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் போக்கு அன்று இருக்கவில்லை. அந்த பணியானது வரலாற்றில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஓர் கடமையாகவே பிக்குகளினால் நிறைவேற்றப்படுகின்றது.
கேள்வி:
ஜனாதிபதி பிக்குகளுடன் நெருங்கிய தொடர்பினை பேணிக் கொண்டு, பல ஆலோசனைகளை பெறுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அரச நிர்வாகத்தில் பிக்குகளின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாடானது வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ஓர் செயற்பாடாக இருந்தாலும், தற்காலத்திற்கு அது பொருத்தமான செயலாக அமையும் என்று கூற முடியுமா?
பதில்:
தேவையற்ற விதத்தில் பிக்குகளை தமது ஆதரவாளர்களாக்கிக் கொண்டு நடத்திய அரசியல் செயற்பாடுகளே 2015ல் மகிந்த ராஜபக்ஷ தோல்வியுறுவதற்கு பிரதான காரணமாக அமைந்திருந்தது. தற்போது கோட்டாபய ராஜபக்ஷவும் தேவைக்கு அதிகமாக பிக்குகளை நெருக்கமாக்கிக் கொண்டு தேவைக்கு அதிகமாக ஆலோசனைகளையும், போதனைகளையும் பெறுவதனால் அவரது சகோதரருக்கு நேர்ந்த கதியே இவருக்கும் ஏற்படக் கூடும் என்பதே எனது கணிப்பாகும். அரசியலில் ஒரு குறிப்பிட்ட தரப்பினரை தமக்கு ஆதரவாக உருவாக்கி வைத்துக் கொண்டு அவர்களுடன் நெருக்கமாக இருப்பது என்றுமே நல்லதல்ல.
கேள்வி:
படையினரைக் கொலை செய்தது தொடர்பில் கருணா அம்மான் ஆற்றிய உரையின் அடிப்படையில் அவரை கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மத்தியில் பிக்குகள் பலரும் இருந்தனர். இது பற்றி உங்களின் கருத்து என்ன?
பதில்:
கருணா அம்மான் அவ்வாறான ஓர் கருத்தினைக் கூறுவதiனைத் தவிர்த்திருக்கலாம். அவ்வாறான கருத்து ஒன்றினை முன் வைத்ததன் மூலம் அரசியல் ரீதியில் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது. அவர் ஒரு அரசியல்வாதியாகவும், நாட்டின் எதிர்காலம் தொடர்பில் தீர்மானம் எடுக்கின்ற இடமான பாராளுமன்றத்திற்கு செல்ல விரும்புகின்ற ஒருவராகவும், அம்பாறை, திகாமடுல்ல பிரதேசங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பிலும், எதிர்காலத்தில் அப்பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பிலும் தான் மக்களிடம் கருத்துக்களை முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் இங்கு சந்தர்ப்பவாத அரசியலை நடத்தியிருக்கின்றார். எவ்வாறாயினும் நாம்; இந்த விடயம் பற்றி எந்தவிதமான முடிவுகளையும் எடுக்க முடியாது. அதற்கு நீதித்துறை உள்ளது. அவர்களிடம் முடிவினை எடுக்க விட்டு விட வேண்டுமே ஒழிய, தேர்தலுக்காக நடத்தப்படும் அரசியலின் ஒரு பகுதியாக இவ்விடயத்தினை மாற்றிக் கொள்வது நல்லதல்ல.
கேள்வி:
கருணாவுக்கு ஆயுதம் வழங்கியது பிரேமதாசா என்றும், கருணாவின் வரலாறு பற்றி அனைவருக்கும் தெரியும் என்றும் கருணாவை பிரதமர் நியாயப்படுத்தியுள்ளார் அல்லவா? பிரதமர் அவ்வாறு செயற்பட்டால் நீதித்துறையினராலும், பொலிசாராலும் சுயாதீனமாக செயற்பட முடியுமா?
பதில்:
நீதித்துறையும், பொலிசாரும் சுயாதீனமாக செயற்படுவார்களாயின் பிரதமர் என்ன கூறினாலும் அவர்களுக்கு அதனால் பிரச்சினை இல்லை தானே? பிரேமதசா வழங்கிய ஆயுதங்களினால் தான் அந்த படையினரைக் கொன்றனர் என்று கூறி அதனூடாக அரசியல் இலாபம் தேடவே பிரதமர் முயற்சித்துள்ளார். இலங்கை தேர்தல் மேடைகளில் இவையெல்லாம் மிகவும் சகஜமான விடயங்கள்.
