புதினங்களின் சங்கமம்

பருத்தித்துறையில் கடை உடைப்பு: உழுந்து மூடைகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை!

யாழ். வடமராட்சி பருத்தித்துறை நகரில் உள்ள கடைகள் உடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பலால் கடையொன்றில் இருந்து உழுந்து மூடைகள் உள்ளிட்ட சுமார் 3 இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

பருத்தித்துறை நகரில் உள்ள ‘நாதன் ஸ்ரோர்ஸ்’ பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு உழுந்து மூடைகள் உள்ளிட்ட சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

வழமைபோன்று இன்று ஞாயிற்றுக் கிழமை (நவ-01) காலையில் கடையை திறந்து வியாபார நடவடிக்கையை ஆரம்பிக்க முற்பட்ட போதே கடை உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையஜடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து குறித்த கடை உரிமையாளரால் பருத்தித்துறை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அருவி இணையத்தின் வடமராட்சி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த கடையின் பின் பக்கமாக பூட்டப்பட்ட கதவின் குறித்த பகுதியை உடைத்து அவ்வழியூடாக கையை விட்டு உள்பக்கமாக போடப்பட்டிருந்த தடுப்புச் சட்டகத்தை அகற்றியுள்ள திருடர்கள், அலவாங்கு கொண்டு பூட்டை உடைத்து உள்நுழைந்துள்ளனர்.

இவ்வாறு கதவை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் கடையில் இருந்த பொருட்களை எடுத்து சுமார் பத்து அடி உயரமுள்ள சுவரேறி கொண்டுசென்றுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இக்கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் பயண்படுத்திய கையுறை ஒன்றும் கடை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

இக்கொள்ளை முயற்சியில் கடையில் இருந்த உழுத்தம் பருப்பு மூடை இரண்டு, ஏழு மூடை மா, பீடி மற்றும் சிகரட் பண்டல்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றிருப்பதாகவும், குறித்த பொருட்களின் பெறுமதி சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியானவை எனவும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளதாக அருவி இணையத்தின் வடமராட்சி செய்தியாளர் மேலும் தெரிவித்திருந்தார்.

இக்கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் அருகில் இருந்த தொலைபேசி திருத்தம் மற்றும் விற்பனை நிலையத்தையும் உடைக்க முற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடையின் பின் பக்கமாக உள்ள கதவினையும் முன்னைய கடை பாணியில் உடைக்க முற்பட்டுள்ள போதிலும் முயற்சி கைகூடாத நிலையில் திருடர்கள் சென்றுள்ளமைக்கான தடயங்கள் காணப்படுகின்றதாகலும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.