வடக்கில் தற்காலிக இணைப்புப் பெற்ற ஆசிரியர்களின் இடமாற்றம் இரத்து!
வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட ஆசிரியர்கள் பெற்ற தற்காலிக இணைப்புக்கள் உட்பட அனைத்து நடவடிக்கைகளும் பாடசாலை ஆரம்பிக்கும் தினமான யூன் 29 வரை மட்டுமே செல்லுபடியாகும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் வன்னிப் பகுதியில் பணியாற்றிய நிலையில் பல்வேறு காரணங்களிற்காக தற்காலிக இணைப்பை பெற்ற நிலையில் இணைப்புக் காலம் முடிவடைந்தவர்கள், விடுமுறை பெற்றவர்களின் நிலமை தொடர்பில் ஏப்பிரல் மாதம் சுட்டுக்காட்டியபோது அப்போதைய நிலமையை கருத்தில் கொண்டு மே முதலாம் திகதியில் இருந்து மேலும் இரண்டு மாதங்களிற்கு அனுமதிக்கப்பட்டது.
இவ்வாறு வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட ஆசிரியர்கள் பலர் தற்காலிகமாக பிரசவ காலம் , மருத்துவம் உள்ளிட்ட பல தேவைகளிற்காக ஏனைய மாவட்டத்திற்கு இணைப்பு பெற்று பணியாற்றிய நிலையில் அக் கால எல்லை முடிவடைந்த பட்சத்தில் மேலும் இரு மாதங்கள் அனைத்து ஆசிரியர்கள் உத்தியோகத்தர்களிற்கும் நீடிக்கப்பட்டது.
இதனால் இணைப்பைப் பெற்று பணியாற்றிய பாடசாலைகளிலேயே ஒப்பமிட சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.
இதேநேரம் சம்பளம் அற்ற விடுமுறைகளை பெற்று வெளிநாடுகளிற்கு சென்றவர்கள் பணிக்கு திரும்ப முடியாத நிலையில் அவர்களிற்கும் மேலும் இரு மாதங்கள் சம்பளம் அற்ற விடுமுறைக் காலம் முடிவடையும்போது மீள் பரிசீலனை செய்யப்படும் என்றார்.