கேள்வி:
இவர்கள் இவ்வாறு முன்வைத்துப் பேசிய விடயங்களுக்கு அப்பால் அவர்களின் உண்மையான உணர்வே இங்கு வெளிப்பட்டுள்ளது. கொலை செய்வதில் உள்ள வீரம் பற்றிப் பேசி கருணா போன்றவர்கள் வடக்கு கிழக்கில் இனவாதத்தினைப் போஷித்துக் கொண்டு பாராளுமன்றம் வர துடிக்கின்றனர். தெற்கில் ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகளும், கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகளும் அதே பணியை வெவ்வேறு வடிவங்களில் முன்னெடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு பார்க்கும் போது இந்த பொதுத் தேர்தலானது சிறந்த மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் தேர்தல் என்பதனை விட, பாராளுமன்றம் அனுப்பக் கூடிய சிறந்த கொலைக்காரர்களைத் தெரிவு செய்யும் தேர்தலாக மாறியிருக்கின்றது அல்லவா?
பதில்:
தமிழ் மக்கள் நாட்டின் அரைப்பகுதியைக் கேட்டு யுத்தம் செய்யும் நிலைப்பாட்டை எடுக்கும் முன்பே அவர்களுக்கு இந்நாட்டில் ஏதோ ஒரு வகையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மொழிப் பிரச்சினை போன்று ஆரம்பத்தில் இருந்த சிற் சில பிரச்சினைகள் தீர்க்கப்படாமையினால் பின்னர் அது தீவிரவாதமாக மாறியது. அந்த தீவிரவாதத்தினை அடக்கும் செயல் தான் பின்பு யுத்தமாக மாறியது. இந்த நிலையை மீண்டும் உருவாக்குவதற்கு சிங்களவர்களோ, தமிழர்களோ அல்லது வேறு எவராயினும் முயற்சிப்பார்களாயின் உண்மையில் அது பழிவாங்கும் உணர்வினைப் பரிமாறிக் கொள்ளும் செயலாகவே அமையும். இந்த வகையில் போரை நினைவு கூரும் போர்க்கால நினைவுச் சின்னங்கள் எதுவும் தேவையில்லை என்று நான் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகின்றேன். இந்த போர்க்கால நினைவுச் சின்னங்களினால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவர். ஆனால் இன்னும் நூறு, இருநூறு ஆண்டுகள் கடந்த பின்பு மறு தரப்பில் உருவாகும் சந்ததியானது எமது இனத்தினை அழிக்க எடுத்த முயற்சிகளின் விளைவாகக் கட்டியெழுப்பப்பட்ட சின்னங்களே இவை என்று இந்த நினைவுச் சின்னங்களைக் கருதினால் என்ன நடக்கும்? போர் தொடர்பான நினைவுச் சின்னங்கள் உருவாக்கம், பாரியளவிலான யுத்த தின கொண்டாட்டங்கள் என்பன கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இப்பொழுது மீண்டும் அவை எழுச்சிப் பெற்றுள்ளன. பாராளுமன்றத்திலும் போர் நினைவு ஸ்தூபிகள் தேவையில்லை என்பதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதே எனது எண்ணமாகும்.
கேள்வி:
அரசாங்கம் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினை தருமாறு கேட்கின்றது. அவ்வாறான பலம் கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நாட்டில் அராஜகமும், அடக்குமுறையும் தலைத்தூக்கியிருந்தன என்பதனை கடந்த கால அனுபவங்களில் நாங்கள் அறிவோம். இவ்வாறான பின்னணியில் மக்கள் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினை வழங்க தான் வேண்டுமா?
பதில்:
கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் நிறைவேற்று அதிகாரத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் இடையில் ஏற்பட்ட கடும் மோதல் போன்றதொரு நெருக்கடி நிலை மீண்டும் ஏற்படாதிருக்கவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகின்றது. 19வது திருத்தத்தில் ஏற்பட்ட தவறுகளை திருத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்காகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் வேண்டும் என்றும் கேட்கப்படுகின்றது என்று ஒரு சிலர் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள். ஆனால் இவற்றுக்கெல்லாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவையற்றது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இந்த பிரச்சினையை விளங்கிக் கொண்டுள்ளதனால் இரு தரப்பினரும் ஒன்றிணைந்து அவ்வாறான முக்கியமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற அதீதமான பலம் அவசியம் இல்லை.
