உழவு இயந்திரம் புரண்டு சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!! 4 பேர் படுகாயம்!! துணுக்காயில் சம்பவம்!!
முல்லைத்தீவு- துணுக்காய் கல்விளான் பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் வடிகாலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இளம் குடும்பஸ்த்தா் ஒருவா் உயிாிழந்துள்ளாா்.
அத்துடன், நான்குபேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு பழைய முறிகண்டி பகுதியிலிருந்து மன்னார் இலுப்பைக்கடவைக்கு சென்ற உழவு இயந்திரமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
துணுக்காய் சந்தியிலிருந்து கல்விளான் சந்தியூடாக இலுப்பைக்கடவை நோக்கிப்பயணித்த மேற்படி உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கல்விளான் சந்திப்பகுதியில் உழவு இயந்திரப்பெட்டி தடம் புரண்டுள்ளது.
இதில் பெட்டியில் இருந்த பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை இதில் படுகாயமடைந்த நால்வர் உடனடியாக மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு இரண்டு பேர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், இரண்டுபேர் மல்லாவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தின் போது பழைய முறிகண்டியைச்சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான புவனேஸ்வரநாயகம் நிசாந்தன் (வய 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மல்லாவி வைத்தியசாலையிலிருந்து மரண விசாரணைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.