புதினங்களின் சங்கமம்

இலங்கையில் சமூகத் தொற்றாக மாறும் கொரோனா: ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இதனால் கொழும்பு மாவட்டத்தில் சமூகத் தொற்றுப் பரவல் ஆரம்பமாகியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ள நிலையில், கொழும்பு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் பலர் கண்டறியப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் மையம் மற்றும் முடக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வெளியே கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தருக்கு (மேட்ரன்) கொரோனா தொற்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோன்று இராஜகிரிய பிரதேசத்திலும் ஓட்டோ சாரதி ஒருவர் கொரோனா தொற்றுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மோதர மாடி வீட்டிலும் கொரோனா தொற்றுடன் 62 வயதான பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர்களுக்கு தொற்று ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இதனால் கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூகத் தொற்றாக மாறியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதேவேளை, இன்று மரனமான 52 வயதான பெண் ஒரு மாத காலமாக கொரோனாத் தொற்றுக்கு இலக்கான நிலையில் வீட்டுக்குள் முடங்கியிருந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக அவர் இரண்டு நாட்களுக்கு முன்னரே கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனாத் தொற்று அடையாளம் காணப்பட்டது.

இதனையடுத்து அவர் ஐ.டி.எச். மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் நோய் நிலை தீவிரமடைந்ததால் அவருக்கு எந்த சிகிக்சையும் பலனளிக்கவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்தார்.

இவருடன் தொடர்பு பட்ட 15 குடியிருப்பாளர்கள் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.