கேள்வி:
சிவில் சேவையின் முக்கியமான பதவிகளுக்கும் இராணுவ அதிகாரிகளை நியமித்து, பாராளுமன்றத்திலும் இராணுவ பிரதிநிதித்துவத்தினை ஏற்படுத்திக் கொள்ளவென ஓய்வுப் பெற்ற படை அதிகாரிகளை தேர்தலில் போட்டியிட செய்து, நாட்டை இராணுவ ஆட்சிக்குள் தள்ளும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் அமர்த்துவதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியது இவ்வாறானதொரு பாதையில் நாட்டைக் கொண்டு செல்வதற்காகவா?
பதில்:
கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ மனநிலையுடன் நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு வந்தவர். அவர் இதற்கு முன்பு இலங்கை அரசியலில் ஆகக் குறைந்தது ஒரு பிரதேச சபையில் கூட உறுப்பினராகாமல் ஒரே தடவையில் ஜனாதிபதி பதவியைப் பெற்றவர். அவர் பாதுகாப்பு செயலராக கடமையாற்றிய போது தமக்கு பொறுப்பளிக்கப்பட்ட நிறுவனங்களில் ஓரளவு முன்னேற்ற நிலையை அடைவதற்கு படையினரையும் சிவில் பாதுகாப்பு படையணியினரையும் பயன்படுத்தியது போன்று படையினரின் ஒத்துழைப்புடன் இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று அவர் சிந்திப்பதாக இருக்கலாம். கோவிட் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அவர் மீண்டும் சாதகமான ஓர் நிலையை வெளிப்படுத்தியிருக்கின்றார். ஆனால் எல்லா செயற்பாடுகளுக்கும் படையினரை ஈடுபடுத்துவதனை நான் அனுமதிக்க மாட்டேன். பரந்தளவில் இல்லாவிடினும், இலங்கை ஓரளவுக்கு இராணுவமயமாகி வருகின்றது என்ற கருத்து தற்போது உலகம் முழுவதும் சென்றடைந்துள்ள நிலையில் பொதுத்தேர்தலின் பின்பு பதவிக்கு வரும் அரசாங்கமும் இவ்வாறானதொரு பாதையில் நாட்டை வழிநடத்துமாயின், அது நாம் எதிர்பார்க்காத விதத்திலான பெரும் துரதிருஷ்டவசமானதொரு நிலையையே நாட்டில் ஏற்படுத்தும்.
கேள்வி:
ஆனால் இப்பொழுதும் அவ்வாறு தானே நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. பாடசாலை அதிபர் பதவியும் இராணுவ பதவியாக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நாட்களில் பல்கலைக்கழக துணை வேந்தர், பீடாதிபதி போன்ற பதவிகளுக்கும் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட மாட்டார்கள் என்று கூற முடியாது தானே?
பதில்:
இதற்கு தற்போது இலங்கையின் நிர்வாக சேவையில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்வரும் காலத்தில் இந்த எதிர்ப்பு மேலும் தீவிரமடையக் கூடும். அதிகாரிகளிடம் குறைகள் இருப்பின் அவற்றை சரிப்படுத்த அவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும். அவ்வாறன்றி எல்லா வேலைகளையும் படையினரைக் கொண்டு செய்விக்க முயன்றால் சர்வதேசத்தில் எமக்கு நல்ல பெயர் ஒருபோதும் கிடைக்காது. அரச நிர்வாகம், கல்வி என்பன வேறுபட்ட துறைகளாகும். இராணுவம் என்பது வேறுபட்ட துறையாகும். இவற்றை ஒன்றுப்படுத்தி ஒரு இடத்திற்கு கொண்டு வருவது இலகுவான விடயமல்ல. இலங்கையின் நிர்வாக சேவையில் உயர்ந்த இடத்தினை அடைவதற்கு பெற வேண்டிய எவ்வளவோ கல்வித் தகுதிகள் உள்ளன. அவ்வாறு தகுதி உள்ள அதிகாரிகளை ஒதுக்கிவிட்டு அதற்கு பதிலாக இராணுவ அதிகாரிகளை நியமிப்பது என்பது மிகவும் மோசமான விடயமாகும்.
