முகமாலையில் கண்ணி வெடி வெடித்து இளம் தாய் படுகாயம்!! (Photo)
யாழ்ப்பாணம் முகமாலையில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இளம்
தாயார் உள்பட பெண்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சேர்க்கப்பட்டுள்ளனர்.
முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்களே இந்த
வெடிவிபத்தில் படுகாயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இன்று காலை முகமாலை பகுதியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கும் பகுதியில்
கண்ணிவெடி அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஏதிர்பாராத விதமாக புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி ஒன்று வெடித்து சிதறியுள்ளது.
இதில் பரந்தனை சேர்ந்த 6 வயதுப் பிள்ளையின் தாயாரான குனேந்திரன் ரேணுகா (வயது-25)
என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இவரிற்கு அருகில் நின்ற இன்னொரு பெண் உத்தியோகத்தர் மேகலதா என்பவரும் காயங்களுக்கு
உள்ளாகியுள்ளார்.
சம்பவத்தை அடுத்து இருவரும் ஆரம்ப முதலுதவிகளிற்கு பின்னர் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவருக்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டது.
முகம் மற்றும் நெஞ்சு பகுதிகளை பாதுகாக்கவே கவசங்கள் அணியப்படுவதாகவும் கைகளை
பாதுகாக்க போதுமான உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதில்லை எனவும் விசாரணைகளில்
தெரியவருகின்றது.