புதினங்களின் சங்கமம்

சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் 170 பேருக்கு சிகை அலங்காரம் செய்த கைதிக்கு கொரோனா!

கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலை தொடர்பில் இலங்கையர்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலை ஏற்பட்டுள்ள நிலையில் வெலிக்கடைச் சிறையில் சிகை அலங்கார பிரிவில் பணியாற்றிய கைதியால் சமூகப் பரம்பல் அதிகரித்திருக்குமா என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த கைதி சிறைச்சாலையில் பணியாற்றும் 170 சிறைச்சாலை உத்தியோகத்தகர்களுக்கு சிகை அலங்காரப் பணி மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அவர்களை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு சிறைச்சாலை பொது சுகாதார பரிசோதகர்கள் தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கொவிட்-19 தொற்றுறுதியான கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் ஆலோசகராக செயற்பட்ட 27 வயதுடைய பெண்ணுடன் சம்பந்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்டு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 29 பேருக்கு இன்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் முடிவுகள் இன்று பிற்பகல் வேளையில் கிடைக்கப்பெறவுள்ளது.

இதேநேரம், அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ந்தும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்றைய தினம் இறுதியாக தொற்றுறுதியான மூன்று பேரும், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் பணிக்குழு உறுப்பினராக செயற்பட்ட ஒருவரும், அவரின் பிள்ளைகள் இருவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களுடன் சம்பந்தப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதேச சுகதார வைத்திய அதிகாரி எச்.ஏ.அபேரத்ன தெரிவித்துள்ளார்.