புலனாய்வு பிரிவினர் பல வருடங்களாக வேண்டுகோள் விடுத்த விடயம் தற்போது இடம்பெறுகின்றது
பொதுமக்களை அச்சுறுத்துவதற்கு மிரட்டுவதற்கு பயன்படுத்துவதற்காக அவர்களின் தனிப்பட்ட தகவல்களை அரசாங்கம் சேகரிக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சிரால் லக்திலக குற்றம்சாட்டியுள்ளார். பொலிஸார் பொதுமக்களின் தகவல்களை சேகரிப்பதும் அவர்களுடன் இனந்தெரியாத நபர்கள் காணப்படுவதும் பல வருடங்களாக நாட்டின் புலனாய்வு அமைப்புகள் முன்னெடுக்க விரும்பிய திட்டத்தின் ஒரு பகுதி என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது சேகரிக்கப்படும் தகவல்களை பயன்படுத்தி மக்களை தாங்கள் விரும்பியபடி செயற்படுமாறு பலவந்தப்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தினை விமர்சிப்பவர்களை இந்த தரவுகளை பயன்படுத்தி மௌனமாக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது நாட்டின் ஜனநாயகத்திற்கான மரண அடியாக விளங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அலுவலகத்தில் பணியாற்றியவேளை புலனாய்வு பிரிவினர் இந்த திட்டத்தினை முன்னெடுக்க முயல்வது எனக்கு தெரியவந்தது என சிரால் லக்திலக குற்றம்சாட்டியுள்ளார். உயர்மட்டத்தில் பெருமளவிற்கு படை அதிகாரிகளையும் புலனாய்வு அதிகாரிகளையும் கொண்ட தற்போதைய அரசாங்கம் நிச்சயம் இதனை செய்யும் என அவர் எச்சரித்துள்ளார்.