கேள்வி:
அனைத்து விவகாரங்களையும் படையினரிடம் பொறுப்பளிக்க வேண்டும் என்று சில பிக்குகள் கூறுகின்றனர். சகலருக்கும் இராணுவப் பயிற்சி வழங்கப்படல் வேண்டும். பாடசாலைக் கல்வி நிர்வாகத்தினை படையினரின் பொறுப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். முஸ்லிம் பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்கு மியான்மரைப் போன்றதொரு இராணுவ ஆட்சியினை நோக்கி நாட்டை கொண்டு செல்லும் அபிலாஷை பிக்குகள் சமூகத்தினரிடம் காணப்படுகின்றதா?
பதில்:
ஓரிருவர் அவ்வாறான எண்ணத்தினைக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் ஒரு நாடு என்ற ரீதியில் விடயங்களை குறுகிய மனப்பான்மையுடன் அணுகி, அதற்கு சார்பான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டு அரசியல் தலைவர்களுக்கு தவறான ஆலோசனைகள்; வழங்குபவர்கள், பின்னர் அதன் மோசமான விளைவுகளை அனுபவிப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதனை கூறிக் கொள்ள விரும்புகின்றேன். நாடு என்ற அடிப்படையில் எம்மால் தனித்து பயணிக்க முடியாது. கடந்த இருப்பத்தைந்து, முப்பது ஆண்டுகளை எடுத்து நோக்கும் போது எமக்கு இவ்விடயம் நன்கு விளங்குகின்றது. அதனால் யார் என்ன சொன்னாலும் நாட்டின் தலைவர் என்பவர் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து நாட்டை முன்னோக்கி வழி நடத்துகின்ற தூரநோக்கு கொண்டவராக இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் அனைவருக்கும் இராணுவப் பயிற்சிகளை வழங்கி, எல்லா இடங்களிலும் படையினரை நிறுத்தி வேலை செய்ய முயன்றால் நாடு மியான்மர் நிலையை அடைந்துவி;டும். இராணுவம் மியான்மரை ஆட்சி செய்த கடந்த 25 ஆண்டுகளில் அந் நாடு பின்னோக்கி சென்றது மட்டுமல்லாமல் நாடு முழுமையாக வீழ்ச்சியை எதிர்கொண்டது. எம்மைப் போன்று ஜனநாயகத்தினை மதிக்கும் நாட்டில் அவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்துவதோ அல்லது ஏற்படுத்த அனுமதி அளிப்பதோ மிகவும் துரதிருஷ்டவசமானது. அவ்வாறான நிலைமைக்கு சென்றால் அடுத்த ஐந்தாண்டுகளின் இறுதியில் மக்கள் மிகவும் கடுமையான முறையில் அதற்கு பதிலடி கொடுப்பார்கள்.
கேள்வி:
தெவனகல மற்றும் பொத்துவில் கடல் விகாரை தொடர்பான நிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையானது முஸ்லிம் மக்களுக்குரிய காணிகளை விகாரைகளுக்கென கையகப்படுத்தப்பட மேற்கொள்ளப்படும் முயற்சியா என்ற சந்தேகத்தினை ஒரு சிலர் முன்வைக்கின்றனர். இவ்விடயம் குறித்து உங்கள் அவதானம் என்ன?
பதில்:
தெவனகல, மற்றும் பொத்துவில் விகாரை என்பன உண்மையில் வரலாற்று ரீதியில் தொல்லியல் முக்கியத்துவம் மிக்க இடங்கள் ஆகும். இவற்றுடன் இணைந்த பெருமளவான நிலப்பகுதி பண்டைய காலத்தில் அங்கு இருந்தன. யார் யாரோ செய்த தவறுகளினால் பிற்காலத்தில் அங்கு மக்கள் வந்து வாழ ஆரம்பித்தனர். இப்பொழுது அந்த நிலப்பகுதிக்குரிய காணிகள் தொல்லியல் முக்கியத்துவம் மிக்க பகுதிகளுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை காரணமாக வைத்து தேவையற்ற மோதல்களை ஏற்படுத்தக் கூடாது. இந்த இடங்களுக்கு சொந்தமான பாரியளவிலான நிலங்களை மீண்டும் கையகப்படுத்த முயன்றால் அது பெரும் பிரச்சினையாகி விடும். அதனால் தொல்லியல் முக்கியத்துவம் மிக்க தற்போதுள்ள நிலப் பகுதியினை சரியாகப் பிரித்துக் கொண்டு அந்த பகுதிகளை சேதமாக்காத வகையில் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
ராவய 2020-07-05 தமிழில்: பிரியதர்ஷினி சிவராஜா

