15 பவுண் நகையைத் திருடி முச்சக்கரவண்டி வாங்கிய காதலர்கள்!
15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 பவுண் நகையைக் திருடியதாக யுவதி ஒருவரையும் அவரது காதலரையும் மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மஸ்கெலியா நகரில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் பணிபுரிந்த யுவதி அந்த நிறுவன உரிமையாளரின் மனைவியுடைய தங்க மாலையைக் திருடிச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் நேற்று 3 ஆம் திகதி மாலை குறித்த யுவதியும் அவரது காதலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியும் காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞருமாவர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, மஸ்கெலியா நகரில் இயங்கி வரும் தங்க நகை அடகு பிடிக்கும் நிறுவனமொன்றில் 4 இலட்சம் ரூபாய்க்கு அடகு வைத்துள்ளதாகவும் அந்த பணத்துடன் மேலதிகமாக 30000 ரூபாய் சேர்த்து 4 இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய்க்கு பிற்கொடுப்பனவு முறையில் முச்சக்கர வண்டி ஒன்றைப் பெற்றுள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அத்துடன் சந்தேக நபரின் வாக்கு மூலத்திற்கு அமைய காட்மோர் தோட்ட கல்கந்தை பிரிவைச் சேர்ந்த 20 வயதுடைய நபரிடமிருந்து முச்சக்கர வண்டியை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரையும் இரண்டு மணிநேரத்திற்குள் கைது செய்த நிலையில் இன்று 4ஆம் திகதியன்று ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

